தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • சிந்துவெளி நாகரிகம்

    முனைவர் வீ.செல்வகுமார்
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை
    தமிழ்ப் பல்கலைக்கழகம்
    தஞ்சாவூர்

    சிந்துவெளி நாகரிகம் அல்லது அரப்பா பண்பாடு இந்தியாவில் பொ.ஆ.மு.2600லிருந்து 1900 வரையிலான காலக்கட்டத்தில் மிகச் சிறந்து விளங்கிய நாகரிகமாகும். இது உலகில் அக்காலத்தில் தோன்றி, செழிப்பாக விளங்கிய ஒரு சில நாகரிகங்களில் ஒன்றாகும். இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் ஓடும் சிந்து ஆறு மற்றும் அதன் அண்மைப் பகுதிகளில் இது வளர்ந்தது.

    நாகரிக நகரங்கள்

    இந்நகரம் சுமார் 15 லட்சம் சதுர கி.மீ பரப்பளவில் பரவி இருந்ததாகக் கருதப்படுகின்றது. இந்நகரத்தின் மிகவும் புகழ்பெற்ற நகரங்களான அரப்பா மற்றும் மொகஞ்சதாரோ பாகிஸ்தானில் உள்ளன. இந்தியாவில் இந்நாகரிகத்தின் சிறப்பான நகரங்களான லோத்தல், தோலாவீரா ராக்கிகடி, காலிபங்கன் ஆகியவை உள்ளன. இக்காலத்தில் மக்கள் சிறிய ஊர்களிலும் வசித்திருந்தனர். மேலும் இவர்களது பண்பாட்டிலிருந்து சற்று வேறுபட்ட சில இனக்குழுக்களும் இப்பகுதியில் சில இடங்களில் வாழ்ந்துள்ளனர்.

    நடனப் பெண், சிந்துவெளி நாகரிகம்

    கட்டட அமைப்புகள்

    இந்நாகரிக மக்கள் நன்கு திட்டமிடப்பட்டுக் கட்டப்பட்ட வீடுகளில் வாழ்ந்தனர். வீடுகளில் குளியல் அறைகள் இருந்தன. வீடுகள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டன. நகரங்களில் நல்ல வசதிகள் இருந்தன. மொகஞ்சதாரோவில் குளியல்குளம் ஒன்று இருந்தது. நகரங்களில் மேட்டுக்குடி மக்களுக்கு என்று தனியான பகுதிகள் இருந்தன. நகரங்களைச் சுற்றி அரண்கள் சில நகரங்களில் இருந்தன. தெருக்களும், சந்துகளும் நன்கு அமைக்கப்பட்டிருந்தன. வீடுகளில் கிணறுகள் இருந்தன.

    இவர்கள் பயன்படுத்திய செங்கற்கள் 1:2:4 என்ற வீதத்தில் கனம், அகலம், நீளத்தைப் பெற்றிருந்தன. இவர்கள் சுடாத களிமண்ணையும் வீடுகட்டப் பயன்படுத்தினர்.

    தொல்பொருட்கள்

    இந்நாகரிக இடங்களில் செம்பு, தங்கம், உயர்வகைக் கற்கள், சங்கு, சுடுமண் மற்றும் பிற பொருள்களாலான தொல்பொருட்கள் கிடைக்கின்றன. இவர்கள் உருவாக்கிய தொல்பொருட்கள் அவர்களது சிறப்பான கைவினைத் திறனை வெளிப்படுத்துகின்றன. இவர்கள் மணிகள் மற்றும் பிற அணிகலன்களை மெசபடோமியாவிற்கு ஏற்றுமதி செய்தனர். இவர்கள் பயன்படுத்திய பானைகள் அழகிய கருப்பு நிற ஓவியங்களுடன் காணப்படுகின்றன. இவர்கள் எண்ணிலடங்கா தொல்பொருள் வகைகளைப் பயன்படுத்தி உள்ளனர். இவர்களது தொல்பொருட்கள் நல்ல கலைத்திறனை வெளிப்படுத்துகின்றன.

    கடற்சார் வணிகம்

    இவர்கள் கப்பல் கட்டுவதிலும் கடற்செலவிலும் சிறந்து விளங்கினர். மெசபடோமியாவுடனும் பிற மேற்குப் பகுதிகளுடனும் கடல் வழி வணிகத்தில் ஈடுபட்டனர். மேலை நாடுகளுடனான வணிகம் இவர்களது பொருளாதார வளர்ச்சியில் ஒரு சிறப்பான பங்கு வகித்தது.

    பூசாரியின் சிற்பம், சிந்துவெளி நாகரிகம்

    அறிவியல் தொழில் நுட்பம்

    சிற்பம், சிந்துவெளி நாகரிகம்

    இவர்களது வீடு, கட்டட அமைப்புகள், நகர அமைப்புகள உலோகப் பொருட்கள், குறியீடுகள், நல்ல அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியைக் காட்டுகின்றன. கட்டடங்களின் அளவுகள் கணித அறிவைப் புலப்படுத்துகின்றன.

    விவசாயம் மற்றும் ஆடுமாடு வளர்ப்பு

    இவர்கள் கோதுமை, பார்லி மற்றும் பல தானியங்களைப் பயிர் செய்தனர். விவசாயத்தில் தன்னிறைவு இந்நாகரிக வளர்ச்சிக்கு ஒரு சிறப்பான காரணமாகும். (Standardization).

    ஆடுகளையும் மாடுகளையும் வளர்த்தனர். இவ்விலங்குகள், இவர்களின் முத்திரைகளில் காணப்படுகின்றன. குதிரைகளை இவர்கள் பயன்படுத்தவில்லை.

    முத்திரைகள்

    சிந்துவெளி முத்திரைகள் இவர்களது கலை உணர்வைப் பிரதிபலிக்கின்றன. இவற்றை அவர்கள் எதற்காகப் பயன்படுத்தினர் என்பது தெரியவில்லை. இவை அவர்களது சமய நம்பிக்கையையும் வெளிப்படுத்துகின்றன. இம்முத்திரைகளில் அவர்களது எழுத்துக்கள் உள்ளன. ஆனால் இவை என்ன மொழியில் எழுதப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. இது தமிழ், திராவிட மொழிகள் அல்லது ஆரிய-சமஸ்கிருத மொழிகளுடன் தொடர்புடையது என்ற கருத்துக்கள் அறிஞர்களிடையே உள்ளது. ஹிராஸ் பாதிரியர், அஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன், எஸ்.ஆர்.இராவ், இரா.மதிவாணன், மயான்க் வாஹியா உட்பட பல அறிஞர்கள் இந்த எழுத்துக்களைப் பற்றி ஆராய்ந்துள்ளனர்.

    தாய் தெய்வம், சுடுமண் சிற்பம், சிந்துவெளி நாகரிகம்

    மேற்கோள் நூல்

    D.P.Agrawal 2007, The Indans Civilization, An Interdisciplinaly Perspective, New Delhi, Aryan Books.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:59:01(இந்திய நேரம்)