தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • வடக்கத்திய மெருகேற்றப்பட்ட கருப்பு நிறப் பானை வகை

  (NBPW)

  முனைவர் வீ.செல்வகுமார்
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை
  தமிழ்ப் பல்கலைக்கழகம்
  தஞ்சாவூர் 613010

  கருப்பு நிறத்தில் மெருகேற்றப்பட்டு, வட இந்தியாவில் அதிகமாகக் கிடைப்பதால் வடக்கத்திய மெருகேற்றப்பட்ட கருப்பு நிறப் பானை (Northern Black Polished ware Culture) என இவ்வகைப் பானை பெயர் பெற்றது. இப் பானை வகை பயன்படுத்திய பண்பாடு, வடக்கத்திய மெருகேற்றப்பட்ட கருப்பு நிறப் பானை வகைப் பண்பாடு எனப் பெயரிடப்பட்டது.

  இது வட இந்தியவில் கங்கை-யமுனைச் சமவெளியை மையமாகக் கொண்டு காணப்படுகின்றது. இப்பண்பாட்டிற்கு முன் நிலவிய, சாம்பல் நிற ஓவியம் தீட்டப்பட்ட பானை வகைப் பண்பாட்டுக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இரும்புத் தொழில்நுட்பம் கங்கை-யமுனைச் சமவெளிப்பகுதியில் கிராமங்கள் வளர ஒரு முக்கியமான காரணி என்று கருதப்படுகின்றது. வடக்கத்திய மெருகேற்றப்பட்ட கருப்பு நிறப் பானை வகைப் பண்பாடு, வரலாறு சார்ந்த மற்றும் வரலாற்று ஆரம்ப காலங்களில் நிலவியதால், இப் பண்பாட்டுக் காலத்தைப்பற்றி அறிய சில ஆவணங்களும் உதவுகின்றன. இந்தப் பண்பாட்டின் பின்னணியில்தான் புத்த-சமண சமயங்கள் வளர்ந்து பரவ ஆரம்பித்தன, முத்திரைக் காசுகள் (Punch-marked coins) மற்றும் பிராமி எழுத்து முறை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. இக்கால கட்டத்தில்தான் இரும்புத்தொழில் நுட்பமும் பரவலாக்கப்பட்டது. நகரங்கள் எழுந்தன. இப் பானைவகைப் பண்பாடு இராமாயண நிகழ்வுகளுடனும் தொடர்புடையதாகக் கருதப்படுகின்றது.

  வரலாறு சார்ந்த காலக்கட்டத்தில், வட இந்திய கங்கை-யமுனைச் சமவெளியில் நிலவிய பண்பாடுகளில் மூன்று பண்பாடுகள் மிக முக்கியமானவை. அவையாவன பின்வருமாறு;

  1. காவி நிறம் பூசப்பட்ட பானை வகைப் பண்பாடு Ochre Coloured Pottery (Copper Hoard) Culture (OCP) 2000-1500 BCE

  2. சாம்பல் நிற, கருப்பு ஓவியம் தீட்டப்பட்ட பானை வகைப் பண்பாடு Painted Grey Ware Culture (PGW) 1500-600 BCE (Habib and Thakur: 2004: 93)

  3. வடக்கத்திய மெருகேற்றப்பட்ட பானை வகைப் பண்பாடு Northern Black Polished Ware Culture (NBPW) 700-200 BCE.

  இரும்புக்காலத்தின் இறுதிக்கட்டத்தில், அதாவது சாம்பல் நிற, கருப்பு ஓவியம் தீட்டப்பட்ட பானை வகைப் பண்பாட்டிற்குப் பிறகு, வடக்கத்திய மெருகேற்றப்பட்ட பானை வகைப் பண்பாடு தோன்றியது. சாம்பல் நிறப் பானை வகைப் பண்பாடு இந்தியாவின் இரண்டாவது நாகரிகம் என்று அல்சின் மற்றும் அல்சின் குறிப்பிடுவது இங்கு நோக்கத்தக்கது (Allchin and Allchin 1968: 212). அதாவது சிந்துவெளி நாகரிகம் இந்தியாவின் முதல் நாகரிகம் மற்றும் நகரமயமாக்க நிலையாகும். வடக்கத்திய மெருகேற்றப்பட்ட பானை வகைப் பண்பாடு இந்தியாவின் இரண்டாவது நாகரிகம் மற்றும் நகரமயமாக்கலைச் சேர்ந்தது.

  காலப் பரவல்

  வடக்கத்திய மெருகேற்றப்பட்ட பானை வகை பொ.ஆமு. 700 முதல் 200 வரையான காலகட்டத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது. இரும்புக்காலத்தின் இறுதியில் சுமார் பொ.ஆமு. 700 ஆண்டளவில் தோன்றியதாகக் கருதப்படும், இப் பானை வகை மௌரியர் காலத்திலும் வழக்கத்தில் இருந்தது (Jain 2006, ð 35).

  இடப்பரவல்

  பண்பாட்டுப் பொருட்களின் இடப்பரவலை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதல் வகையில், ஒரு பானைவகை அதிக அளவில் தொடர்ச்சியாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் பரவியிருந்தால், அப்பகுதி அப்பண்பாட்டின் மையப்பகுதியாகும். இரண்டாவது வகையில் ஒரு பண்பாட்டைச் சேர்ந்த பானைகள், அப்பண்பாட்டின் மையப்பகுதிக்கு வெளியே காணப்படும் போது, பண்பாட்டுப் பரவல், வணிகம், மக்கள் குடிப்பெயரல் போன்ற காரணிகளால் பரவியிருக்கலாம் என்று ஊகிக்கலாம்.

  இந்த வடக்கத்திய மேருகேற்றப்பட்ட கருப்பு வகைப் பானைப் பண்பாடு, கங்கைச் சமவெளியிலிருந்து பஞ்சாப் பகுதி வரை தொடர்ச்சியாகப் பரவிக் காணப்பட்டது. அண்மையில் அகழாய்வு செய்யப்பட்ட அயோத்தியாவிலும் இது காணப்படுகின்றது. மத்திய இந்தியா, தென்னிந்தியா, கிழக்கிந்தியா, வங்காள தேசம் மற்றும் இலங்கையில் இது குறைந்த அளவில் காணப்படுகின்றது. கிழக்கிந்தியாவில் இவ்வகைப் பானையோடுகள் சந்திரகேதுகர், பான்கர், மகாஸ்தான், மங்கல்கோட் போன்ற இடங்களில் கிடைக்கின்றன. வங்காள தேசத்தில் வாரி பாதேஷ்வர் மற்றும் பாசு பிகார் ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன (Saturday, December 27, 2008, Daily Star, Bangladesh). ஓரிசாவில் இராதா நகர் மற்றும் சிசுபால்கர் ஆகிய இடங்களில் காணப்படுகின்றது. தென்னிந்தியாவில், ஆந்திரப் பிரதேசம், கர்னாடகா மற்றும் தமிழகத்திலும் இது கிடைத்துள்ளது.

  தமிழகத்தில்

  தமிழகத்தில் இப்பானை வகை, சில இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழக வரலாற்று ஆரம்பகால மற்றும் சங்க காலத் தொல்லியல் இடங்களான கொடுமணல், கொற்கை மற்றும் அழகன்குளம் ஆகிய இடங்களில் வடக்கத்திய மெருகேற்றப்பட்ட பானை ஓடுகள் சில கிடைத்துள்ளன. இது வட இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் உள்ள தொடர்பை உணர்த்துகின்றது.

  இலங்கையில் அனுராதபுரத்திலும் இப்பானை வகைத் துண்டுகள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், திசாமகாராமா பகுதியில் உள்ள அகுரகோடாவலும் இது கிடைத்துள்ளது. இது புத்த சமயத்தாராலும் வணிகர்களாலும் இலங்கைக்கு கொண்டுசெல்லப் பெற்றிருக்கலாம்.

  பண்பாட்டுக்கூறுகள்

  இப்பண்பாட்டின் சில தொல்பொருட்கள் அரப்பா பண்பாட்டுக் காலத் தொல்பொருட்களை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இக் காலகட்டத்தில் களிமண்ணால் ஆன கற்கள், சுட்ட செங்கற்கள் ஆகியவை வீடுகட்டப் பயன்படுத்தப்பட்டன. மேலும் தந்தத்தினாலான தாயக்கட்டைகள் மற்றும் எடைக்கற்கள், அரப்பா பண்பாட்டுப் பொருட்களை ஒத்துள்ளன. முன்பு கூறியது போல இப் பானை வகை நகரமயமாக்கத்துடன் தொடர்புடையது. இக்காலத்தில் அரிசி, சோளம் மற்றும் பிற தானியங்கள் உணவாக உண்ணப்பட்டன. இக்காலத்தில் சில வீடுகளில் சாக்கடைகளும் இருந்தன. அவை கழிவுநீர்க் குட்டைகளுடன் இணைக்கப்பட்டிருந்தன.

  பானையின் தன்மை

  இந்த வகைப் பானைகள் மிகவும் சிறப்பானவை, தனித்தன்மை பெற்றவை. இப் பானை ஓடுகளின் மையப்பகுதி (Core), சாம்பல் நிறத்தில் காணப்படுகின்றது. இவை நன்கு தயார் செய்யப்பட்ட களி மண்ணால் உருவாக்கப்பட்டவை. இது ஒரு சொகுசு வகைப் பானை (Deluxe Ware) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றது. இது மெல்லியாதகவும், நல்ல தரத்துடனும் காணப்படுகின்றது. மேற்பரப்பில் மிகவும் வழவழப்பான, கருப்பு நிறப் பூச்சு காணப்படுகின்றது. இது கருப்பு நிறப் பானை என்றழைக்கப்பட்டாலும், எல்லா பானைகளும் கருப்பாகக் காணப்படுவது இல்லை. எஃகு நீலம், வெண்கலம், இளஞ்சிவப்பு, வெள்ளி, தங்கம், ஆரஞ்சு போன்ற நிறங்களிலும் இது காணப்படுகின்றது. ஆல்கலி வகைப் பொருளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கலவையைப் பானையைச் சுடுவதற்கு முன், மேற்பரப்பில் பூசியதால் இந்த வழவழப்பான மெருகு உருவானதாகக் கருதப்படுகின்றது. இரும்பு ஆக்ஸைடுகளைப் பயன்படுத்தி இதை உருவாக்கியிருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது. இதன் மெருகு கண்ணாடி போன்ற பிரதிபலிப்பை உடையது.

  பானை வடிவங்கள்

  இப்பானையின் முக்கிய வடிவங்கள் அடைப்புகுறி வடிவ (உள் வாங்கிய) ‘()’ மற்றும் நேரான பக்கங்கள் உள்ள தட்டுக்கள், மற்றும் கிண்ணங்கள், குமிழ்கள் உள்ள மூடிகள், உடல்பகுதியில் கோண வளைவுள்ள (Carinated) பானைகள் ஆகியவைகளாகும். இந்தப் பானை வகையில் மிகப் பெரிய அளவு பாத்திரங்கள் இல்லை. இதன் சில வடிவங்கள் சாம்பல் நிற, கருப்பு ஓவியம் தீட்டப்பட்ட பானையை ஒத்தவை.

  இது இந்தியாவில் உருவாக்கப்பட்ட பானை வகைகளில் மிகவும் உயர்ந்ததாகக் கருதப்படுகின்றது. இது மேட்டுக்குடி மக்களால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது. சில நேரங்களில் இதில் ஓவியங்கள தீட்டப்பட்டுள்ளன. நேர் கோடுகள், கிடைக்கோடுகள், குறுக்குக்கோடுகள் ஆகிய சில எளிமையான ஓவிய வடிவங்கள் இப்பானை வகை மீது காணப்படுகின்றன.

  உற்பத்தி செய்த முறை

  இது நன்கு தயார் செய்யப்பட்ட களிமண்ணைக்கொண்டு வேகமாகச் சுழலும் சக்கரத்தின் உதவியால் செய்யப்பட்டது. இந்தக் களிமண்ணில் பெரிய அளவு துகள்கள் மற்றும் கசடுகள் (impurities) இல்லை. இது அதிக வெப்ப நிலையில் சுடப்பட்டு, நன்கு குளிரூட்டப்பட்டதாகக் கருதப்படுகின்றது. ஆனால், இதன் வெப்பநிலை அளவைக் கட்டுப்படுத்த முடியாததால் சில நேரங்களில் இது கருப்பல்லாத பிற நிறங்களைப் பெற்றது என்றும் கூறப்படுகின்றது.

  உயர் வகைப் பானை

  இதன் மீதுள்ள வழவழப்பு இது ஒரு உயர்ந்த வகைப் பானை (Deluxe Ware) என்பதற்குச் சான்றாகும். இவ்வகைப் பானை ஒன்றில் செம்பு ஆணி பயன்படுத்தி ஒட்டி (rivet) சீரமைப்பு செய்யப்பட்டதாற்கான சான்று பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ரோப்பரில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது ஆகும். இவ்வகைப் பானைகள் உணவு உண்ணப் பயன்படுவதால், மேசை வகைப் பானை (Table Ware) என்று அழைக்கப்படுகின்றன.

  வடக்கத்திய மெருகேற்றப்பட்ட கருப்பு மற்றும் ரூலட்டட் பானை வகைகளின் தொடர்பு

  தமிழகத்தில் கொற்கை, அழகன்குளம், பாண்டிச்சேரியில் அரிக்கமேடு, கேரளாவில் பட்டணம் போன்ற சங்ககால-வரலாற்று ஆரம்பகால இடங்களில் காணப்படும் ரூலட்டட் (Rouletted Ware Dish) மற்றும் பிற நுண்ணிய துகளைமைந்த (Fine grained) தட்டு வகைகள் தரத்தில் வடக்கத்திய மெருகேற்றப்பட்ட கருப்பு வகைப் பானைகளுடன் ஒத்து இருப்பதைக் காணலாம். இவற்றை வடக்கத்திய மெருகேற்றப்பட்ட கருப்பு பானை வகையின் ஒரு பிரிவு எனவும் கருத வாய்ப்புண்டு.

  வரலாற்று முக்கியத்துவம்

  வடக்கத்திய மெருகேற்றப்பட்ட கருப்புப் பானை வகை, வட இந்தியாவில் பொருட்பண்பாட்டு வளர்ச்சி, (material cultural development), வணிகமயமாக்கம் (Commercialization) மற்றும் கைவினைத் தொழில் நுட்பச் சிறப்பு (craft development) ஆகியவற்றுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகின்றது. மகாஜனபதங்கள், சைசுநாகர்கள், நந்த வம்சம், மகதம், மௌரிய வம்சம் ஆகியவற்றின் வளர்ச்சி இந்தப் பண்பாட்டுக் காலத்தில்தான் நடைபெற்றது. மேலும் இப் பானை வகை, வட இந்தியாவின் சிறப்பான சமூக உருவாக்கத்துடன் தொடர்புடையது எனலாம். இக் காலத்தில்தான் முத்திரை நாணயங்களும் பிராமி எழுத்தும் அறிமுகப்படுத்தபட்டன.

  இந்தப் பானை வகை உருவாவதற்குச் சமூகத்தில் நிலவிய வகுப்பு வேறுபாடுகள், மற்றும் பொருளாதார வளர்ச்சி காரணமாக இருந்திருக்கலாம். இது மேலை நாட்டு கிரேக்க நாட்டுப் பானை வகைகளுடன் ஓரளவு ஒத்திருப்பதால் இது மேலை நாட்டு நாகரிகத் தாக்கத்தினால் உருவாகியிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது. ஆனால், இது சாம்பல் நிற, ஓவியம் தீட்டப்பட்ட பானை வகைப் பண்பாட்டின் தொடர்ச்சியாக ஏற்பட்ட ஓர் உள்ளூர் வளர்ச்சி என்றும் கருத இடமுண்டு.

  ரூலட்டட் பானை (தட்டுகள்) வகை அறிமுகப் படுத்துவதற்கு முன்பிலிருந்தே, அதாவது பொ.ஆமு. 300க்கு முன்னரே, வடக்கத்திய மெருகேற்றப்பட்ட பானை வகை இந்தியப்பெருங்கடற் பகுதியில் பரவத் தொடங்கியிருக்கலாம். இப்பானை வகை வணிகர்கள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் சமயம் சார்ந்தவர்களால் பிற பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பெற்றிருக்கலாம்.

  மேற்கோள் நூல்

  Allchin, B. and R. Allchin. 1968. Indian Civilization: With a New Introduction. New Delhi: Penguin Books

  Habib, Irfan and V.K. Thakur 2004. The Vedic Age. New Delhi: Tulika Books.
  Jain, V.K. 2006. Prehistory and Proto History of India: An Appraisal. New Delhi: D.K. Print world

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:02:48(இந்திய நேரம்)