தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • பரதேசி்

    முனைவர் பா.ஜெயக்குமார்
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை



    அறிமுகம்

    கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் பெயர்களில் ஒன்று ‘பரதேசி’ என்பதாகும். பொதுவாகத் தமிழர்களிடையே பரதேசி என்பது யாசகம் பெறுபவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்லாகும். ஆனால், பரதேசி என்பதற்குப் பிறதேசத்தைச் சேர்ந்தவன் / அன்னியன் என்பதே சரியான பொருள் ஆகும். பரதேசம் (பிறதேசம்) என்ற சொல்லிலிருந்து பரதேசி என்ற இப்பெயர் வந்திருக்க வேண்டும். வடமொழியில் காணப்படும் பர்தேஸ்/பர்தேஸின் என்ற சொல்லுடன் இணைத்துப் பார்க்கலாம்.

    சிறப்பு

    ‘பரதேசி’ என்ற பெயர் அல்லது சொல் பொதுவாகப் பிறநாடுகளிலிருந்து வந்து தமிழகக் கடற்கரைப் பட்டினங்களில் தங்கியிலிருந்து கடல் வணிகத்தில் ஈடுபட்டவர்களைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்வணிகர்கள் தென்னிந்தியத் துறைமுகங்களில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர் என்பதையும் அறியமுடிகிறது.

    கல்வெட்டு

    கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் பரதேசிஇப்பெயரை மட்டும் வைத்துக் கொண்டு அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என இனம் காண்பது கடினமானது. கிழக்குக் கடற்கரையில் இடைக்காலத்தில் சிறந்த துறைமுகமாக விளங்கிய மோட்டுப்பள்ளியில் (பார்க்க: மோட்டுப்பள்ளி) கிடைத்துள்ள கி.பி 1358 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்க் கல்வெட்டில் குறிப்பிடப்படும் பரதேசிகள் யார் என்பதைக் கல்வெட்டில் அறியமுடியவில்லை. எனினும், இக்கல்வெட்டு முழுக்கத் தமிழ் மொழியில் பொறிக்கப்பட்டுள்ளதால் இதில் காட்டப்படும் செய்தி தமிழ் மொழி தெரிந்த வணிகர்களுக்காக வெளியிடப்பட்டதாகக் கொள்ளலாம். அவ்வாறாயின், இக்கல்வெட்டுச் சுட்டும் பரதேசிகள் என்பது தமிழ் வணிகர்களையே குறித்து நின்றது எனத் திடமாகக் கருதலாம். இது போன்று கல்வெட்டு மொழியின் தன்மைக்கு ஏற்றவாறு இனம் காண்பதே சிறந்ததாக இருக்கும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:52:12(இந்திய நேரம்)