தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • முதன்மைச்சான்று

    முனைவர் வீ.செல்வகுமார்
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

    முதன்மைச் சான்று ஆங்கிலத்தில் "Primary Source" எனப்படும். பழங்கால மக்களால் உருவாக்கப்பட்ட தொல்பொருள்கள், எழுதப்பட்ட ஆவணங்கள் மற்றும் இலக்கியங்கள் ஆகியவை முதன்மைச் சான்றுகள் ஆகும்.

    சான்றுகள், வரலாறு எழுத மிகவும் அவசியமானவையாகும். கதை எழுதுவதற்குச் சான்றுகள் அவசியமில்லை. ஆனால், சான்றுகள் இல்லாமல் வரலாறு எழுதமுடியாது. சான்று என்ற சொல் சமஸ்கிருதத்தில் "ஆதாரம்," "மூலம்" எனப்படும். ஓர் ஆற்றிற்கு அது உற்பத்தியாகும் இடம் அல்லது பகுதி, அதாவது "மூலம்" எவ்வாறு அவசியமோ, அது போல வரலாற்றிற்குச் சான்றுகள் அவசியமாகும். வரலாற்றில் ஒவ்வொரு கூற்றும் சான்றுகளின் அடிப்படையிலேயே அமைய வேண்டும்.

    பொதுவாகச் சான்றுகள் முதல் நிலைச் (முதன்மைச்) சான்றுகள், இரண்டாம் நிலைச் சான்றுகள் என இரண்டாகப் பிரிக்கப்படும்.

    முதன்மைச் சான்று

    ஒரு குறிப்பிட்ட காலத்தில் அக்கால மக்களால் உருவாக்கப்பட்ட சான்றுகள் முதன்மைச் சான்றுகள் எனப்படும். தொல்லியல் இடங்கள், தொல்பொருள்கள் (கருவிகள், பானை ஓடுகள்), வரலாற்றுக் குறிப்புகள், இலக்கியங்கள், பழங்காலக் கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் மற்றும் தாள் ஆவணங்கள் ஆகியவை இதில் அடங்கும்.

    அயல் நாட்டவர் குறிப்புகள்

    அயல் நாட்டவர் எழுதி வைத்தவைகளையும் முதன்மைச் சான்றுகள் எனலாம். எ.கா. தமிழக உரோமானிய வணிகத் தொடர்புகளை ஆராய உதவும் 'எரித்திரியக்கடலின் பெரிப்லஸ்', ’வியன்னா தாள்’ ஆவணம் ஆகியவை. ஆனால், இவற்றில் உள்ள தகவல்களில் சில சிக்கல்கள் இருப்பதற்கு வாய்ப்புள்ளது. எழுதுபவர் பிறர் சொல்வதைக்கேட்டு எழுதும்போதோ, பிற பண்பாடு, மொழி ஆகியவற்றைப் புரிந்து கொள்ளாமல் எழுதும் போதோ எழுதப்பட்ட செய்திகளில் பிழை ஏற்பட வாய்ப்புள்ளது.

    இரண்டாம் நிலைச் சான்றுகள்

    பழங்கால வரலாற்றைக் குறித்துப் பிற்காலத்தில் எழுதப்பட்ட வரலாற்று நூல்கள், கட்டுரைகள் ஆகியவை இரண்டாம் நிலைச் சான்றுகள் எனப்படும்.

    எ.கா. பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி அவர்களின் Cholas என்ற ஆங்கில நூல் மற்றும் கே.கே. பிள்ளை அவர்களால் எழுதப்பட்ட ‘தமிழக வரலாறு’ என்ற தமிழ் நூல்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:02:08(இந்திய நேரம்)