தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நடுகல் (வீரர் கல்)

  • நடுகல் (வீரர் கல்)

    முனைவர் மா.பவானி
    உதவிப் பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை

    பெயர்க்காரணம் :

    இறந்து போன வீரர்களுக்கு ஈமக்கடன் ஈந்து கல் நட்டு வழிபடுவது பண்டைய தமிழ் மரபு ஆகும். இவ்வாறு நடப்பட்ட கற்களே நடுகல் என்று பொதுவான சொல்லால் வழங்கப்படுகிறது. வீரர்களுக்கு மட்டுமின்றி பொதுவாக இறந்தவர் நினைவாகவும் நடுகல் நடும் வழக்கம் உலகம் முழுவதும் நிலவிய தொன்மையான வழக்கம் ஆகும்.

    காலம் :

    ஆகோள் பூசலில்
    உயிர் நீத்த வீரனுக்கு
    எடுக்கப்பட்ட நடுகல்
    (பொ.ஆ. 6ஆம் நூற்றாண்டு)
    திருவண்ணாமலை மாவட்டம்)

    தமிழகத்தில் சங்க காலம் தொட்டே (பொ.ஆ.மு.4காம் நூற்றாண்டு முதல்) வீரர்களுக்கு நடுகல் எடுக்கும் வழக்கம் இருந்துள்ளது. நடுகல் நடும் முறைகள் பற்றி "காட்சி கால் கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தலென்று இரு மூன்று மரபிற் கல்லொடு புணர" எனத் தொல்காப்பியம் தெளிவாக எடுத்துரைக்கிறது. மேலும் பல சங்க இலக்கியங்களும் நடுகற்களைப் பற்றிக் கூறுகின்றன. இதன் மூலம் நீத்தோர் நினைவாக நடுகற்கள் நடும் மரபு சங்க காலம் முதற்கொண்டு தமிழகத்தில் இருந்து வந்துள்ளதை அறியமுடிகிறது. தமிழ்ப் பல்கலைக்கழகம் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையினரால் புலிமான்கோம்பையில் (தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம்) மூன்று நடுகற்கள் கண்டறியப்பட்டன. இதன் காலம் பொ.ஆ.மு 3ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகும். இந்நடுகற்களே இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப் பட்டவற்றில் மிகப்பழமையானவை ஆகும்.

    அமைவிடம் :

    பெரும்பாலும் நடுகற்கள் ஊர்களின் புறத்தே காணப்படுகின்றன. ஊர்களின் நடுவில் நடுகற்கள் காணப்படவில்லை. ஒரே இடத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நடுகற்கள் காணப்படுவதும் உண்டு. ஓரே போரில் இறந்த பல போர்வீரர்களுக்கும் நடுகற்கள் ஒரே இடத்தில் காணப்படுவதும் உண்டு.

    நடுகற்களின் பிற பெயர்கள் :

    நடுகற்கள் வட ஆற்காடு, தென்னாற்காடு, சேலம், தர்மபுரி, மாவட்டங்களில் வேடியப்பன் கல் என்று அழைக்கப்படுகின்றன. இவை இருக்கும் இடத்தை வேடியப்பன் கோயில் என்றும் அழைப்பர். “வேடர்”, “கிருஷ்ணாரப்பன்”, “மீனாரப்பன்”, “சன்யாசியப்பன்” என்று பலபெயர்களிலும் நடுகற்கள் அழைக்கப்படுகின்றன. சில இடங்களில் “ஆஞ்சநேயர் கல்லு” என்றும் அழைக்கப்டுவதும் உண்டு. சில சிறப்புப் பெயர்களும் உண்டு. சிறை மீட்டான் கோயில் (நிரை மீட்டான் என்பதன் திரிபு?) “ஊமை வேடியப்பன்”, “இரட்டை வேடியப்பன்”, “சாவு மேட்டு வேடியப்பன்”, “நத்தமேட்டு வேடியப்பன்” எனப்பல பெயர்களில் நடுகற்கள் சுட்டப்படுகின்றன.

    நடுகற்களின் அமைப்பு :

    நடுகற்களில் வீரனுடைய உருவம் சமர்புரியும் நிலையில் காண்பிக்கப்பட்டிருக்கும். கைகளில் வில்லும் அம்பும் ஏந்தியோ அல்லது வாளும் கேடயமும் ஏந்தியோ வீரன் காட்டப்பட்டிருப்பான். சில நடுகற்களில் வீரனின் ஒரு கையில் வில்லும் மற்றொரு கை இடையில் உள்ள வாளை உருவும் வகையிலும் காட்டப்பட்டிருக்கும். பல நடுகற்களில் வீரனின் உடலில் பல அம்புகள் துளைத்து நிற்பது போலும் காட்டப்பட்டிருக்கும். வீரன் எதிர்த்து நின்று வீழ்ந்து பட்டான் என்றும் வகையில் முன்புறத்திலிருந்து அம்பு பாய்வது போல் காட்டப்பட்டிருக்கும். பெரும்பாலும் வீரன் அரையாடை மட்டும் அணிந்து இருப்பான். இடுப்பில் நீண்ட துணியும் கட்டப்பட்டிருக்கும். உடலின் மேல் ஆடை கிடையாது. தலையில் ஒரு முடி காணப்படுகிறது. சில வீரர் நீண்ட பின்னலை உடையவர்களாகவும் காணப்படுகின்றனர். பல நடுகற்களில் வீரனின் காலடியில் ஒரு மூக்குக் கெண்டி, ஒரு சிமிழ், கைப்பிடி உடைய முகம் பார்க்கும் கண்ணாடி ஆகியவை காணப்படுகின்றன. சில நடுகற்களில் ஆநிரைகள் காட்டப்பட்டிருக்கும். செங்கம் பகுதி நடுகற்களில் புலிகளிடமிருந்து ஊரைக் காத்தபோது உயிர் நீத்த வீரனுக்கும் நடுகற்கள் எடுத்துள்ளனர். இவ்வகை நடுகற்களில் வீரன் புலியோடு சண்டையிடுவது போல உருவப் பொறிப்புக் காணப்படும். மோத்தக்கல் என்ற இடத்தில் கிடைத்த நடுகல்லில் புலி குத்திப்பட்டான் என்றே குறிப்பு உள்ளது. கோழிச்சண்டையில் உயிர் நீத்த கோழிகளுக்கும் நடுகற்கள் எடுக்கப்பட்டுள்ளன. இவை கோழிக்கற்கள் என வழங்கப்பெறுகின்றன.

    நடுகற்களில் எழுத்துப் பொறிப்புகள் :

    நடுகற்களில் மன்னனின் ஆட்சியாண்டு, உயிர் நீத்த வீரன் பெயர் அவனைப் பற்றிய செய்திகள், போர், நிரை கொண்டது, நிரை மீட்டது ஆகியவற்றில் எதனால் வீழ்ந்தான் முதலிய செய்திகள் பொறிக்கப்பட்டிருக்கும். இது வரை கிடைத்துள்ள நடுகற்களில் பெரும்பாலானவை வட ஆற்காடு மாவட்டம், செங்கம் பகுதியில் கிடைத்துள்ளன. தென்னாற்காடு, செங்கல்பட்டு, தர்மபுரி, சேலம், கோலை ஆகிய மாவட்டங்களிலும் சில நடுகற்கள் கிடைத்துள்ளன. மதுரை, திருநெல்வேலி மாவட்டஙக்ளிலும் ஒன்றிரண்டு நடுகற்கள் கிடைத்துள்ளன. சோழ மண்டலத்தில் நடுகற்கள் அதிகம் கிடைக்கவில்லை. இதுவரையில் இப்பகுதிகளில் சங்க கால நடுகற்கள் ஏதும் கிடைக்கவில்லை.

    பல்லவர், பாண்டியர், கங்கர், சோழர், நுளம்பர், போசளர், விஜயநகர மன்னர் ஆகிய அரசரது காலத்து நடுகற்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் இடைக்காலம் தொட்டு பொ.ஆ. 16ஆம் நூற்றாண்டு நடுகற்கள் தொடர்ச்சியாகக் கிடைத்துள்ளன. சங்க காலத்தைச் சேர்ந்த நடுகற்கள் அரிதாகவே கிடைத்துள்ளன. தற்போழுது, திண்டுக்கல், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் ஒரு சில நடுகற்கள் கிடைத்துள்ளன.

    எழுத்தமைதி :

    நடுகற்களில் பெரும்பாலும் வட்டெழுத்துக்களே காணப்படுகின்றன. சில தமிழ் எழுத்திலும் உள்ளன. வடமொழியில் எழுதப்பட்ட நடுகற்கள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. சோழர் கால நடுகல் கல்வெட்டு எதுவும் வட்டெழுத்தில் கிடைக்கவில்லை. பல நடுகற்களில் தமிழ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:48:45(இந்திய நேரம்)