தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அரப்பா ஒரு சிந்து வெளி நாகரிக நகரம்

  • தொல்லியல்
    பழங்கால மக்களைப் பற்றி ஆராயும் இயல்

    முனைவர் வீ.செல்வகுமார்
    உதவிப் பேராசிரியர்
    கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

    தொல்லியல் (தொல்+இயல்) என்பது பழங்கால மக்களின் வாழ்க்கை முறையை, அவர்கள் விட்டுச் சென்ற தொல்பொருட்களின் வாயிலாக, அறிவியல் முறைப்படி ஆராயும் ஓர் இயலாகும். தொல்லியல் வரலாற்றுடன் மிகவும் தொடர்புடைய ஒரு பாடமாகும். பொதுவாக, வரலாறு எழுதப்பட்ட சான்றுகளின் அடிப்படையிலேயே ஆராயப்படுகின்றது. ஆனால் தொல்லியல், மனிதர்கள் எழுத்தைக் கண்டுபிடிக்காத காலத்திற்கு முந்தைய, தொல்பழங்காலத்தைப் பற்றி ஆராய உதவும் முதன்மையான சான்றாக அமைகின்றது. எழுத்துப்பூர்வமான சான்றுகள் உள்ள வரலாற்றுக் காலத்திற்கும் தொல்லியல் சிறப்பான சான்றாக விளங்குகின்றது.

    தரை மேற்பரப்பு ஆய்வு செய்யும்
    தொல்லியல் ஆய்வாளர்கள்

    தொல்லியல் சான்றுகள் :

    மக்கள் வாழ்ந்த ஊர்கள் காலப்போக்கில் அழிந்து மண் மேடுகளாக மாறுகின்றன. மேலும் கட்டடங்கள், கோட்டைகள், கோயில்கள், மண் மேடுகளில் கிடைக்கும் பானை ஓடுகள், கற்கருவிகள், மணிகள், எலும்புகள் மற்றும் பிற தொல்பொருட்கள் தொல்லியல் சான்றுகளில் அடங்கும்.

    தொல்லியல் அகழாய்வு நடைபெறுகின்றது


    கல்வெட்டுகள், செப்பேடுகள் மற்றும் காசுகள் ஆகியவையும் தொல்லியல் சான்றுகளாகும். இவை எழுதப்பட்ட சான்றுகளிலும் அடங்கும்.

    தொல்லியல் வகைகள் :

    தொல்லியலானது காலத்தின் அடிப்படையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத் தொல்லியல், வரலாற்றுக்காலத் தொல்லியல், இடைக்காலத் தொல்லியல், எனப் பல பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது. இடத்தின் அடிப்படையில் இந்தியத் தொல்லியல், உலகத்தொல்லியல், தமிழகத் தொல்லியல் எனவும் வகைபடுத்தப்படுகின்றது.

    தொல்பெருட்கள் சல்லடையில்
    சலித்து எடுக்கப்படுகின்றன


    கடலில் மூழ்கிய கப்பல்கள், நகரங்கள், கடல்சார் வணிகத் தொடர்புகள், கப்பல் கட்டுமானம் ஆகியவற்றை ஆராய்வது கடல்சார் தொல்லியல் எனப்படும் (Maritime Archaeology, Nautical Archaeology, Underwater Archaeology).

    அணை கட்டுதல் மற்றும் சாலை போடுதல் போன்ற வளர்ச்சிப் பணிகள் நடைபெறும் போது அப்பகுதிகளில் உள்ள தொல்லியல் சான்றுகளைப் பதிவு செய்து, சேகரித்து பாதுகாப்பது மீட்புத்தொல்லியல் எனப்படும் (Salvage Archaeology Archaeology).

    தொல்லியல் ஆய்வு முறைகள் :

    அகழாய்வுக் குழியின் தோற்றம்
    நன்றி : கேரள வரலாற்றாய்வுக் கழகம்

    தொல்லியல் தரவுகளைச் சேகரிக்க இரு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவையாவன தரை மேற்பரப்பாய்வு (Explorations Surface Exptions) மற்றும் அகழாய்வு (Excavation) ஆகும்.

    தரைமேற்பரப்பாய்வு :

    நிலப்பரப்பின் மேல் காணப்படும் தொல்லியல் சான்றுகளை கள ஆய்வு செய்து சேகரித்து, பதிவு செய்து ஆராய்வது தரைமேற்பரப்பாய்வு எனப்படும்.

    அகழாய்வு :

    மண்ணில் புதையுண்டு காணப்படும் தொல்லியல் சான்றுகளையும், அவை கிடைக்கும் சூழல்களையும் அறிவியல்பூர்வமாக அகழ்ந்து (தோண்டி), முறையாகப் பதிவுசெய்து சேகரித்து பகுப்பாய்வு செய்வது அகழாய்வாகும்.

    அகழாய்வுக் குழியில் கிடைத்த
    சேரர் காசு (தொல்பொருள்)
    நன்றி : கேரள வரலாற்றாய்வுக் கழகம்

    பகுப்பாய்வுகள் :

    தொல்லியல் சான்றுகள், அறிவியல் நுட்பங்களைப் பயன்படுத்தி ஆராயப்படுகின்றன. காலக்கணிப்பு செய்வற்கு கரிமக்கணிப்பு முறை (radiocarbon dating), ஒளி உமிழ் காலக்கணிப்பு முறை (thermoluminescence), மரவளையக் கணிப்பு முறை (dendrochronology) ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.

    அறிக்கை வெளியிடுதல் :

    அகழாய்வுக்குப் பின்னர் அகழாய்வுகள் குறித்த அறிக்கைளை, அதாவது கண்டுபிடிப்புகள் குறித்து, அறிஞர்களின் பயனுக்காகவும் வெளியிடுவது அவசியமாகும்.

    அருங்காட்சியகம் :

    அகழாய்வுக்குப் பின்னர் அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களை அருங்காட்சியகத்தில் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்கக் காட்சிப்படுத்துவது அவசியமாகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:46:25(இந்திய நேரம்)