தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சங்ககாலக் குறுநில மன்னன் அதினன் எதிரான் சேந்தன் காசு

 • சங்ககாலக் குறுநில மன்னன் அதினன் எதிரான் சேந்தன் காசு

  முனைவர் மா.பவானி
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

  காசுகளின் காலம்: பொ.ஆ. 1,2 ஆம் நூற்றாண்டு (உத்தேசமாக) சங்ககாலக் குறுநில மன்னனான அதினன் எதிரான் சேந்தன் காசுகள் செங்கம் வட்டம் ஆண்டிப்பட்டியில் (திருவண்ணாமலை மாவட்டம்) 1968இல் ஒரு புதையலில் குவியலாகக் கிடைத்தன. இவை மொத்தம் 143 ஈயக் காசுகள் ஆகும். இப்புதையலில் எடுக்கப்பட்ட காசுகள் யாவும் ஒரே வகையானவை.

  வடிவம்:

  இவையாவும் வட்ட அச்சுக்களில் வார்க்கப்பட்ட காசுகள், வட்ட வடிவம் கொண்டவை.

  அதின்னன்
  எதிரான் சேந்தன்
  ஆற்று வளை
  முகடு

  அளவு:

  காசுகள் 2.32 செ.மீ விட்டமும் 8 கிராம் எடையும் உடையன.

  காசுகளில் உள்ள உருவங்கள்:

  முன்பக்கம் இணைகோடுகளும் அதன் மேலே அங்குசமும் உள்ளது. இணைக்கோடுகளில் இருபுறமும் இரண்டு வட்டங்கள் உள்ளன. இவை சூரியன் சந்திரனைக் குறிக்கலாம். காசின் விளிம்பையொட்டித் தமிழி (சங்ககாலத் தமிழ் எழுத்து) வடிவத்தில் 13 எழுத்துகள் உள்ளன. மற்ற காசுகளில் உள்ளது போன்றில்லாமல் எழுத்துக்களின் தலைப்பகுதி காசின் உள்பக்கத்தை நோக்கியவாறு உள்ளது. பின்புறத்தில் மூன்று முகடுகள் உள்ள இரண்டு குன்றங்கள் இருபுறமும் உள்ளன. அவற்றின் இடையில் இரண்டு வளைகோடுகள் உள்ளன. இவை நதியைக் குறிக்கலாம்.

  இக்காசின் எழுத்துப்பொறிப்பு குறித்த ஆய்வாளர்களின் கருத்துக்கள்:

  இக்காசைப் பொறுத்தவரையில் தமிழ் பிராமி எழுத்துக்களை வாசித்தல், பொருள் அறிதல் மற்றும் காலத்தை உறுதி செய்தல் ஆகியவற்றில் எல்லாம் ஆய்வாளர்கள் மாறுபடுகின்றனர். ஆரம்பத்தில் இக்காசுகளை ஆராய்ந்த டி.வி.மஹாலிங்கம் (1970), “எதிரான் பிர்தான் சேந்தன்” என்று வாசித்தார். இக்காசுகளை வெளியிட்டவர் சேந்தன் என்றும் பொ.ஆ.மு. 2 ஆம் நூற்றாண்டளவில் வெளியிடப்பட்டன என்றும் கருதினார். கே.ஜி.கிருஷ்ணன் (1980), “அதின்னன் எதிரான சேந்தன்” என்றும் வாசித்து, பொ.ஆ.மு. 4 ஆம் நூற்றாண்டளவில் வெளியிடப்பட்டன என்றார். ஆர்.நாகசாமி (1981) “தின்னன் எதிரான் சேந்தன் அ” என்று வாசித்து, பொ.ஆ.மு. 2-3 ஆம் நூற்றாண்டு வகையைச் சார்ந்தவை. எனவே இக்காசுகள் அப்பொழுது வெளியிடப்பட்டிருக்கலாம் என்றார். இக்காசுகளை 1987இல் ஆய்ந்த கே.வி.இராமன் இவ்வெழுத்துகளை, “அதினனன எதிரான சேனதன” என்று வாசித்தார். இக்காசுகளை ஆய்ந்த அய்.கே.சரிமா(1992), தின்னன் எதிரான சேந்தன் என்று வாசித்து இக்காசுகள் களப்பிர அரசரால் வெளியிடப்பட்டிருக்கலாம் என்றும் பிற்காலச் சாதவாகனர் காசுகளுக்கு முன்னோடியாக இருக்கலாம் என்றும் கூறினார். நடனகாசிநாதன் (1992) “சேந்தன் அதின்னன் எதிரான்” என்று வாசித்து வெளியிட்டவர் சேந்தன் மகனான அதின்னன் என்றும் இவ்வரசரை எதிர்ப்போர் எவருமில்லை என்றும் கருதினார். இக்காசுகள் பொ.ஆ. 2-3 ஆம் நூற்றாண்டுகளில் வெளியிடப்பட்டவை என்றார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் (1995) இவர் தம் கருத்தை மாற்றிக்கொண்டார். இக்காசுகள் பொ.ஆ.மு. நான்காம் அல்லது மூன்றாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்றார். ஐராவதம் மஹாதேவன், (2003) அதின்னன் எதிரான் சேந்தன் என்று வாசித்து, அதின்னனின் வழி வந்த சேந்தன் எனப் பொருள் கொண்டார். இக்காசின் காலம் பொ.ஆ. 3 ஆம் நூற்றாண்டு என்றார்.

  இவ்வாறு கருத்து மாறுபாடுகள் இருப்பினும் இக்காசுகளை வெளியிட்டவர் சேந்தன் என்பது உறுதி. காசில் காணப்படும் எழுத்துக்களை அதின்னன் எதிரான் சேந்தன் என்று வாசிக்கலாம். அதின்னன் எதிரான் என்ற சொற்கள் சேந்தனின் தந்தையின் பெயராகலாம். அதின்னனின் மறுவடிவமாக அதனன் என்ற பெயரைக் கொள்ளலாம். இப்பெயர் (அதனன்) அரிட்டாபட்டி கல்வெட்டில் ஆள் பெயரின் ஒரு பகுதியாக உள்ளது. இக்காசுகள் ஈயக்காசுகள் என்பதாலும் தமிழ் பிராமி எழுத்துக்களின் வடிவம் தொன்மையாக உள்ளதாலும் இக்காசுகள் சுமார் பொ.ஆ. 1-2 ஆம் நூற்றாண்டு அளவில் வெளியிடப்பட்டிருக்கலாம் எனக் கருதலாம்.

  இக்காசுகளைச் சேந்தன் வெளியீடாகக் கொண்டாலும் இப்பகுதியைச் சேந்தன் என்ற அரசர் ஆண்டதாக இதுவரை சான்றுகள் கிட்டவில்லை. ஆயினும் சேந்தன் இப்பகுதியை ஆண்ட குறுநில மன்னராக இருக்க வாய்ப்புண்டு.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:45:25(இந்திய நேரம்)