தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • பெருங்கற்படைகள்

  முனைவர் வீ.செல்வகுமார்
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

  பெருங்கற்படைகள் இரும்புக் கால வரலாற்றுத் துவக்கக்கால ஈமச்சின்னங்கள் ஆகும். பெருங்கற்படைகள் ஆங்கிலத்தில் “Megalith” என்று அழைக்கப்படுகின்றன. கிரேக்க மொழியிலிருந்து வந்த “megas + lithos” என்ற சொற்களிலிருந்து megalith என்ற இந்த ஆங்கிலச் சொல் தோன்றியது. “மெகா” என்றால் “பெரிய” என்றும், “வித்” என்றால் “கல்” என்றும் பொருள். ஆனால், தென்னிந்தியாவில் காணப்படும் பல ஈமச்சின்னங்கள் பெரிய கற்களால் உருவக்கப்பட்டவை அல்ல. இருப்பினும் இவை ஒரே மாதிரியான பண்பாட்டுக் கூறுகளைப் பெற்றிருப்பதால், பெருங்கற்படைகள் என அழைக்கப்படுகின்றன.

  உலகளவில்

  பெருங்கற்படைச் சின்னங்கள் உலகமெங்கும் காணப்படுகின்றன. ஆனால் இவை அனைத்தும் ஈமச்சின்னங்கள் அல்ல. இங்கிலாந்திலுள்ள Stone Henge என்பது ஓர் உலகப் புகழ்பெற்ற பெருங்கற்படைச் சின்னமாகும்.

  இந்தியாவில்

  இந்தியாவில் பெருங்கற்படைச் சின்னங்கள் பெரிதும் தென்னிந்தியாவில்தான் காணப்படுகின்றன. வட இந்தியாவிலும், மத்திய இந்தியாவிலும் சில இடங்களில் இவை கிடைக்கின்றன. வடகிழக்கு இந்தியாவிலுள்ள பெருங்கற்படைச் சின்னங்கள், பல சமகால நிகழ்வுகளைக் குறிக்க எழுப்பப்பட்டவை ஆகும். இவை இன்றும் அங்கு எழுப்பப்படுகின்றன.

  கண்டுபிடிப்பு

  இந்தியாவின் முதல் பெருங்கற்படைச் சின்னத்தைக் கண்டுபிடித்தவர் காலின் மெக்கன்ஸி ஆவார். இவர் தென்னிந்தியாவில் பல அரிய ஓலைச் சுவடிகளைச் சேகரித்தும் தொகுத்தும் உள்ளார்.

  இவர் சென்னைக்கு அருகிலும், ஆந்திராவிலும் பெருங்கற்படைச் சின்னங்களைக் கண்டுபிடித்துள்ளார். இவர் 1810களில் இவற்றைக் கண்டுபிடித்திருக்க வேண்டும். 1819 இல் கேரளாவிலுள்ள செத்தப்பரம்பில், ஜேம்ஸ் பபிங்டன் பெருங்கற்படைச் சின்னங்களை அகழ்ந்தார். பின்னர் தமிழகத்தில் ஜாகோர், ஆங்கிலேடு, அலெக்ஸாண்டர் ரீ போன்றவர்கள் பல பெருங்கற்படைச் சின்னங்களை அகழ்ந்து ஆராய்ந்துள்ளார்.

  தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெருங்கற்படைச் சின்னங்கள் உள்ளன. இவற்றில் நூற்றுக்கணக்கானவை அகழாய்வு செய்யப்பட்டுள்ளன.

  கல் மூடியின் கீழே தாழி

  ஆதிச்சநல்லூர், சானூர், கொடுமணல், தாண்டிக்குடி, பொருந்தல், மயிலாடும்பாறை, அமிர்தமங்கலம், ஆரோவில் ஆகியவை தமிழகத்தில் அகழாய்வு செய்யப்பட்ட ஊர்களில் குறிப்பிடத்தக்கவையாகும்.

  காலம்

  இவை பொதுவாக பொ.ஆ.மு. 1000லிருந்து பொ.ஆ.500 வரையான காலக்கட்டத்தைச் சேர்ந்தவை. இக்காலத்திற்குப் பின்னரும் இவற்றில் சில ஈமச்சின்ன வகைகள் பயன்பாட்டில் இருந்திருக்கலாம்.

  வகைகள்

  பெருங்கற்கால வகைகளை தரைக்கு மேற்புறம் காணப்படும் சின்னங்கள் மற்றும் உட்புற அமைப்பு (புதைந்துள்ள பகுதி) ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தலாம்.

  பெருங்கற்படையில் கிடைத்த ஈமச்சின்னங்கள்

  ஈமச் சின்ன வகைகள்

  வ.எண்
  தரைமேல் உள்ள நினைவுச் சின்னம் / குறிப்பான் (Marker)
  உட்புற அமைப்பு
  குறிப்பு
  1.
  கற்குவை (cairnheap) கல்வட்டம் (Stone circle) நெடுங்கல் (Menhir)
  தொப்பிக்கல் (Hat Stone) கல்வட்டம் நெடுங்கல்லுடனோ, மனித உருவான கல்லுடன் காணப்படும்.
  தாழி (urn)/அல்லதுகுழி (Pit) ஈமப்பேழை(Sarcophagus)
  சில நெடுங்கல்லின் கீழே எதுவும் கிடைக்கவில்லை
  2.
  கற்பதுக்கை (cist)
  கற்பதுக்கை (சில இடங்களில் தாழிகள்)
  3.
  கற் திட்டை (Dolmen)
  பாறை மீது அமைந்தால் உட்புற அமைப்பு இல்லை.
  கற் திட்டையின் பகுதி உள்ளே புதைந்து காணப்படும். அறை போன்று காணப்படும்.
  4.
  குடைக்கல் (umbrella Stone)
  தாழி அல்லது குடைக்கல்லின் பகுதி உள்ளே அமைந்து அறை போன்று காணப்படும்.
  5.
  தொப்பிக்கல் (Hat Stone)
  குழி அல்லது தாழி
  6.
  கல்வரிசை (Stone Alignment)
  தகவல் இல்லை
  வரிசையாக நடப்பட்ட கற்கள்
  குடைவறை ஈமச்சின்னம்

  சில ஈமச்சின்னங்களில் முழுமையான மனித எலும்புக் கூடும், சிலவற்றில் சில எலும்புகள் மட்டும் காணப்படும். எனவே இறப்பிற்குப்பின் உடலைச் சில சடங்குகளுக்கு உட்படுத்தி, சில எலும்புகளை மட்டும் எடுத்து, பிறகு ஈமச் சின்னங்களை அக்கால மக்கள் எழுப்பி உள்ளனர். சில அறிஞர்கள் பாரசீக இனத்தவர் செய்வது போல, உடலை இயற்கைக் காரணிகளுக்கு விட்டபின் (திறந்தவெளியில் ஒரு தனிமையான இடத்தில் உடலை வைத்து விடுதல்), சில எலும்புகளை எடுத்து ஈமச்சின்னங்களை எழுப்பியதாக ஒரு கருதுகோளை முன் வைத்துள்ளனர். ஆனால் அவர்கள் இறந்த பிறகு உடலை என்ன செய்தார்கள் என்பது குறித்த முழுத் தகவல்கள் நமக்குக் கிடைக்கவில்லை.

  தாழி

  கேரளாவிலும் ஆந்திராவிலும் சில ஈமச்சின்னங்களில், இறந்த உடலை எரித்ததற்கானச் சான்றுகள் கிடைக்கின்றன.

  ஈமப்பொருட்கள்

  ஈமச்சின்னங்களில் காணப்படும் பொருட்கள், ஈமப் பொருட்கள் எனப்படும். இறந்தவர்களுக்காக மண் பானைகள், இரும்புப் பொருட்கள், வெண்கலப் பொருட்கள், மணிகள், பிற அணிகலன்கள், அரிதாக தங்க அணிகலன்கள், அரிசி மற்றும் பிற தானியங்கள் மற்றும் பலவிதமான பொருட்களை வைத்துள்ளனர். இவற்றை இறந்தவர்கள் பயன்படுத்துவர் என்று நம்பி வைத்திருக்கலாம்.

  ஈமச்சின்னங்கள் முன்னோர் வழிபாட்டுடனும், பழங்கால மக்களின் நம்பிக்கைகளுடனும் தொடர்புடையவை. நம்முடன் இருந்து, நமது சுகத்திலும் துக்கத்திலும் பங்கு பெற்றவர்களின் உடலைத் திறந்தவெளியில், கேட்பாரற்று விலங்குகள் உண்ணுமாறு விடுதல் பலர் மனத்தை (சில தத்துவ ஞானிகளைத் தவிர) வருத்தும். இதன் விளைவாகவே இடைப்பழங்கற்காலத்திலிருந்தே, இறந்தவர்களைப் புதைக்கும் அல்லது அவர்களுக்கு ஈமச் சின்னம் எடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இறந்தவர்களுக்கு மதிப்பு செய்து, வழிபடுவதற்காகவே இவை அமைக்கப்பட்டிருக்கின்றன.

  கற்திட்டை (ஆங்கிலோர் கால வரைபடம்)

  கூடுதலாக, ஆய்ந்தாலே, இப்பெருங்கற்காலச் சின்னங்களைப் பற்றி நாம் நன்கு அறியமுடியும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:12:22(இந்திய நேரம்)