தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • தாழி்

    முனைவர் வீ.செல்வகுமார்
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

    தாழி, பழங்காலத்தில் இறந்தவர்களைப் புதைக்கவும் அல்லது இறந்தவர்களின் சில உடல் எலும்புகளை வைத்து ஈமச் சடங்குகள் செய்யவும் பயன்படுத்தப்பட்ட ஒரு (சுடு) மண் பானையாகும்.

    தாழி, கிராமப் புறங்களில் முதுமக்கட் தாழி, “மதமதக்கா”, “சாலு”, சாடி என்று அழைக்கப்படுகின்றது. தொம்பை, சாரா (கேரளாவில்) என்ற பெயர்களும் இதற்கு உண்டு. தாழிகள் மண்ணில் புதைந்து காணப்படும்

    மூடியுடன் தாழி, மண்ணில் புதைந்துள்ளது மதுரை மாவட்டம்

    சங்க இலக்கியக் குறிப்புகள்

    தாழிகளைப் பற்றிச் சங்க இலக்கியங்களில் பல சுவையான குறிப்புகள் உள்ளன.

    “கலஞ்செய் கோவே! கலஞ்செய் கோவே” என்ற சங்கப்பாடல் ஒரு குயவனை நோக்கி, ஒரு பெண் பாடுவது போல அமைந்துள்ளது. தன் கணவனுடன் அவள் வண்டிச் சக்கரத்தில் ஓட்டி வந்த பல்லி போல இந்தப் பகுதிக்கு வந்தாள். அப்போது அவன் இறந்துவிட்டான். எனவே எங்கள் இருவருக்கும் பெரியதாக ஒரு தாழியைச் செய் என்று அவள் குயவனைக் கேட்பது போல உருக்கமாக உள்ளது இப்பாடல்.

    தாழிகளின் வடிவம்

    தாழிகள் குறுகலான வாய்பகுதியையும், அகன்ற உடல் பகுதியையும் குறுகிய அடிப்பகுதியையும் கொண்டிருக்கும். சில தாழிகள் “பீட்ரூட்” வடிவத்தில் அடிப்பகுதி சற்று கூறாகக் காணப்படுகின்றன. இவை பல வடிவங்களில் காணப்படும்.

    பானை வகை

    இவை பெரிதும் சிவப்பு நிறத்தில் காணப்படும் குறிப்பாக ஆதிச்சநல்லூரில் கிடைத்த சில தாழிகள் உட்புறம் கருப்பாகவும்,வெளிப்புறம் சிவப்பாகவும் கருப்பு-சிவப்புப் பானை வகையையொத்து காணப்படுகின்றன. இவ்வகைத் தாழிகள் மிக அரிதாகவே காணப்படும்.

    தாழிகள் பற்றிய கதையாடல்கள்

    கிராமப் புறங்களில் தாழிகளைப் பற்றிய ஒரு கதை நிலவுகின்றது. அக்காலத்தில் வயதானவர்கள் குருவி போலச் சிறியதாகக் கூனிக்குருகி ஆகிவிடுவார்கள் என்றும், அவர்கள் நீண்டகாலம் உயிரோடு இருப்பார்கள் என்றும், அவர்களை உயிருடன் தாழிகளில் வைத்து, அவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீரைச் சிறிய பாத்திரங்களில் வைத்துப் புதைத்து விடுவார்கள் என்றும் மக்கள் கூறுகின்றனர். இது உண்மையல்ல. ஏனெனில் தமிழகத்திலும் ஆயிரக்கணக்கான தாழிகள் 19 ஆம் நூற்றாண்டிலிருந்து அகழப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் இதற்கான தொல்லியல் சான்றுகள் இல்லை. அதாவது குறுகிய மனிதர்களின் உடல் எலும்புகள் கிடைக்கவில்லை. இக்கதை தமிழகம் மற்றும் தென்னிந்திய முழுவதும் நிலவுகின்றது.

    தாழிகளில் புதைக்கும் விதம்

    தாழி, அணைக்கரைப்பட்டி, மதுரை மாவட்டம்

    தரையில் குழிகள் தோண்டி தாழிகள் புதைக்கப்பட்டன (படம் 2). அவை சில இடங்களில் நேராகவும், சில இடங்களில் சரிவாகவும் புதைக்கப்பட்டன. இவற்றின் மேல் சுடுமண் மூடிகள் அல்லது பெரிய கிண்ணங்கள் மூடிகளாக கவிழ்த்து வைக்கப்பட்டன. சில இடங்களில் மூடுகற்கள் அதாவது கற்பலகைகள் வைத்து மூடப்பட்டன (படம் 1). இதன் மேல் மண் இட்டு பின்னர் கற்கள் குவித்து வைக்கப்பட்டு கல்வட்டம் அல்லது நெடுங்கற்கள் (menhir) நடப்பட்டன.

    தாழிகளில் எலும்புகள்

    தாழிகள் எல்லாவற்றிலும் முழு மனித எலும்புக்கூடு காணப்படுவதில்லை. சிலவற்றில் முழு எலும்புக் கூடுகளும், பலவற்றில் சில எலும்புகளும் மட்டும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இது இறப்பிற்குப் பின், சில காலம் கழித்து எலும்புகள் சேகரித்து தாழிகளில் புதைக்கப்பட்டதை உணர்த்துகின்றது.

    தாழிகளில் அணி வேலைப்பாடுகள்

    வெளிப்புறம் அணிவேலைப்பாடுள்ள தாழி

    தாழிகளின் மேல் ஒட்டுருவங்கள் காணப்படுகின்றன (படம் 3). தாழிகள் சுடப்படுவதற்கு முன் களிமண் கொண்டு, ஒரு செ.மீ அளவில் அகலத்திலும், அரை செ.மீ உயரத்திலும் களிமண்ணைக் கழுத்தைச் சுற்றி வைத்து விட்டு, அதன் மீது கட்டை விரல் கொண்டு இடைவெளி விட்டு அழுத்தி ஒருவகை வேலைப்பாட்டை உருவாக்கினார்கள். இவை சில நேரங்களில் முடிச்சு இட்ட கயிறு போன்ற அமைப்பிலும் மற்றும் பல விதங்களிலும் அமைக்கப்படுகின்றன. ஆதிச்சநல்லூரில் பெண்ணுருவம், நெற்கதிர், மான் ஆகியவை இவ்வாறு ஒட்டுருவமாக ஒரு பானை ஓட்டில் காணப்பட்டன. ஆனால் அது ஒரு தாழியின் பகுதியா என்பது தெரியவில்லை. தாழிகளின் உள்ளே கொக்கி போன்ற பகுதிகள் சிலவற்றில் காணப்படுகின்றன (படம் 4).

    தாழியின் உள்ளே காணப்படும் கொக்கி போன்ற பகுதிகள்

    காணப்படும் இடங்கள்

    தமிழகம் மற்றும் தென்னாடெங்கும் இவை காணப்படுகின்றன (படம் 5). ஆதிச்ச நல்லூர் அமிர்தமங்கலம் ஆகியவை மிகப் புகழ்பெற்ற தாழிகளுள்ள பெருங்கற்கால ஈமச்சின்ன இடங்களாகும். குறிப்பாக இவை கடற்கரை மற்றும் ஆற்றுப்படுகைப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. சில கற்பதுக்கைகளின் (Cist) உள்ளேயும் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:14:31(இந்திய நேரம்)