தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சேர மன்னன் மாக்கோதைக் காசு

 • வல்லம் தமிழ்க் கல்வெட்டு்

  முனைவர் மா.பவானி
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

  அமைவிடம் : செங்கல்பட்டு மாவட்டம் , வல்லம்
  மொழி : தமிழ்
  எழுத்து : முந்தைய காலத் தமிழ் எழுத்து
  காலம் : பொ.ஆ. 7ஆம் நூற்றாண்டு
  மன்னன் : பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன்

  குறிப்பு

  எழுத்தமைதியின்படி காலத்தால் முற்பட்ட தமிழ் எழுத்துக் கல்வெட்டு. கல்வெட்டு வெளியிடப்பெற்ற அரசரின் பெயரும் விருதுப்பெயர்களும் இடம்பெறும் முதல் தமிழ்க் கல்வெட்டு

  .

  கல்வெட்டுப் பாடம்:

  பகாப்பிடுகு லளிதாங்குரன்
  சத்துரும்மல்லன் குணபரன்
  மயிந்திரப் போத்தரசரு அடியான்
  வயந்தப் பிரியரசரு மகன் கந்தசேன
  ன் செயிவித்த தேவகுலம்

  செய்தி:

  பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனின் அடியானாகிய வயந்தப் பிரியரசனின் மகன் கந்தசேனன் என்பவர் கட்டுவித்த கோயில் என்று கல்வெட்டு கூறுகிறது. தேவகுலம் என்ற சொல்லாட்சி கோயிலைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ''அடியான்'' என்பது பணியாள் அல்லது அடிமை என்று பொருள்படும். மகேந்திர மன்னனின் மீதுள்ள பற்றினால் இவ்விதம் தன்னை அழைத்துக்கொண்டிருக்கலாம். பாரதியார் மீதுள்ள பற்றினால் பாரதிதாசன் என்று பெயர் கொண்டுள்ளது போல் இக்கல்வெட்டில் வயந்த பிரியரசர் குறிப்பிடப்பெறுகிறார். மகேந்திர வர்மனின் அரசு அலுவலராக அவருக்கு அடுத்த நிலையில் கூட இவர் இருந்திருக்காலம்.
  பகாப்பிடுகு, லளிதாங்குரன், சத்ருமல்லன், குணபரன் போன்ற மகேந்திரவர்மனின் பட்டப்பெயர்கள் இதில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

   

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:55:53(இந்திய நேரம்)