தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • திருவரங்கம் (ஸ்ரீரங்கம்)

  முனைவர் வீ.செல்வகுமார்
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

  திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள ஒரு புகழ்பெற்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வைணவத் தலமாகும். இது காவிரியின் நடுவில் தீவு போல் அமைந்துள்ளது. இது தென்னை, பாக்கு, வாழை மரங்களுடன் மிக அழகாகக் காட்சி அளிக்கின்றது. அரங்கம் என்ற பெயர் இந்த இடம் தீவு போல, மேடை போல காவிரி ஆற்றில் உள்ளதால் வந்திருக்க வேண்டும்.

  இரங்கநாதர் கோவிலில் பல வரலாற்றுச் சிறப்பு பெற்ற கல்வெட்டுக்களும், சிற்பங்களும் உள்ளன. இக்கோவிலைப் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் உள்ளது. இக்கோவில் ஏழு திருச்சுற்றுக்களைக் கொண்டுள்ளது. இதன் இராசகோபுரம் 236 அடி உயரத்துடன், இந்தியாவிலேயே மிக உயரமான இந்துக் கோவில் கோபுரம் என்ற சிறப்பை உடையது. இக்கோவில் சுமார் 148 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது உலகிலேயே வழிபாட்டிலுள்ள, பெரிய பரப்பளவிலுள்ள இந்துக் கோவில் ஆகும்.

  திருவரங்கம் கோவில் கல்வெட்டுக்களில் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு நிகழ்வுகள், கோவிலுக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடை, கோவிலைச் சார்ந்த நந்தவனங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. இங்கு சோழர், பாண்டியர், விசயநகர மற்றும் நாயக்கர் கல்வெட்டுக்கள் உள்ளன. இக்கோயிலில் ஓர் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இங்கு செப்பேடுகள் மற்றும் ஓலைச் சுவடிகள் மற்றும் பிற தொல்பொருட்கள் உள்ளன.

  ஸ்ரீரங்கம் கோயிலொழுகு இக்கோயிலின் வரலாற்றைப் பற்றிக் கூறுகின்றது. இக்கோவிலில் அதிக அளவில் கட்டுமானங்கள் 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டன. இங்கு 21 கோபுரங்கள் நுழைவாயில் மேலே உள்ளன. இங்குள்ள ஷேஷகிரிராயர் மண்டபம் உலகப் புகழ்பெற்ற குதிரை வீரர் சிற்பங்களைக் கொண்டது. இக்கோவிலின் விமானம் (கருவறை மீதுள்ள கட்டட அமைப்பு) தங்கத் தகடுகளால் மூடப்பட்டுள்ளது. இங்கு இராமனுசர் சில காலம் வாழ்ந்ததாகக் கருதப்படுகின்றது. இவ்வூர் தமிழக அரசால் புராதன ஊராக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:06:25(இந்திய நேரம்)