தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அரப்பா ஒரு சிந்து வெளி நாகரிக நகரம்

  • ஆனையூர்

    முனைவர் பா.ஜெயக்குமார்
    உதவிப் பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

    அறிமுகம் :

    தமிழ்நாட்டில் சைவ சமயப் பின்புலமுள்ள, சைவ இலக்கியங்கள் பேசுகின்ற சிறப்புமிக்க தலங்களுள் ஒன்றாக ஆனையூர் விளங்குகிறது. திருவிளையாடல் புராணத்தில் காட்டப்படும் வெள்ளை யானைக்குச் சாபம் தீர்ந்த படலம் இவ்வூர் தொடர்புடையதாக அறியப்படுகிறது. பாண்டிய நாட்டின் இடைக்கால வரலாற்றில் தனக்கென ஓர் இடத்தைப் பெற்றிருந்த ஆனையூர் இன்று தனது முக்கியத்துவத்தை இழந்து ஒரு குக்கிராமமாகக் காட்சியளிக்கிறது. எனினும், இவ்வூரில் உள்ள அருள்மிகு மீனாட்சி சமேத ஐராவதீசுவரர் கோயில் தொன்மைச் சான்றாக நிற்கிறது.

    அமைவிடம் :

    மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம் கட்டக்கருப்பன்பட்டி வருவாய் கிராமத்தின் பிடாகையாக ஆனையூர் அமைந்துள்ளது. மதுரையிலிருந்து தேனி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 29 கி.மீ தொலைவில் உள்ளது. உசிலம்பட்டி – மதுரை செல்லும் சாலையில் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பொட்டலுப்பட்டி என்ற ஊரை ஒட்டி வடக்காகச் செல்லும் கிராமச் சாலையில் சென்றால் 1 கி.மீ தொலைவில் ஆனையூர் உள்ளது. இவ்வூர் 1967ஆம் ஆண்டு வரை மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டத்திலும் பின்னர் 2.10.1967 முதல் புதிதாக உருவாக்கப்பட்ட உசிலம்பட்டி வட்டத்திலும் இருந்து வருகிறது.

    இயற்கை அமைப்பு :

    ஆனையூர் மூன்று புறங்களிலும் கண்மாய்களால் (கண்மாய் – என்பது இப்பகுதியில் பாசனத்திற்காக மழை நீரைச் சேமித்து வைக்கப் பயன்படுத்தும் ஏரியைக் குறிக்கும்) சூழப்பட்ட அமைப்பினைக் கொண்டதாகும். இவ்வூரின் மேற்கில் ஆனையூர் கண்மாய், வடக்கில் கட்டக்கருப்பன்பட்டி கண்மாய் மற்றும் தெற்கில் பொட்டலுப்பட்டி கண்மாயும் அமைந்துள்ளன. இதே போன்று, மேற்கில் தொம்பரைமலை (ஆண்டிபட்டி மலைத்தொடர்), வடக்கில் நாகமலைத்தொடர், தெற்கில் புத்தூர்மலை என இயற்கை அரணாக இம்மலைகள் அமைந்துள்ளன.

    ஊர்ச்சிறப்பு :

    இப்பகுதியில், திடியன் மலையில் பழங்கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான கற்கருவிகளும், புத்தூர்மலை மற்றும் ஆனையூர் போன்ற இடங்களில் இரும்புக்கால மக்கள் வாழ்ந்தமைக்கான முக்கியத் தடயமான கருப்பு சிவப்பு நிற பானைகளும், முதுமக்கள் தாழிகளும் கண்டிபிடிக்கப்பட்டுள்ளமை இவ்வூரின் தொன்மை வரலாற்றுச் சிறப்புகளைக் காட்டுவதாகும். எழுதப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் ஆனையூரின் பழமையான பெயர் திருக்குறுமுள்ளூர் என்பது தெரிய வருகிறது. ஆனையூரில் கிடைக்கின்ற கல்வெட்டுகளில் காலத்தால் முற்பட்டதாகக் கருதப்படும் சோழன் தலை கொண்ட வீரபாண்டியனின் (சோழன்தலை கொண்ட என்பது சோழ மன்னரின் தலையை வெட்டியவன் என்ற பொருள் அல்ல. சோழனை வென்று அவன் தலையில் வைத்திருந்த மணிமுடியை (crown) கொண்டவன் என்பது பொருளாகும். இது இம்மன்னனின் சிறப்புமிக்க பட்டமாகும்). இம்மன்ன்னின் கி.பி 956 ஆம் ஆண்டுக் கல்வெட்டு (இம்மன்னனின் வட்டெழுத்துக் கல்வெட்டும் இங்குள்ளது. இவ்வூரைத் திருக்குறுமுள்ளூர் எனக் குறிப்பிடுகிறது (ARE:336/1961-62). இம்மன்னன் இவ்வூரிலுள்ள கடவுளர் திருவக்வீசுவரரின் (திரு+அக்னி+ஈசுவரன்) உதவியால் மீண்டு பாண்டிய அரியணையைப் பெற்றதாகக் கல்வெட்டுக் குறிப்பிடுவதிலிருந்து (கல்வெட்டு வாசகம் : இராஜ்ஜியத்தைத் தந்தருளின நாயனார் திருக்குறுமுள்ளூர் உடையார் திருவக்னீசுவரமுடைய பரமசுவாமிகள்) அக்காலத்தில் இவ்வூரின் மதிப்பும் புகழும் கோயிலின் சிறப்பால் பாண்டிய அரசில் புனிதத்துடன் நன்கு மிளிர்ந்திருந்ததைக் காட்டுகிறது. திருக்குறுமுள்ளூர் என்பதை (திரு+குறு+முள்+ஊர் = திரு (புனிதமான)+குறு (குட்டையான) +முள் (முட்செடி)+ஊர் (இடம்/கிராமம்) எனப் பொருள் கொள்ளலாம். இவ்வூரில் குட்டையான முள்செடிகள் மிகுதியாகக் காணப்படுவதையும் இங்குச் சுட்டுதல் தகும்.

    சோழர் ஆட்சி பாண்டிய நாட்டில் நிலவிய போதும் திருக்குறுமுள்ளூர் என்ற பெயரே தொடர்ந்து வழங்கி வந்துள்ளது என்பதை இவ்வூரில் கிடைக்கப்பெற்ற முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம் இராஜேந்திரன் கல்வெட்டுகளின் வாயிலாக அறிய முடிகிறது. அப்போது இவ்வூர் இராஜராஜ பாண்டிய நாட்டின் முக்கிய வருவாய்ப் பிரிவுகளுள் ஒன்றான மதுராந்தகவளநாட்டிலிருந்த தென்கல்லக நாட்டுப் பிரிவில் அமைந்திருந்தது. சோழர் கட்டுப்பாட்டின்கீழ் பாண்டிய நாட்டின் ஆட்சியாளராக இருந்த சடையவர்மன் சுந்தரசோழபாண்டியன் காலத்தில் இவ்வூர் திருக்கோவிலூரான திருக்குறுமுள்ளூர் என அழைக்கப்படுவதை இவரது கி.பி 1023ஆம் ஆண்டுக் கல்வெட்டுச் சுட்டுகிறது. முன்னொட்டாக வரும் திருக்கோவிலூர் என்ற பெயர் மேற்சுட்டிய இவ்வூர் கோயிலின் சிறப்பினால் வந்திருக்க வேண்டும். பாண்டிய நாட்டில் சோழர் ஆதிக்கம் முடிவுற்ற பிறகு மீண்டும் பாண்டியர்களின் தன்னாட்சியை ஏற்படுத்திய பெருமைக்குரிய சடையவர்மன் ஸ்ரீவல்லபனின் ஆட்சிக் காலத்திலும் திருக்குறுமுள்ளூர் என்ற பெயர் நிலைத்திருந்ததை இம்மன்னனின் கி.பி. 1122ஆம் ஆண்டுக் கல்வெட்டு வாயிலாக அறியமுடிகிறது.

    மேற்சுட்டிய திருக்குறுமுள்ளூர் என்ற பெயர் கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரை பயன்பாட்டிலிருந்து பின்னர் ஆனையூர் என பெயர் மாற்றம் பெற்றிருப்பதை அறியமுடிகிறது. இப்பெயரே தற்பொழுதும் வருவாய் ஆவணங்களில் காணப்படுகிறது. விஜயநகர் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்டதாகக் கருதக்கூடிய கல்வெட்டு ஒன்று முதன்முதலில் இவ்வூரின் பெயரை ஆனையூர் எனக் குறிப்பிடுகிறது. மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் (1623-1654) வெளியிடப்பட்டுள்ள செப்புப்பட்டயம் ஒன்று இவ்வூர் தாலுகாவாக (Taluk Head Quarters) இருந்ததைத் தெரிவிப்பதோடு இம்மன்னன் நிருவாக நிமித்தமாக அடிக்கடி இவ்வூருக்கு வந்து தங்கிச் சென்றதையும் குறிப்பிடுகிறது. இது மதுரை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் பாண்டிய நாட்டு அரசின் சிறப்புக்குரிய பகுதியாக இருந்ததைக் காட்டுகிறது. ஆனையூர் பிற்காலங்களில் கோட்டையூர் என்றும் அழைக்கப்பட்டதாக அறியப்படுகிறது. இவ்வூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் முன்பு ஆனையூர் கோட்டையுடன் கூடிய நகரமாக இருந்தது எனவும் இதனால் இவ்வூர் கோட்டையூர் என அழைக்கப்பட்டதாகவும் கருத்துத் தெரிவிக்கின்றனர். மேலும், சொந்த பயன்பாட்டுக்காக நிலத்தைத் தோண்டும்போது பூமியிலிருந்து சுமார் 7 அடிக்குக்கீழே செங்கற்களால் உருவாக்கப்பட்ட சுவர்ப் பகுதிகள் ஆங்காங்கு சில இடங்களில் காணப்படுவதாகக் கூறுகின்றனர். இதை உறுதி செய்யும் வகையில் ஐராவதீசுவரர் கோயிலின் அருகில் உள்ள ஒரு கிணற்றின் மேற்குப் பக்கத்தில் செங்கற்சுவர் ஒன்று இன்றும் காணப்படுவது மேற்சுட்டிய கருத்துக்கு வலுசேர்ப்பதாக அமைகிறது.

    பாண்டியர் மற்றும் சோழர் காலத்தில் இவ்வூரில் நிலைப்படை (Standing Army) இருந்ததைச் சான்றுகளின் மூலம் அறியமுடிகிறது. இவ்வூரில் முகமதியர்களின் தாக்கம் இருந்ததற்கான எச்சங்களும் காணப்படுகின்றன. விஜயநகர் கல்வெட்டு ஒன்று இவ்வூரை ‘தென்னாட்டு ராயர் மடமான ஆனையூர்’ எனக் குறிப்பிடுகிறது. பாண்டிய மன்னர்களின்கீழ் சிற்றரசாக விளங்கிய வாணாதிராயர்களின் அரசு சார்ந்த செயல்பாடுகளும் இங்கு காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு, அரசு மரபுகளின் காலங்களில் தொடர்ச்சியாக முக்கிய இடத்தைப் பெற்றிருந்த ஆனையூர் ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழும் முக்கிய இடத்தைப் பெற்றிருந்ததை அக்காலத்தைச் சேர்ந்த ஆவணங்களில் இப்பகுதியின் பெரும்பான்மை சமூகத்தினரைக் குறிப்பிடும் இடங்களில் “ஆனையூர் கள்ளர்கள்” என அழைப்பதிலிருந்து இவ்வூருக்கு இருந்த தலைமைப் பண்பு நன்கு வெளிப்படுவதைக் காணலாம்.

    புராணச் சிறப்பு :

    திருவிளையாடல் புராணத்தின் நிகழ்வு ஒன்று இவ்வூரோடு தொடர்புபடுத்தப்படுவது வரலாற்றுச் சிறப்புக்குரிய ஒன்றாகும். இப்புராணத்தில் வெள்ளை யானைக்குச் சாபம் கொடுத்த பகுதி ஒன்று இருப்பது யாவரும் அறிந்த ஒன்றாகும். ஒரு முறை இந்திரனின் அவைக்கு வருகை புரிந்த துர்வாச முனிவர் தான் இந்திரனுக்கு மரியாதை செலுத்துவதற்காகக் கொண்டு வந்திருந்த மலரினை இந்திரனின் வாகனமான வெள்ளை யானையிடம் கொடுக்க அம்மலரினை யானை கீழே போட்டு தன் கால்களினால் மிதித்து முனிவரை அவமானப்படுத்துகிறது. அவமானத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத முனிவர் யானையின் மீது சாபமிட்டு அந்த யானையைக் கருப்பு நிறமாக ஆகும்படி செய்துவிடுகிறார். யானையோ தான் மீண்டும் வெள்ளை நிறத்தைப் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் மதுரையிலிருந்து மேற்கு திசை நோக்கி ஓடிவந்து முட்புதர்களால் சூழப்பட்ட வேடர்கள் அடங்கிய பகுதியான ஓர் இடத்தை அடைந்து அங்கு ஒரு சுயம்பு லிங்கத்தையும் அதனருகிலிருந்த புனிதப் பொற்றாமரைக் குளத்தையும் காண்கிறது. அப்பொற்றாமரைக் குளத்தில் தொடர்ந்து நீராடி மேற்படி சிவலிங்கத்தை வணங்கி, வழிபட்டு மீண்டும் தனது உண்மை நிறமான வெள்ளை நிறத்தைப் பெற்றுப் பின்னர் அவ்விடத்தில் தனது பெயரால் ஓர் ஊரையும் நிர்மாணித்துப் பின்னர் அங்கேயே இறப்பதாகக் காட்டப்படுகிறது. கி.பி 12-13 ஆம் நூற்றாண்டில் பரஞ்சோதி முனிவரால் எழுதப்பட்ட திருவிளையாடல் புராணத்தில் காட்டப்பட்டுள்ள இயற்கை அமைப்பையும் இவ்வூரின் அமைப்பையும் உற்றுநோக்கினால் இரண்டும் ஒன்றே என்பது நன்கு தெளிவாகும். மேலும், ஊரின் பெயர் ஆனையூர் எனவும், இங்குள்ள கோயிலின் பெயர் ஐராவதீசுவரர் கோயில் எனவும் வழங்கப்பட்டு வருவது மேற்சுட்டிய புராணக் கதையோடு ஒன்றி வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும், மதுரைக்கு மேற்கே (திருவிளையாடல் புராணத்தில் குறிப்பிடுவதுபோல்) இது போன்ற ஒற்றுமைகளைக் கொண்ட ஊர் வேறு எதுவும் இல்லை என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. எனவே, திருவிளையாடல் புராணம் சுட்டும் இடம் இந்த ஆனையூரே எனத் துணியலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:47:15(இந்திய நேரம்)