தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • கும்பகோணம்

  முனைவர் வீ.செல்வகுமார்
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

  சங்க இலக்கியங்களில் வரும் ‘குடமூக்கு’ என்ற இடமாக அடையாளப்படுத்தப்படும் கும்பகோணம், தமிழ்நாட்டின் கலை மற்றும் பண்பாட்டின் மையமாக விளங்குகிறது. இதுவும் இதன் அருகிலுள்ள பழையாறையும் சோழர்களின் இரண்டாம் தலைநகராக விளங்கின. இது கோவில் நகரம் என்று அழைக்கப்படுகின்றது.

  அமைவிடம்

  தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கும்பகோணம், தஞ்சைக்கு வடகிழக்கே 40 கி.மீ தூரத்தில் உள்ளது. இது காவிரியாறு மற்றும் அரிசிலாற்றுக்கு (அரசலாறு) இடைப்பட்ட பகுதியில் இருக்கும் ஓர் அழகிய ஊராகும்.

  சிறப்பு

  கும்பகோணத்தில் எல்லா மூலைகளிலும் ஏதாவது ஒரு கோயில் இருக்கும். இங்குள்ள பெரும்பாலான கோயில்கள் வரலாற்றுச் சிறப்பு பெற்றவை.

  கும்பகோணம் என்ற பெயர் ‘குடமூக்கு’ என்பதின் சமஸ்கிருத மொழிபெயர்ப்பாகும். (கும்பம் = குட + மூக்கு = கோணம்) இது குடந்தை என்றும் அழைக்கப் பெறுகின்றது.

  இங்கு சோழர் காலக் கோவில்கள் பல உள்ளன. சோழர், பாண்டியர், விஜயநகர நாயக்கர் கல்வெட்டுக்களும் உள்ளன. கதைகளின்படி அமுதம் விழுந்த இடமாகக் கருதப்படும் மகாமகக்குளத்தில் 12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழா ஒரு சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியாகும். இந்தக் குளத்தில் நான்கு திசைகளிலும் படிக்கட்டுகள் அமைக்கப்பெற்றுள்ளன. குளத்தைச் சுற்றி 16 மகாதானங்களைக் குறிக்கும் 16 மண்டபங்கள் (Pavillion) அமைந்துள்ளன.

  குடந்தையிலுள்ள காசி விஸ்வநாதர் கோவிலில், இந்தியாவின் ஒன்பது புனித ஆறுகளுக்கான சன்னதிகள் உள்ளன. காவிரி ஆறுக்கான சன்னிதி நடுவில் அமைந்துள்ளது.

  ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நவராத்திரி மண்டபத்தில் வடிக்கப்பட்ட 27 விண்மீன்களும், (நக்ஷத்திரங்களும்) 12 இராசிகளும், சிற்பக்கலைக்குச் சிறந்த சான்றாக உள்ளன.

  பன்னிரண்டு தளம் கொண்ட கோபுரத்தையுடைய சாரங்கபாணி கோவில் மிகச்சிறப்பான விஷ்ணுத் தலமாகும். இதில் பல்லவர் காலப் பாணியில் ஒரு தூண் உள்ளது.

  ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நாகேஸ்வரசாமி கோவிலில் உன்னதமான சோழர் காலச் சிற்பங்கள் அழகாக வடிக்கப்பட்டுள்ளன.

  இராமசாமி கோவிலில் இராமாயணக் காட்சிகள் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளன. இங்கு நாயக்கர் காலச் சிற்பங்களும் உள்ளன. கும்பகோணத்தைச் சுற்றியுள்ள ஊர்களில் பல சங்ககால ஊர்களும் வரலாற்றுச் சிறப்பு பெற்ற கோவில்களும் உள்ளன. கணித மேதை பிறந்த, படித்த ஊராகும் இது

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:00:20(இந்திய நேரம்)