தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சேர மன்னன் மாக்கோதைக் காசு

 • முதலாம் இராஜராஜசோழன் காசுகள்

  முனைவர் மா.பவானி
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

  காலம் - பொ.ஆ. 985-1014
  உலோகம் :- கலப்பு தங்கம், தங்கம், மாற்று குறைந்த தங்கம், கலப்பு வெள்ளி, செப்பு, செப்புக் காசின் மேல் வெள்ளி அல்லது தங்க முலாம் பூச்சு.
  வடிவம் - வட்டம்

  முதலாம் இராஜராஜன் (பொ.ஆ. 985-1014

  முதலாம் இராஜராஜன் உத்தமசோழனுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்றான். இராஷ்டிரகூடரின் படையெடுப்பால் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்த சோழ நாட்டைப் பேரரசாக வரலாற்றில் நிலைநிறுத்தியவன். தஞ்சைப் பெருவுடையார் கோயிலை நிர்மாணித்தவன் என்ற பெருமையும் இவனுக்குண்டு.)

  முதலாம் இராஜராஜசோழன் காசுகள்

  நிற்கும் மற்றும் அமர்ந்த மனித
  உருவத்துடன் ஸ்ரீராஜராஜ
  எனும் நாகரி எழுத்துப்
  பொறிப்புடன் கூடிய காசு

  காசின் முன்புறம் வலது அல்லது இடது பக்கம் நோக்கி நிற்கும் மனித உருவம், அதன் வலது அல்லது இடது பக்கம் விளக்கு, எட்டுப் புள்ளிகள், வலது பக்கம் நோக்கி நிற்கும் பன்றியின் இரு பக்கங்களிலும் இரு குத்து விளக்குகள், பன்றியின் மேல் வெண்கொற்றக்குடை, இரு சாமரங்கள், வெண்கொற்றக்குடையின் கீழ் அமர்ந்துள்ள புலி, செங்குத்தான நிலையில் இரு மீன்கள், வில், ஆகிய சின்னங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். காசின் முன்புறமோ அல்லது பின்புறமோ "ஸ்ரீராஜராஜ" "ஸ்ரீராஜராஜராஜ" "ஜயசொள", "உரக", "அக", "ஸ்ரீலங்கவீர", "ஸ்ரீலங்காவீர", "உயகொண்ட", "உ(ய)ய(க)கொண்டா(ன்)", "ஸ்ரீராராநிதனாடு" (இடப்பற்றாக்குறையால் ஸ்ரீ ராஜராஜ வளநாடு என்று பொறிக்காமல் சுருக்கமாகப் ஸ்ரீராராநிதனாடு என்று பொறிக்கப்பட்டுள்ளது) எனும் நாகரி எழுத்துப் பொறிப்பு மற்றும் "(ரவி)குலமாணிக்கம்" எனும் கிரந்த எழுத்துப் பொறிப்பும் காணப்படும். சில காசுகளில் "ஸ்ரீராஜராஜ" என்று தெலுங்கு- கன்னட எழுத்துப் பொறிப்பும் இடம்பெறும். இக்காசுகளைக் கீழைச் சாளுக்கியர்கள் முதலாம் இராஜராஜன் பெயரில் வெளியிட்டிருக்கலாம். காசின் பின்புறம் அமர்ந்த நிலையிலான மனித உருவம், சங்கு, சக்கரம் ஆகியவை பொறிக்கப்பட்டிருக்கும்.

  குறிப்பு: ஸ்ரீராஜராஜ என்று பெயர் பொறிக்கப்பட்ட காசுகளில் வழக்கமான முன் பக்கம் நிற்கும் மனித உருவம் பின் பக்கம் அமர்ந்த மனித உருவம் மட்டுமின்றி முன்பக்கம் நிற்கும் உருவத்தின் இடது பக்கமோ அல்லது வலது பக்கமோ சங்கு, மீன், பன்றி, திருவடி போன்ற உருவங்களுடன் மீன், பன்றி போன்றவை முன்பக்கத்தில் பிரதானமாகத்தனித்தும் காணப்படுகின்றன. அத்துடன் சோழர்களது செப்பேடுகளில் காணப்படுவதைப் போல் குடையின் கீழ் புலி, மீன், அம்பு போன்ற சின்னங்கள் இருபுறமும் இடம்பெற்றுள்ளன. புல்லாங்குழலுடன் நின்ற நிலையில் பாலகிருஷ்ணன் உள்ள உருவங்களும் ராஜராஜனின் ஒரு சில காசுகளில் உள்ளன.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:52:42(இந்திய நேரம்)