தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அரப்பா ஒரு சிந்து வெளி நாகரிக நகரம்

 • அரப்பா
  ஒரு சிந்து வெளி நாகரிக நகரம்

  முனைவர் வீ.செல்வகுமார்
  உதவிப் பேராசிரியர்
  கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

  அரப்பா சிந்து வெளி நாகரிகத்தின் ஒரு புகழ்வாய்ந்த நகரமாகும். இந் நகரம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. சிந்து வெளி நாகரிகத்தின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்று இதுவாகும்.

  அமைவிடம் :

  அரப்பா (ஹரப்பா) பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் லர்க்கானா மாவட்டத்தில் இராவி ஆற்றங்கரையில் உள்ளது. சாகிவால் என்ற ஊரிலிருந்து 24 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

  சிறப்பு :

  தொல்லியலில் ஒரு பண்பாட்டின் சான்றுகள் எந்த இடத்தில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டவோ அந்த இடத்தின் பெயர் அப்பண்பாட்டிற்கு இடப்படுகின்றது. அரப்பா தான் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சிந்து வெளி நாகரிகத்தின் நகரம். அந்த அடிப்படையில், சிந்துவெளி நாகரிகம் "அரப்பா நாகரிகம்," "அரப்பா பண்பாடு" என்றும் அழைக்கப்படுகின்றது.

  கண்டுபிடிப்பு மற்றும் அகழாய்வுகள் :

  சார்லஸ் மேசன் என்பவர் இந்த இடத்திற்கு முதன்முதலில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சென்று பதிவு செய்துள்ளார். இந் நகரின் பெரும்பகுதி 1857ல் லாஹூர்-மூல்தான் இரயில் பாதை அமைப்பதற்காக அழிக்கப்பட்டது. பின்னர் அலெக்சாண்டர் கன்னிங்காம் 1870களில் அகழாய்வு செய்து இங்கு ஒரு சிந்துவெளி நாகரிக முத்திரையைக் கண்டுபிடித்தார். ஆனால் இந்த இடத்தின் சிறப்பு சர் ஜான் மார்ஷல் இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் இயக்குனராகப் பொறுப்பெற்ற பின்னர், இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் வெளிப்பட்டது. தயராம் சாஹ்னி, மாதவ் ஸ்வ்ரூப் வாட்ஸ், ரஃபிக் முகல், ஜார்ஜ் எஃப் டேல்ஸ் மற்றும் மார்க் கெனோயர் ஆகியோர் அகழாய்வு செய்துள்ளனர்.

  காலம் :

  இந் நகரம் பொஆமு (கிமு) 3300 முதல் தொடங்கி பொ.ஆ.மு 1700 வரை சிறப்புற்று விளங்கியது. பின்னர் சிந்துவெளி நாகரிகம் வீழ்ந்த பிறகு இது அழிவுற்றது. இந் நாகரிகம் படையெடுப்பால் அழியவில்லை; இயற்கைச் சீரழிவு மற்றும் பொருளாதார வீழ்ச்சி ஆகியவை காரணமாக அழிந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

  கட்டட அமைப்புகள் :

  பல்லாயிரக்கணக்கான சதுர மீட்டர் பரப்பளவில் பரவிக்கிடக்கும் இந் நகரத்தின் இடிபாடுகளில் தானியக்கிடங்கு என்று கருதப்படும் கட்டடம், சாக்கடை அமைப்பு, வட்டமான மேடைகள் மற்றும் பல விதமான கட்டடங்கள் காணப்படுகின்றன. இங்கு கிடைத்த வட்டமான மேடை தானியங்கள் கதிரடிக்கும் களமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. ஒற்றை அறைகளைக்கொண்ட தங்குமிடங்கள் இங்கு காணப்படுகின்றன. வீடுகளில் குளியல் அறைகள் இருந்தன. அரப்பவில் மொஹ்ஞ்சதாராவில் இருந்தது போன்ற குளியல் குளம் இல்லை. சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் இங்கு வாழ்ந்த மக்கள் நல்ல சுகாதார வசதியுடன் வாழ்ந்து வந்துள்ளனர்.

  தொல்பொருட்கள் :

  இங்கு பல அரிய தொல்பொருள்களும் முத்திரைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மணற்கல்லால் ஆன ஆண் நடனக்காரரின் சிலை, வெண்கலத்தான கருவிகள், சுடுமண் பொம்மைகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும். பானை வகைகள் சிவப்பு நிறத்தில் மிக அழகான கருப்பு நிறத்தில் தீட்டப்பெற்ற ஒவியங்களுடன் காணப்படுகின்றன.

  கல்லறை எச் பண்பாடு :

  இங்கு சிந்துவெளி நாகரிகத்திற்குப் பிந்தைய கல்லறை எச் பண்பாட்டைச் சேர்ந்த சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்பண்பாட்டில் இறந்தவர்களை எரிக்கும் வழக்கம் இருந்தது. இப்பண்பாடு சிந்துவெளி நாகரிகத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படுகின்றது.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:46:34(இந்திய நேரம்)