தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • மல்லப்பாடி

  முனைவர் வீ.செல்வகுமார்
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை
  தமிழ்ப் பல்கலைக்கழகம்
  தஞ்சாவூர்

  மல்லப்பாடி தொல் பழங்கால மற்றும் வரலாற்றுக் கால மக்கள் வாழ்ந்த இடமாகும். இங்கு புதிய கற்கால, பெருங்கற்கால வாழ்விடச் சான்றுகள் கிடைக்கின்றன. தமிழகத்தின் குறிப்பிடத்தக்க தொல்லியல் இடங்களில் இதுவும் ஒன்றாகும்.

  அமைவிடம்

  இந்த ஊர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருப்பத்தூர் சாலையில் உள்ள பர்கூரிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.

  தொல்லியல் சான்றுகள்

  சென்னைப் பல்கலைக்கழகப் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை இங்கு அகழாய்வு செய்துள்ளது. இங்கு புதிய கற்காலத்தின் பிற்பகுதி மற்றும் இரும்புக் காலத்தின் துவக்கத்தில் வாழ்ந்த மக்களின் தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. இங்கு பெருங்கற்கால மற்றும் வரலாற்றுக் காலங்களின் சான்றுகளும் கிடைத்துள்ளன. மேலும், புதிய கற்கால மெருகேற்றப்பட்ட கற்கோடரிகளும், பெருங்கற்காலக் கருப்பு-சிவப்பு மற்றும் சிவப்பு வகைப் பானை ஓடுகளும் கிடைக்கின்றன. சுடுமண் பொம்மைகள், கண்ணாடி (பளிங்கு) மற்றும் சங்கு வளையல்கள் ஆகிய தொல் பொருட்கள் கிடைத்துள்ளன.

  மல்லப்பாடியில் உள்ள மலையில் பெருங்கற்காலத்தைச் சார்ந்த ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களில் இரண்டு குதிரை வீரர்கள் சண்டையிடுவது போன்ற காட்சி தீட்டப்பட்டுள்ளது.

  மேற்கோள் நூல்

  தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி). 2005 தருமபுரி மாவட்டத் தொல்லியல் கையேடு. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:01:29(இந்திய நேரம்)