தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • திருவையாறு

  முனைவர் வீ.செல்வகுமார்
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

  காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் ஓடி நிலத்தைச் செழிப்பாக்கும் இடத்தில் அமைந்துள்ளது திருவையாறு. ஐந்து ஆறுகள் ஓடுவதால், திருவையாறு (திரு+ஐந்து+ஆறு) எனப் பெயர் பெற்றது.

  அமைவிடம்

  இது தஞ்சாவூரிலிருந்து அரியலூர் செல்லும் சாலையில் வடக்கே 13 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

  சிறப்பு

  இது ஒரு பண்பாட்டு மையமாகும். கோவில்களும் ஆற்றுத் துறைகளும் இதற்கு அழகூட்டுகின்றன. பஞ்சநதிஸ்வரர் என்றழைக்கப்படும் ஐயாறப்பர் கோவில் சோழர் கால கட்டக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. முதலாம் இராசராசன் மற்றும் முதலாம் இராசேந்திரனின் மனைவிகளால், உத்தரகைலாசமும், (இருகோயில்கள்) தட்சிண கைலாசமும் கட்டப்பட்டுள்ளன. இக்கோயிலில் உயர்ந்த திருச்சுற்று மாளிகைகள், தூண்களைக் கொண்ட மண்டபங்கள் மற்றும் முக்தி மண்டபம் ஆகியவை உள்ளன. இவ்வூர் நாயன்மார்களால் பாடப்பெற்று இலக்கியத்திலும் இடம்பெற்றுள்ளது.

  இசை மூவர்களில் ஒருவராகத் திகழ்ந்த தியாகராஜ சுவாமிகளின் சமாதி அமைந்துள்ள இடத்தில் ஆண்டிற்கு ஒருமுறை தியாகராஜரால் இயற்றப்பட்ட ‘பஞ்சரத்னக் கீர்த்தனை’ நாடுதோறும் உள்ள இசைக் கலைஞர்களால் பாடப்பெற்று இசை ஆராதனை நடத்தப்பெறுகிறது.

  இங்குள்ள கோயிலில் சில பிற்கால ஓவியங்கள் உள்ளன. மராட்டியர் காலக் கட்டடங்கள் இன்றும் இவ்வூருக்கு மரபியல் தோற்றத்தை அளிக்கின்றன. அக்காலத்தில், பாலங்கள் இல்லாத போது ஓடங்களின் வழியாக மக்கள் ஆற்றைக் கடந்து சென்றனர். இது குறித்த செய்திகளை இன்றுள்ள தெருக்களின் பெயரிலிருந்து அறியலாம். எ.கா. ஓடத்துறைத் தெரு.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:06:15(இந்திய நேரம்)