தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தமிழகத்தில் கிடைத்துள்ள சீன நாணயங்கள்

 • தமிழகத்தில் கிடைத்துள்ள சீன நாணயங்கள்

  முனைவர் மா.பவானி
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

  சீனர் காசுகள்:

  சீனாவுக்கும் தமிழகத்திற்கும் பொ.ஆ.மு. 2 ஆம் நூற்றாண்டு முதலே வணிக உறவு நிலவியிருக்கிறது. பெலியட் கூற்றின்படி பொ.ஆ.மு. 2 ஆம் நூற்றாண்டு முதல் சீனாவிற்கு தமிழ் நாட்டின் காஞ்சிபுரத்துக்கும், தொடர்பு இருந்தது உறுதியாகிறது.

  அக்காலக் கட்டத்தைச் சேர்ந்த சீனக் காசுகள் ஓலையக் குன்னம், (பட்டுக்கோட்டை), விக்ரமம், தளிக்கோட்டை போன்ற பகுதிகளிலிருந்து வெளிக்கொணரப் பெற்றுள்ளன. ஓலையக் குன்னத்திலிருந்து 323 காசுகள் கிடைத்துள்ளன. (இவற்றில் பொ.ஆ.மு. 142 மற்றும் பொ.ஆ.மு. 126 ஆகிய ஆண்டுகளில் வெளியிடப்பட்ட காசுகள் அடங்கும்) விக்ரமம் (பட்டுக்கோட்டை) பகுதியில் கிடைத்த 20 காசுகள் கி.பி. 713க்கும் கி.பி. 1241க்கும் இடைப்பட்ட காலத்தில் வெளியிடப்பட்டவையாகும். தளிக்கோட்டையில் (மன்னார்குடி) கிடைத்த 1822 காசுகள் பொ.ஆ. 1260 – 1268 முடிய உள்ள காலத்தைச் சேர்ந்தவையாகும்.

  பொ.ஆ. 8 ஆம் நூற்றாண்டில் சீன அரசரின் வேண்டுகோளுக்கிணங்கி சீன வணிகர்களுக்காகப் பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மன், நாகப்பட்டினத்தில் புத்த ஸ்தூபி ஒன்றை அமைத்தான் என்று அறிய முடிகிறது. இது பிற்காலத்தில் சீனக் கோயில் என்று அழைக்கப்பட்டுள்ளது. சோழர்கள் ஆட்சியின் பொழுதும் சீன நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் வணிகத் தொடர்பு இருந்துள்ளது என்பதை பொ.ஆ. 10 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரையிலான சீனர்களது காசுகள் மற்றும் பீங்கான், பானை ஓடுகள் தமிழ் நாட்டில் கிடைத்திருப்பதைத் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை கொற்கையிலும், கங்கை கொண்ட சோழபுரத்திலும் மேற்கொண்ட அகழாய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. மேலும் தரங்கம்பாடி (நாகப்பட்டினம்), பெரியபட்டினம் (இராமநாதபுரம்), அரிக்கமேடு போன்ற பல இடங்களில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மற்றும் இந்திய தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வுகளிலும் பல சீன நாட்டுக் குடுவைகள் மற்றும் பானை ஓடுகள் கிடைத்துள்ளன. அண்மையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையினர் மேற்கொண்ட அகழாய்விலும் சீனப் போர்சிலின் (porcelain) பானை ஓடுகள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே தமிழகத்துடனான சீனரது வணிக உறவு பொ.ஆ.மு. 200 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி 15 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து இருந்துள்ளதை இக்காசுகள் கொண்டு அறியலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:41:17(இந்திய நேரம்)