தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • கற்பதுக்கை

  முனைவர் வீ.செல்வகுமார்
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

  கற்பதுக்கை ஒரு பெருங்கற்கால ஈமச்சின்னம் ஆகும். கற்பதுக்கை தென்னிந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகின்றது. இது இறந்தவர்களின் நினைவாக அல்லது அவரது உடற்பகுதிகளை (எலும்புகள்) வைத்து எழுப்பப்பட்ட ஈமச் சின்னமாகும். இது ஆங்கிலத்தில் Cist எனப்படுகின்றது.

  அமைப்பு

  கற்பலகைகளை நான்கு புறமும் வைத்து ஒர் அறை போல இது உருவாக்கப்படுகின்றது.

  இது அமைப்பில் கற்திட்டையை ஒத்துள்ளது. கல் திட்டை தரையின் மீது காணப்படும்; ஆனால், கற்பதுக்கை தரையில் புதைந்து இருக்கும்.

  தாழியுடன் கற்பதுக்கை, பொருந்தல்

  சில கற்பதுக்கைகள் இரண்டு அறைகளாகப் பிரிக்கப்பட்டு காணப்படும். இவற்றின் உள் கற்பலகைகளைக் கொண்டு இருக்கைகள் (Bench) அமைக்கப்பட்டு இருக்கும்.

  கற்பதுக்கைகளும், கற்திட்டைகளைப் போல, இடுதுளைகளைப் பெற்றிருக்கும். இடுதுளைகள், வெளியிலுள்ள பலகையிலோ அல்லது உள்ளே உள்ள பலகையிலோ காணப்படும்.

  காணப்படும் இடங்கள்

  இவை தென்னிந்தியாவின் மலை மற்றும் பாறைகள் உள்ள பகுதிகளில் காணப்படுகின்றன. கொடுமணல், சித்தன்னவாசல் உள்ளிட்ட பல இடங்களில் கிடைக்கின்றன.

  தொல்பொருட்கள்

  இறந்தவர்களின் உடல்பகுதிகள் (எலும்புகள், பற்கள்), அவர்களுக்காக வைக்கப்பட்ட பானைகள், இரும்புப் பொருட்கள் (கத்தி, வாள், ஈட்டி முனை போன்றவை), கல் மணிகள், வெண்கலப்பொருட்கள், சில நேரங்களில், நெல் போன்ற தானியங்களும் இவற்றின் உள்ளே பானைகளில் காணப்படும்.

  கற்பதுக்கை, ஒலிய மங்கலம்

  மேற்கோள் நூல்

  Leshni,L.S 1974 South Indian Megalithic Burials, The Pandukal Complex. Wesbaden.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:03:08(இந்திய நேரம்)