தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • இந்தோ கிரேக்கர் காசுகள்

    முனைவர் மா.பவானி
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

    பொ.ஆ.மு 326ஆம் ஆண்டு மா வீரரான கிரேக்க மன்னர் அலெக்ஸாண்டர் இந்தியாவிற்குள் புகுந்து தக்ஷசீல மன்னன் போரசைத் தோற்கடித்தார். அன்று முதல் இந்தியாவிற்குள் கிரேக்கர்களின் ஊடுருவல் தொடங்கியது. அலெக்ஸாண்டரின் படையெடுப்பிற்குப் பிறகு இங்கு கிரேக்க அரசு நிறுவப்படுகிறது. இதைத் தொடர்ந்து சிறிது காலம் கிரேக்க ஆட்சி இந்தியாவில் ஏற்பட்டது. இவ்வரசுகள் “இந்தோ-கிரேக்கர்கள்” அல்லது “இந்தோ-பாக்ட்ரியர்கள்” என்று அழைக்கப்பெறுகின்றனர். இவர்களது பேரரசு யூஃபிரேடஸிலிருந்து சிந்து வரை பரவியிருந்தது. இப்பகுதிக்கு “பாக்டிரியா” என்றப் பெயரும் உண்டு. எனவே, இவ்வரசுகளை “பாக்டிரியர்கள்” என்று அழைப்பதும் உண்டு. இவ்வரசுகள் வெளியிட்ட காசுகள் இந்தோ கிரேக்க காசுகள் எனக் குறிப்பிடப்பெறுகிறது.

    அலெக்ஸாண்டர் தமது வெற்றியின் நினைவாக, ‘’டெட்ராடிரம்ஸ்’’ என்ற வெள்ளிக்காசுகளை வெளியிட்டுள்ளார். காந்தாரம், பஞ்சாப், முதலிய பகுதிகளைப் பல பிரிவுகளாகப் பிரித்துப் பல மன்னர்கள் ஒரே காலத்தில் ஆண்டதாகக் கருதப்பெறுகிறது. இவர்களைத் தவிர 22 இந்தோ-பாக்டிரிய மன்னர்கள் இருந்திருப்பதை அவர்கள் நாணயங்கள் வழி மட்டுமே அறிய முடிகிறது.

    சிறப்புகள்

    இந்தோ பாக்ட்ரிய மன்னர்கள் காலத்தில்தான் முதன்முதலில் தங்கக் காசுகள் வெளியிடப்பெற்றன. இவற்றை யூகிரதிதெஸ், யூதிதேமுஸ் ஆகிய மன்னர்கள் வெளியிட்டனர் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்தியாவில் இவை வெளியிடப்பெறவில்லை. பாக்ட்ரியாவில் மட்டுமே வெளியிடப்பெற்றது என்ற கருத்தும் உண்டு. இவர்களது பெயர் வெளியிடப்பெறாத ஒரு சில காசுகள் இந்தியாவில் கிடைக்கின்றன. இதை வெளியிட்டவர் ‘மிணாண்டர்’ என்ற மன்னன் ஆவார். இந்தியாவில் வெளியிடப்பெற்ற முதல் தங்க நாணயங்கள் இவையே.

    உலோகம்

    இந்தோ பாக்ட்ரிய தங்கக்காசுகள் ‘’ஸ்டேட்டர்’’ என்றும் , வெள்ளிக் காசுகள் ‘’தெத்ராடிராம்ஸ்’’ என்றும் அழைக்கப்பெறுகின்றன. ஹெமிடிராம்ஸ், டைடிராம்ஸ் போன்ற வெள்ளிக் காசுகளும் வழக்கிலிருந்துள்ளன.

    சின்னங்கள்

    பெரும்பாலும் இவர்களது காசுகளில் ஒரு புறம் அரசரின் உருவங்கள் இடம்பெற்றிருக்கும் . ஒரு சில நேரங்களில் அரசர் உருவம் அவரது மனைவியோடு பொறிக்கப்பெற்றிருக்கும். மறுபுறம் இந்தோ- பாக்ட்ரிய தெய்வங்களான ஸீயுஸ், ஆர்திமிஸ், ஹெராகிளிஸ், பாசிடான், அபோல்லா, பியோஸ்குராய், நிகே, பல்லாஸ் போன்ற கடவுளர்களின் உருவங்களைப் பொறித்திருப்பர். அத்தெய்வங்கள் இல்லையெனில் அவர்களுக்குரிய சின்னங்கள் பொறிக்கப்பெற்றிருக்கும். காட்டாக, தமிழ்த் தெய்வம் முருகனுக்குப் பதில் அவர்க்குரிய வேல் சின்னம் பொறிக்கப்பெறுவது போல “தியோஸ்கௌரா” என்றக் கடவுளுக்குப் பதிலாக அவரது “தொப்பிச் சின்னமும்”, “அப்போலோ”விற்குப் பதில் “முக்காலிச் சின்னமும்” பொறிக்கப்பெற்றிருக்கும்.

    மொழியும், எழுத்தும்

    வாசகங்களைக் காசுகளில் பொறிப்பது இவர்களது முக்கியமான அம்சமாகும். இவர்களது காசுகளில் அரசர்கள் அல்லது தெய்வங்களின் பெயர்கள் கிரேக்கம், பிராகிருத மொழியிலும் கரோஷ்டி எழுத்திலும் எழுதப்பெற்றுள்ளன. இந்தியாவில் வெளியிடப்பெறும் காசுகளில் பிராமி எழுத்தும் கிரேக்க மொழியும் பயன்படுத்தியுள்ளனர். அரசரைக் குறிக்கும் சொல்லான பசிலியஸ் என்ற சொல் பயன்படுத்தப்பெற்றுள்ளது.

    முக்கியத்துவம்

    இவ்வரசுகளைப் பின்பற்றியே இந்திய அரசுகள் காசுகளில் அரசர்களின் உருவங்களையும் வாசகங்களையும் பொறித்துள்ளன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:58:52(இந்திய நேரம்)