தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

செஞ்சி நாயக்கர் காசுகள்

 • செஞ்சி நாயக்கர் காசுகள்

  முனைவர் மா.பவானி
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

  செஞ்சி நாயக்கர்கள் (பொ.ஆ. 1600 – பொ.ஆ. 1700):

  கையில் முகம் பார்க்கும்
  கண்ணாடியுடன் இடம்புறம்
  திரும்மியிருக்கும் மங்கை
  கிட்டப்பநாயக்கர்

  செஞ்சிப் பகுதியை ஆட்சி புரிந்த நாயக்க மன்னர்களே செஞ்சி நாயக்கர் எனப்பட்டனர். 1526இல் செஞ்சிக்கு வையப்பநாயக்கன் என்பவர் நாயக்கராக கிருஷ்ணதேவராயரால் நியமிக்கப்பட்டார். இவர்களது ஆட்சி வடக்கே பாலாறு முதல் தெற்கே கொள்ளிடம் வரை கடற்கரை ஓரமாகப் பரவியிருந்தது. குமாரகம்பணனின் கீழ் தொண்டை மண்டலத்தின் தலைநகராகச் செஞ்சி விளங்கியது. வையப்பநாயக்கரைத் தொடர்ந்து பெத்தகிருஷ்ணப்பன் (கி.பி.1541-1544) கொண்டம நாயக்கன், சின்ன கிருஷ்ணப்ப நாயக்கன் போன்றோர் ஆண்டனர். 1649இல் கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் பிஜப்பூர் சுல்தான் அடில்ஷாவினால், சையது நாசீர்கான் தலைமையில் அனுப்பப்பட்ட படை செஞ்சியைக் கைப்பற்றியது. இதனால் நாயக்கர் ஆட்சி வீழ்ச்சியுற்றது. இதன் பிறகு சிறிது காலம் (1698) இது மராட்டியர் ஆட்சியின் கீழும் பின்னர் முகலாயர் ஆட்சியின் கீழும் சென்றது.

  சின்னங்கள்:

  செஞ்சி நாயக்கர் காசுகளில் ஒரு பக்கம் வட்டத்தைச் சுற்றிலும் புள்ளிகள், கிண்ணவடிவத்தின் மேல் சூரியன், இடதுபக்கம் நோக்கி நிற்கும் காளை, புள்ளியிட்ட வட்டத்திற்குள் கையில் முகம் பார்க்கும் கண்ணாடியுடன் இடப்புறம் திரும்பியிருக்கும் மங்கை, புள்ளியிட்ட வட்டத்திற்குள் இடப்புறம் மயில், புள்ளியிட்ட வட்டத்திற்குள் பாதி சிங்க உருவம் கொண்ட மனித விலங்கு (spinx). வலது கையில் அம்பு இடது கையில் வில்லுடன் நின்ற நிலையில் ராமர், பீடத்தின் மேல் கருடஸ்தம்பம், இடது பக்கத்தில் சங்கு பிறை சக்கரம், வருணன் (மச்சேந்திரன்), நின்ற நிலை விஷ்ணுவின் இடது கை அருகில் வணங்கும் நிலை அனுமான், நின்ற நிலையில் விஷ்ணு, அமர்ந்த நிலையில் பெண் தெய்வம் (அம்மன்), நின்ற நிலையில் புல்லாங்குழலுடன் வேணுகோபாலர், அமர்ந்த நிலையில் கணபதி, அமர்ந்த நிலையில் உமா மகேஸ்வரர் கங்காதர மூர்த்தி, நின்ற நிலை மனிதன், பால கிருஷ்ணன், நின்ற நிலையில் வீர பத்திரர், அலங்கரிக்கப்பட்ட சுதர்சன சக்கரம், சங்கு அமர்ந்த நிலை லெட்சுமி நாராயணன், ஸ்ரீ தேவி, பூதேவியுடன் நின்ற நிலையில் விஷ்ணு, கண்ட பேருண்ட பட்சி, நாமம் போன்ற சின்னங்களும் மறுபக்கம் ஒரு சில சின்னங்களுடன் அரசர்களது பெயர் பொறிப்புகளும் இடம்பெறுகின்றன.

  எழுத்துப்பொறிப்புகள்:

  செஞ்சி நாயக்க அரசர்களுள் வையப்பர் (1526 -44), பெத்தகிருஷ்ணப்பர் (1541 – 1544), வெங்கடப போன்றோரது எழுத்துப்பொறிப்பு காசுகள் கிடைத்துள்ளன.

  எழுத்தும், மொழியும்:

  இவ்வரசர்களும் தமிழ், தெலுங்கு, கன்னடம், நாகரி எழுத்துக்களில் காசுகளை வெளியிட்டுள்ளனர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:41:46(இந்திய நேரம்)