தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • மெருகேற்றப்பட்ட கற்கோடரி

  முனைவர் வீ.செல்வகுமார்
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

  புதிய கற்காலக் கருவி, இரும்புக் காலத்திலும் வரலாற்றுக் காலத்திலும் பயன்பாட்டில் இருந்தது. மெருகேற்றப்பட்டக் கற்கோடரி ஆங்கிலத்தில் Polished Stone Axe அல்லது Celt (செல்ட்) என்று அழைக்கப்படுகின்றது. இக்கருவி முக்கோணவடிவில் அமைந்துள்ளது.

  படங்கள் 1,2,3,4

  இதன் ஒரு பகுதி கூராகவும், அதன் எதிர்ப்பகுதி வெட்டும் முனையுடன் காணப்படுகின்றது. இக்கருவி புதிய கற்காலத்தில் (Neolithic Period) அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. இதைக் கைப்பிடியுடன் பிணைத்துப் பயன்படுத்தி இருக்கவேண்டும்.

  மெருகேற்றப்பட்ட கற்கோடரி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் காணப்படுகின்றது. குறிப்பாக, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிகமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செம்பியன்கண்டியூர், தே.கல்லுப்பட்டி, தெலுங்கனூர் உட்பட பல இடங்களில் இது கிடைத்துள்ளது.

  இக்கருவி புதிய கற்காலத்திற்குப்பிறகும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரும்புக்காலம் மற்றும் வரலாற்றுத் துவக்கக் காலத்திலும், மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இன்றும் பல ஊர்களில், குறிப்பாகச் சேலம், தருமபுரி, வட ஆற்காடு மாவட்டங்களில், சிறிய கோவில்களில் வைத்து இவை வழிபடப்படுகின்றன. இவற்றின் வடிவத்தைக் கண்டு இதைச் சக்தியுள்ள கல்லாக மக்கள் நம்புவது, இவ்வழிபாட்டிற்கு ஒரு காரணமாக இருக்கலாம். இக்கருவி மட்டும் கிடைக்கும் இடங்களைப் புதிய கற்கால இடமாகக் கருதமுடியாது. பிற சான்றுகளான பானையோடுகள் மற்றும் பிற தொல்போருள்கள் கிடைத்தாலே புதிய கற்கால வாழ்விடங்களை நாம் உறுதியாக அடையாளப்படுத்த முடியும்.

  மேற்கோள் நூல்

  Narasimhaiah,B. 1980. Neolithic and Megalithic Cultures in Tamil Nadu, Sundeep Prakashan, New Delhi.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:59:31(இந்திய நேரம்)