தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சேர மன்னன் மாக்கோதைக் காசு

 • வரலாற்றுப் புனரமைப்பில் கல்வெட்டுக்களின் பங்கு

  முனைவர் மா.பவானி
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

  கல்வெட்டியல் என்பது பொதுவாக எழுத்துக்களைப் பற்றிப் படிக்கும் ஒரு இயலாகும். கல்லில் எழுதப்பெற்ற எழுத்துக்களை மட்டுமே குறிக்காது. Epigraphy என்ற ஆங்கிலச்சொல் கிரேக்க மொழியிலிருந்து தருவிக்கப்பெற்றதாகும். ''Epi'' என்றால் மேல் "on" or "upon" என்று பொருள். "graphy" என்பதற்கு எழுதப்பட்டது என்று பொருள். Inscription என்பதற்கு இலக்கணப்படி எழுத்து என்று பொருள். அது எந்தப் பொருளில் வேண்டுமானாலும் இருக்கலாம். இந்தியாவில் பொதுவாக எழுத்துப்பொறிப்புகள் பாறைகளிலும், கற்களிலும், உலோகத்திலும், மரப்பட்டைகளிலும், தூண்களிலும், கற்பலகைகளிலும், பட்டையங்களிலும், நாணயங்களிலும், முத்திரைகளிலும் காணப்படுகின்றன. கல்வெட்டுக்கள் அதில் இடம்பெறும் செய்திகளைப் பொறுத்து அதன் அளவில் வேறுபடுகின்றன. சில கல்வெட்டுக்கள் ஓரிரு வரிகள் மட்டுமே கொண்டு விளங்குகின்றன.

  எடுத்துக்காட்டாக, புனிதப்பயணம் செய்யும் பயணிகள் தமது பயணத்தை நினைவுறுத்தச் சுவற்றில் தமது பெயரைப் பொறித்துச் செல்கின்றனர். சில இடங்களில் ஜாதக கதைகளின் உருவங்களை வரைந்துள்ளனர். சில பெரிய கல்வெட்டுக்கள் கடவுள் உருவங்கள் செய்து கொடுத்ததைப் பற்றிச் சொல்கிறது. இவ்வகையில் போரில் மறைந்த வீரர்களுக்காகவும் கல்வெட்டுக்கள் வெட்டப்பட்டுள்ளன. சில சமயங்களில் காவியங்களே கல்வெட்டுக்களாக வடிக்கப்பட்டுள்ளன. உதைப்பூர், ராஜசமுத்திர கல்வெட்டுக்கள் இவ்வகையைச் சார்ந்தவை. இதற்கு "ராஜ பிரஸஸ்தி காவியா" என்று பெயர். நாடகங்களும் கல்வெட்டுக்களாக வடிக்கப்பட்டுள்ளன (ஆஜ்மீரின் லலிதா விக்ரஹ ராஜா, ஹரகேலி நாடகம்). புதுக்கோட்டை மாவட்டக் குடுமியான்மலை கல்வெட்டுக்கள் இசைக்குறிப்புகளை வெளிப்படுத்துவனவாக உள்ளன.

  1839இல் The History of India என்ற நூலை எழுதிய எல்பின்ஸ்டோன் இந்திய வரலாற்றைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பது சுட்டத்தக்கது. "அலெக்ஸாண்டர் படையெடுப்பிற்கு முன் உள்ள சமுதாய நடவடிக்கைகள் எவற்றிற்கும் சரியான காலம் நிச்சயிக்கப்படவில்லை. முகமதிய படையெடுப்பு வரையிலும் தேசிய நடவடிக்கைகளின் தொடர்ச்சி அறியப்படவில்லை. 1866ல் நூல் எழுதிய கோவெல் என்பவரும் இதை ஏற்றுள்ளார். இந்துக்களுடன் அயல் நாட்டினர் தொடர்பு கொண்ட பிறகே நம்மால் தெளிவான விவரங்களை அறிய முடிகிறது. எனவே, இந்திய வரலாற்றை முழுமையாக அறிவதற்கு வரலாற்று அறிஞர்களும் பல முயற்சிகளை மேற்கொண்டனர். இவ்வகையில் இந்திய ஆட்சியாளர்கள் தங்களது ஆட்சி நிகழ்வுகளை எழுத்துப் பொறிப்புக்களாக கல்வெட்டுக்களிலும் செப்பேடுகளிலும் வெளியிட்டு இருப்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்ந்தது. இவற்றைப் படிக்கும் முயற்சியில் பல கல்வெட்டியியலாளர்களும் எழுத்தியலாலளர்களும் ஈடுப்பட்டனர். அன்று முதல் இந்திய வரலாற்றில் தெளிவும் மீள் உருவாக்கமும் ஏற்பட்டன.

  முயற்சிகள்

  1837 ஆம் ஆண்டு வாக்கில் ஜேம்ஸ் பிரின்ஸெப் அசோகரது கல்வெட்டுக்களைப் படிக்கத் துவங்கினார். அவ்விதம் பலராலும் படிக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டக் கல்வெட்டுக்கள் பல இதழ்களில் வெளியிடப்பட்டன.

  1861இல் கல்வெட்டுக்களைக் கண்டுபிடிக்கவும், கண்டுபிடித்த கல்வெட்டுக்களைத் தொகுக்கவும் தொல்லியல் கள ஆய்வாளர் (Archaeological Surveyer) பதவியை இந்திய அரசு ஏற்படுத்தியது. பெரும்பாலான கல்வெட்டுக்கள் 19ஆம் நூற்றாண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டன. 1871-85வரை ASIயின் இயக்குனராக இருந்த அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் என்பவர் அசோகரது கல்வெட்டுக்களைத் தொகுத்தார். அதன் பிறகு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது போல் 18ஆம் நூற்றாண்டு வரை இந்திய வரலாற்றைப் புனரமைப்பதில் ஐரோப்பிய அறிஞர்களே ஈடுப்பட்டிருந்தனர். பின்பு இந்தியர்களும் இதில் பங்கேற்றனர்.

  வரலாற்றுப் புனரமைப்பு

  ஒரு சில எடுத்துக்காட்டுக்கள் மூலமாகக் கல்வெட்டுக்கள் எவ்வாறு வரலாற்றை புனரமைக்கின்றன எனக் காண்போம்.

  குப்தர்களின் கல்வெட்டுக்கள்

  19ஆம் நூற்றாண்டு வரை குப்தர்களின் வரலாற்றில் 'புத்த குப்தர்' என்ற அரசரின் பெயரே இடம்பெறவில்லை. 1838இல் மத்தியபிரதேசம் எரானில் புத்த குப்தரின் ஆளுனரான சுரஸ்மிசந்திராவின் கல்வெட்டு கண்டுப்பிடிக்கப்பட்டது. குப்த வருடம்165, கி.பி. 485இல் கிடைத்த கல்வெட்டு ஒன்றில் 'மாத்ரிவிஷ்ணு' என்பவர் புத்த குப்தரின் ஆளுனராக இருந்து யமுனா நர்மதா ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியை ஆட்சி செய்ததான செய்தி இடம் பெறுகிறது. இது கொண்டு புத்த குப்தர் தனது எல்லையை மால்வா பகுதி வரை விரித்து இருந்தது தெரிகிறது.
  1894இல் புத்த குப்த நாணயங்கள் குப்த ஆண்டு 175இல் (பொ.ஆ. 495) கிடைத்த வெள்ளி நாணயங்கள் மூலம் இவர் நாணயங்கள் வெளியிட்டிருப்பதை அறியமுடிந்ததுடன் இவரது ஆட்சிக் காலமும் மேலும் 10 ஆண்டுகளுக்கு விரிவாக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. 1914-15இல் புத்த குப்தரின் கல்வெட்டு ஒன்று உத்திரபிரதேசத்தில் உள்ள சாரநாத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் குப்த ஆண்டு 157 (பொ.ஆ 477) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது கொண்டு இவருடைய ஆட்சியாண்டு மேலும் 10 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

  1919- 20இல் தாமோதர்பூர் செப்பேடு (வடக்கு வங்காளம்). புத்த குப்தரின் இரு செப்பேடுகள் இவ்விடத்தில் கிடைத்தது கொண்டு அவருடைய எல்லையானது வங்காளம் வரை விரிவடைந்ததுள்ளது தெரியவந்தாலும் குப்தர்களின் வரலாற்றில் இவர் யாருக்குப்பின் ஆட்சி நடத்தினார் என்பது பற்றிய தெளிவின்றியே இருந்தது. 1943இல் நாலந்தாவில் கிடைத்த களிமண் முத்திரை மூலமாகவே புத்த குப்தர் புரு குப்தரின் மகன் முதலாம் குமாரகுப்தனின் பேரன் இரண்டாம் சந்திரகுப்தனின் கொள்ளுலுப் பேரன் என்பதும் தெரிய வந்தது.

  அசோகரது கல்வெட்டுக்கள்

  அசோகரது கல்வெட்டுக்கள் மூலம் அவரது கலிங்கப்போர் பற்றியும், அதன் பிறகு அவர் வாழ்க்கையில் தர்மக்கொள்கைகளைப் பின்பற்றியதையும் அறியமுடிந்தது. மேலும், அவர் தமது எல்லையில் உள்ள அரசுககளுக்கும் இத்தர்ம நெறி பொருந்தும் என்று கூறுவதால் எல்லையில் உள்ள அரசுகளையும் அறிய முடிகிறது. அசோகரது கிர்னார் பாறைக்கல்வெட்டு 2 மற்றும் 13இல் குறிப்பிடப்பட்டுள்ள சில செய்திகள் தமிழக வரலாற்றைப் புனரமைக்க உதவுகின்றன. இதில் சங்க காலத் தமிழக வேந்தர்களான சோழ, சேர, பாண்டியர்களும் வேளிரான ஸத்தியபுத்திரரும் குறிப்பிடப்பட்டுள்ளனர். மேலும் ரோமானிய அரசர்களும் குறிப்பிடப்படுவது காலக்கணிப்பிற்குப் பெரிதும் உதவுகின்றது.

  சங்க காலத் தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள்

  தமிழகத்திலும் இவ்விதம் கல்வெட்டுக்களின் கண்டுபிடிப்பானது பல வகையிலும் வரலாற்றைப் புனரமைக்க உதவியுள்ளன. தமிழக வரலாற்றின் துவக்ககாலமான சங்க காலத்தின் வரலாற்றை அறிய 19ஆம் நூற்றாண்டு வரை இலக்கியங்களே பெரும் பங்கு ஆற்றிவந்தன. 1903 இல் முதன்முதலாகத் தமிழிக் கல்வெட்டு ஒன்றை வெங்கோபராவ் என்பவர் கீழவளவு என்ற இடத்தில் கண்டுப்பிடித்தார். அதற்கு முன்பாகவே ராபர்ட் சீவல் இதைப் பார்த்துள்ளார். இருப்பினும் இதுவே தமிழ் பிராமிக் கல்வெட்டுக்களில் முதல் கண்டுப்பிடிப்பாகக் கருதப்படுகிறது. மாங்குளம் (1906), புகழூர் (1924), ஜம்பை (1981) போன்ற இடங்களில் கிடைத்த கல்வெட்டுக்களில் சில பாண்டிய, சேர, மன்னர்களின் பெயர்களும், சிற்றரசர்களில் அதியமானின் பெயரும் இடம் பெறுகின்றன. இவை இலக்கியச் செய்திகளுடன் வரலாற்றைத் தொடர்புப்படுத்தி ஆய்வு செய்ய உறுதுணையாகிறது. 1981இல் ஜம்பைக் கல்வெட்டு கண்டுபிடிக்கும் வரை அசோகரது கல்வெட்டில் இடம் பெறும் அதியமான் என்பவர் வாய்மொழிக்கோசர் மரபினர் போன்ற விவாதங்கள் தொடர்ந்து இருந்து வந்தன. 2006 ஆம் ஆண்டு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையினரால் சங்க காலத்தைச் சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிக்கப்பெற்றுள்ளன. இதனால் தமிழர் பண்பாட்டின் தொன்மையை அறிய இயன்றது. அதுவரை சங்க காலத் தமிழ் கல்வெட்டுகள் சமண சமய முனிவர்களுக்கு அமைத்துக்கொடுத்த பாளிய் என்று கூறத்தக்கப் படுக்கைகளிலேயே கிடைத்து வந்துள்ளன. இதனால் தமிழர்க்கு எழுத்தறிவைக் கற்பித்தது சமணர்களே என்ற கருத்து பரவலாகக் கூறப்பட்டது. பானை ஓடுகளிலும் சங்க காலத்தமிழ் எழுத்துக்கள் கண்டுப்பிடிக்கப்பெற்றுள்ளன. இது தமிழர் தம் பரவலான எழுத்தறிவை உலகிற்குப் பறை சாற்றுகிறது. 2012ஆம் ஜீலை மாதம் மற்றொரு சங்க்கால நடுகல் புதுக்கோட்டை மாவட்ட பொற்பனைக் கோட்டையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கல்வெட்டையும், தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை மாணவர்களே கண்டுபிடித்துள்ளனர்.

  பூலாங்குறிச்சி கல்வெட்டுக்கள்

  தமிழக வரலாற்றில் (கி.பி. 3- கி.மு.3ஆம் நூற்றாண்டு) சங்ககாலத்திற்குப் பிறகு 6ஆம் நூற்றாண்டு பல்லவர்கள் வரலாற்றையே அறியமுடிகிறது. இதற்கிடைப்பட்ட காலத்தில் ஏராளமான இலக்கியங்கள் கிடைக்கப்பெற்றிருப்பினும் இக்காலத்தை வரலாற்றறிஞர்கள் இருண்டகாலம் என்றே அழைத்துள்ளனர். இன்றளவும் இதையே மாணவர்களும் பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில் பூலாங்குறிச்சியில் கி.பி. 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கிடைக்கப்பெற்றது (1974). இக்காலக்கட்டங்களில் கிடைத்த கல்வெட்டுக்களில் இதுவே மிகபெரியது எனக்கூறலாம். அதில் சேந்தன், கூற்றன் போன்ற அரசர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் பெருந்திணை, குடும்பு, பிரம்மதேயம், தேவனார் கோட்ம்பெரும்பள்ளி போன்ற சொற்களும், கல்வெட்டுப் பாடமும் அக்காலச் சமுதாயத்தையும், ஏதோ ஓருவிதமான அரசு நடைபெற்றுள்ளது என்பதையும் ஓரளவு ஊகித்தறிய உதவுகின்றன.

  பல்லவர்களது கல்வெட்டுக்கள்

  பல்லவர்களது கல்வெட்டுக்கள் மூலமாக அவர்களது ஆட்சிமுறை, நிர்வாகக் சிறப்பினையும், போர்கள் , பெருமைகளையும் அறியமுடிகிறது. மற்றும் அழியக்கூடிய பொருட்கள் இன்றி அழியாத பொருட்களான கற்கள் கொண்டு கோயில் கட்டியதும் இன்னும் பல செய்திகளையும் பல்லவர்களது கல்வெட்டுக்கள் கொண்டு அறிய முடிகிறது

  பாண்டியர் கல்வெட்டுக்கள்.

  மதுரை மாவட்டம் (சேர்ந்ததாக கருதப்படும்) வேள்விக்குடி என்ற ஊரைத் தானமாக கொடுத்த செய்தியைப் பற்றிக்கூறும் இக்கல்வெட்டு கிடைக்காவிடில் சங்க காலத்திற்குப் பிறகு பல்லவருக்குச் சமக்காலத்தவராக ஆட்சி நடத்திய முதலாம் பாண்டிய மன்னர்களின் வரலாறு முழுமைப் பெற்றிருக்காது. இச்செப்பேட்டை வெளியிட்ட ஜடிலப் பராந்தகனுக்கு முன் 6 அரசர்கள் ஆட்சி நடத்தியதையும் பாண்டிய மன்னர்களின் பெருமையினையும், பல போர் சிறப்புக்களையும் பற்றித் தெளிவுறக் குறிப்பிடும் இச்செப்பேடு தமிழக ஆட்சியாளர்களான பாண்டியர்களின் வரலாற்றுப் புனரமைப்பில் பெரும் பங்கு வகிக்கிறது. அது போல் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோயில் வட்டம் மானூர் கல்வெட்டின் மூலம் பாண்டியர் மன்னன் மாறன் சேந்தனின் காலத்தில் நிலவிய நிர்வாகக் குழுக்கள் (மன்று) பற்றியும் அதன் நடைமுறைகளையும் அறியமுடிகிறது.

  சோழர்காலக் கல்வெட்டுக்கள்

  சோழர்களின் நிர்வாகத் திறமையினையும், அவர்களது கிராம நிர்வாகமுறைகள் பற்றியும் உத்திரமேரூர்க் கல்வெட்டுக்கள் கொண்டு அறியமுடிகிறது. மேலும் அக்காலக்கட்டத்தில் நிலவிய சமுதாய, பொருளாதார நிலைகளையும், நில அளவை முறைகளையும், பல சிறப்புக்கூறுகளையும் இக்கல்வெட்டுக்கள் கொண்டு அறியமுடிகிறது.

  விஜயநகரக் கல்வெட்டுக்கள்

  விஜயநகரக் கல்வெட்டுக்கள் மூலம் அவர்களின் ஆட்சியில் நடைப்பெற்ற சிறப்புக்கூறுகள், சமுதாயப் பூசல்கள், வலங்கை, இடங்கை அமைப்புக்கள் வணிகச்சிறப்புக்கள், இன்னும் பல செய்திகளை அறியலாம்.

  பொதுவான செய்திகள்

  கல்வெட்டுக்களை அதில் இடம் பெறும் சூழலைக்கொண்டு சரித்திரக் கல்வெட்டுக்கள், இலக்கியக் கல்வெட்டுக்கள், மக்களைப் பற்றியவை, மன்னரைப் பற்றியவை மதத்தைப் பற்றியவை எனப் பிரித்துச் செய்திகளை அறியவும், அதன் மூலமாக வரலாற்றை உருவாக்கவும், வரலாற்றில் புதிய செய்திகளைத் தரவும் ஆட்சியாளரை அடையாளம் காணவும், ஆட்சிப்பரப்பை அறியவும், வம்சாவளி பற்றிய ஆளுமையைப் பற்றி அறியவும் உதவுவதுடன், இலக்கியச் செய்திகளைக் கல்வெட்டுச் செய்திகளுடன் தொடர்புப்படுத்தி உறுதிப்படுத்தவும் உதவுகின்றன. இதுமட்டுமின்றி, கல்வெட்டுக்களின் எழுத்தமைதி எழுத்தியலுக்குப் பெரிதும் துணை நிற்கின்றது. இவ்வெழுத்தமைதி கொண்டு காலத்தை ஓரளவு கணிக்க இயலும். மேலும், அக்கால மக்களின் நாகரிக வளர்ச்சியினையும் சொல்லாட்சியையும் எழுத்தியல் மொழியியல் கொண்டு தெளிவுற அறியலாம்.

  புவியியல் அமைப்புக் கூறப்பட்டுள்ள கல்வட்டுக்கள் மூலம் அதன் பழமையையும் தற்போதைய அதன் அமைவிடத்தையும் அறியலாம். அக்கால கட்டத்தில் வழக்கிலிருந்த நிறுவனங்களை அறியலாம்.
  அலுவலர்களின் பதவிகள் அவருக்கு வழங்கப்பட்ட கடமைகளையும், கடல்வாணிகச் செழிப்பு, வணிகர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் போன்றவற்றையும் அறியலாம். மகேந்திர, வைரமேக, சித்ரமேக தடாகங்கள் போன்று அரசர்கள் அமைத்த நீர் நிலைகளை அறியலாம். கிராம முறைகள் தேர்வு, தண்டனைகள், இவற்றையும், எண்ணாயிரம் கல்வெட்டுக்கள் போன்ற கல்வெட்டுக்களால் அக்காலகட்டத்தில் அப்பகுதியில் நிலவிய கல்வி நிலைகளால் படிப்பின் காலம், ஆசிரிய மாணவர் எண்ணிக்கை, போன்றவற்றையும், மால்காபுரம் போன்ற கல்வெட்டுக்கள் மூலமாக, சில மகப்பேறு மருத்துவமனைகள் இருந்ததையும், சில வணிகக்கல்வெட்டுக்கள் மூலம் ஜாவா, சுமித்ரா, போர்னியோ போன்ற இடங்களுடன் வணிகம் செய்து வந்ததையும் , பல கல்வெட்டுக்கள் மத சகிப்புத்தன்மையை விளக்குவனவாகவும் உள்ளன. பெரும்பாலான கல்வெட்டுக்கள் சமயத்தைப் பற்றியும், சமய நிறுவனங்களுக்குக் கொடுத்த கொடைபற்றியதாகவுமே இருந்தாலும் அவற்றிலும் பல வரலாற்று மற்றும் சமுதாயச் செய்திகள் புதைந்துள்ளன. இவற்றை வெளிக்கொணர்ந்து வரலாற்றைப் புனரமைப்பதில் கல்வெட்டுக்களின் பங்கு அளவிடற்கரியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:59:11(இந்திய நேரம்)