தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அழகர்மலை தமிழிக் கல்வெட்டு

 • ஆனைமலை சங்க காலத் தமிழ் (தமிழி) கல்வெட்டு

  முனைவர் மா.பவானி
  உதவிப் பேராசிரியர்
  கல்வெட்டியல் துறை

  அமைவிடம்: மதுரை மாவட்டத்தில் உள்ள ஆனைமலையில் உள்ளது.

  காலம்: பொ.ஆ.2ஆம் நூற்றாண்டு

  குறிப்பு: மதுரைக்கு அருகில் நீண்ட பெரும் யானை படுத்துறங்கவது போல் உள்ள குன்றை ‘யானை மலை’ என்று அழைப்பர். இம்மலை வரலாற்றுச் சிறப்புடையது. இங்கு பராந்தக நெடுஞ்சடையன் காலத்து நரசிம்ம பெருமான் கோயில் ஒன்றும் முருகன் கோயில் ஒன்றும் உள்ளன. இவை குடைவரையாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இவை தவிர இவற்றின் அருகிலேயே சமணப் பெரியார்கள் வாழ்ந்த தடயங்களும் தீர்த்தங்கரர்களுடைய சிலைகளும் எழுத்துக்களும் உள்ளன. அவற்றுள் குறிப்பிடத் தக்கது அங்குள்ள வட்டெழுத்துக் கல்வெட்டாகும்.

  கல்வெட்டுப் பாடம்

  இவ குன்றத்து உறையுள் பா தந்தான் எரி
  அரிதன் அத்துவாயி அரட்ட காயிபன்
  பொருண்மை

  இவ குன்றத்துச் சமணர் படுக்கையைச் செய்து கொடுத்தது எரி என்ற இடத்தைச் சேர்ந்த மதிப்புறு அரிதன் மற்றும் விளக்கவாளர் அரட்ட காயிபன் என்பவர் ஆவார். ‘’இபம்’’ என்னும் வடமொழிச் சொல் யானையைக் குறிக்கும். இபமாகி என்று திருப்புகழில் வருவதைக் கூறலாம். ஆதலின் ‘இபக்குன்றம்’ என்பது ‘யானைக்குன்றம்’ என்பதே. இதிலிருந்து இம்மலை தொன்றுதொட்டே யானைமலை என்று அழைக்கப்பட்டது தெளிவு. இம்மலையில் சமணர் வசித்தனர் என்பதை ‘’ஆனைமாமலை ஆதியாய இடங்களில்‘’ என்று ஞானசம்பந்தர் பாடியுள்ளார். பா தந்தான் என்பதற்கு பா = பாய் = படுக்கை தந்தான் என்று இரா. நாகசாமி பொருள் கூறுகின்றார். பதந்தான் என்பதற்கு ‘’பதந்த’’ (bhatanta) என்ற வடமொழிச் சொல்லிற்கு வணங்கத்தக்க என்று பொருள் கொண்டுள்ளார் ஐராவதம் மகாதேவன்.

  முக்கியத்துவம் :

  மெய் எழுத்திற்குப் புள்ளியிடப்பெற்று கிடைத்த காலத்தால் முந்தைய முதல் கல்வெட்டு இதுவே ஆகும். தொன்மைக் காலந்தொட்டே ஆனைமலை என்ற பெயர் இடம்பெற்றிருப்பது.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:47:04(இந்திய நேரம்)