தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • குலோத்துங்கசோழபட்டினம்
    (விசாகப்பட்டினம்)

    முனைவர் பா.ஜெயக்குமார்
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

    அறிமுகம் :

    சோழப் பேரரசு காலத்தில் தமிழ் வணிகர்கள் பன்னாட்டு அளவில் சிறப்புப் பெற்றிருந்ததோடு பிற நாடுகளின் கடற்கரைத் துறைமுகப் பட்டினங்களையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். முதலாம் குலோத்துங்கசோழன் காலத்தில் தமிழர்களின் கடல்சார் வணிகம் உன்னத நிலையைப் பெற்றிருந்த காலகட்டத்தில் பிற நாட்டுத் துறைமுகங்களுக்கு இம்மன்னனின் பெயரினைச் சூட்டி மகிழ்ந்தமை சிறப்புக்கு உரியதாகும். அவ்வகையில் குலோத்துங்கசோழபட்டினமும் ஒன்றாகும்.

    அமைவிடம் :

    ஆந்திர மாநிலத்தில் வங்கக் கடற்கரையில் அமைந்துள்ள விசாகப்பட்டினம் அக்காலத்தில் குலோத்துங்கசோழபட்டினம் என அழைக்கப்பட்டுள்ளது.

    கல்வெட்டுக் குறிப்பு :

    விசாகப்பட்டினத்தில் தமிழ்க் கல்வெட்டுகள் பல கிடைத்துள்ளன. இவற்றில் சக ஆண்டு 1012 (கி.பி 1090) இல் வெளியிடப்பட்டுள்ள கல்வெட்டு விசாகப்பட்டினத்தைக் குலோத்துங்கசோழபட்டினம் எனக் குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டு முதலாம் குலோத்துங்க சோழனின் காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுவதால் அம்மன்னனின் காலத்தில் இத்துறைமுகம் சோழ அரசின் கட்டுப்பாட்டிலிருந்தது என்பதையும் இங்கு தமிழ் வணிகர்கள் முக்கியப் பங்கு வகித்தனர் என்பதையும் உணரமுடிகிறது. இத்துறைமுகத்தில் அஞ்சுவண்ணம் வணிகக் குழுவினர் இருந்து செயல்பட்டதையும் அக்குழுவினர் அங்கிருந்த ஐநூற்றுவப் பெரும்பள்ளிக்காகக் கொடை பெற்றுக்கொண்டதையும் கல்வெட்டுகள் வாயிலாக அறியமுடிகிறது. விசாகப்பட்டினத்தில் படியெடுக்கப்பட்டுள்ள தெலுங்கு மொழிக் கல்வெட்டில் (தெ.இ.க.தொ.10:211) குலோத்துங்க பிரதிவீசுவரன் என்ற ஒரு அதிகாரியின் பெயர் காணப்படுவதிலிருந்து சோழ மன்னன் குலோத்துங்கனின் அரசு சார்ந்த செயல்பாடுகள் இங்கு இருந்ததை இக்கல்வெட்டு வெளிப்படுத்துகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:50:54(இந்திய நேரம்)