தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தமிழகத்தின் முத்திரைக் காசுகள்

 • தமிழகத்தின் முத்திரைக் காசுகள்

  முனைவர் மா.பவானி
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

  முத்திரைக் காசுகள் என்பன முத்திரைப் பொறிப்புடன் எழுத்துப்பொறிப்பின்றிக் காணப்படும் காசுகள் ஆகும். இவ்வகைக் காசுகள் வட இந்தியாவில் மட்டுமல்லாது தமிழகத்திலும் வழங்கி வந்துள்ளன.

  காலம்:

  வட இந்தியாவில் இந்நாணயங்கள் பொ.ஆ.மு. 600 முதல் பொ.ஆ.மு. 200 வரை வழங்கி வந்துள்ளன. ஆனால் தென்னிந்தியாவில் சந்திரவல்லி, அகழாய்வைத் தவிர மற்றவை பொ.ஆ. முதல் நூற்றாண்டின் மையப்பகுதி எனக் கணிக்கப்பெறுகின்றது. தென்னகத்தின் முத்திரை நாணயங்களின் காலத்தைக் கணிக்கும் உறுதியான சமகாலத்திய இலக்கிய, தொல்லியல் சான்றுகள் கிடைக்கப் பெறவில்லை என 1966 ஆம் ஆண்டு டி.வி.மகாலிங்கம் குறிப்பிட்டுள்ளது இங்குச் சுட்டத்தக்கது. இவ்வாறு பல ஆண்டுகளுக்கு முன்னால் இவரால் சுட்டிக் காட்டப்பெற்ற குறையை நிவர்த்தி செய்யும் வகையில், தமிழகத்தில் கொடுமணலில் நடத்தப்பெற்ற அகழாய்வினை அடிப்படையாகக் கொண்டு கா.ராஜன் முத்திரை நாணயங்களுக்குக் காலத்தைக் கணித்துள்ளார். கொடுமணலில் கிடைக்கப்பெற்ற பண்பாட்டுப் பொருட்களான, மட்பாண்டங்கள், பிராமி எழுத்துப்பொறிக்கப் பெற்ற மட்கல ஓடுகள், புதை குழியின் அமைப்புகள் இவை கொண்டு நோக்குகையில் இவற்றின் காலம் பொ.ஆ.மு. 3 ஆம் நூற்றாண்டிலிருந்து பொ.ஆ. 3 ஆம் நூற்றாண்டு வரையில் எனத் தற்காலிகமாக்க் கணிக்கப்பெற்றுள்ளது. மேலும், c14 ( கரிம ஆய்வு) எனும் ஆய்வும் இதை உறுதி செய்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஊரிக்கைப் பகுதியில் கிடைக்கப்பெற்ற பொருட்கள் இருவகைக் காலக்கட்டங்களாகப் பிரிக்கப் பெற்றுள்ளன. முதலாவது பொ.ஆ.மு. 3 ஆம் நூற்றாண்டிலிருந்து பொ.ஆ. 1 ஆம் நூற்றாண்டு வரையிலும், இரண்டாவது பொ.ஆ. 1 ஆம் நூற்றாண்டிலிருந்து பொ.ஆ. 2 ஆம் நூற்றாண்டு வரை ஆகும். இம்முத்திரை நாணயமானது இவ்விரு காலக்கட்டத்திற்கு இடைப்பட்ட காலத்தில் கிடைக்கப்பெற்றுள்ளது கொண்டு பொ.ஆ. முதல் நூற்றாண்டு எனக் கணிக்கலாம் என ராஜன் குறிப்பிடுகின்றார். எனவே இது போன்ற அகழாய்வுகள் நடத்தப்பெற்று அதன் மூலம் கிடைக்கப்பெறும் முத்திரை நாணயங்கள் இக்காலத்தை மாற்றத்தக்கதாகக் கிடைக்கும் வரையில் இக்காலமே தமிழகத்தின் முத்திரையிடப் பெற்ற நாணயங்களின் காலமாக ஏற்கப் பெறலாம்.

  அண்மையில் சங்ககாலக் காசுகளை ஆய்வு செய்து “சங்கக்காலத் தமிழர் காசியல்” என்ற நூலை வெளியிட்டுள்ள ப.சண்முகம் காசுகளில் இடம்பெற்றிருக்கும் சின்னங்களையும் எடை அமைப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு இதற்கு பொ.ஆ.மு. 2 ஆம் நூற்றாண்டு எனக் காலம் கணித்துள்ளார். பாண்டியர்களது முத்திரை காசுகளில் சதுரம் 11.11 மி.மீயும் செவ்வகம் 13.15 மி.மீ வடிவில் 1.98 – 2.79 கிராம் வரை எடையுள்ளன. போடி நாயக்கனூர் காசுகள் 1.5 கிராம் எடையுள்ளன. ஒரு சில 0.99 கிராம் எடையுள்ளன. இதனால் இவை அரைக்கார்ஷாப்பணம் வகையைச் சேர்ந்தவையாகக் கருதப் பெறுகிறது என்று கருத்து வெளியிட்டுள்ளார். மேலும் பெருவழுதி எனப் பெயர் பொறிக்கப் பெற்ற காசுகளுக்கு பொ.ஆ.மு. 2 ஆம் நூற்றாண்டு எனக் காலம் கணித்துள்ளார். உருவாக்கத் தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு பெயர் பொறியுள்ள காசுகளைக் காட்டிலும் முத்திரைக் காசுகளைச் சற்று காலத்தால் முற்பட்டவையாகக் கருதலாம். இதன் அடிப்படையில் பொ.ஆ.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஆ. 1 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் முத்திரைக் காசுகள் வழக்கத்திலிருந்திருக்கலாம் எனக் கருத இடமுண்டு.

  எடை அளவுகள்:

  முத்திரை நாணயங்கள் ஏராளமான அளவு தயாரிக்கப்பட்டு, ஒரே சீரான எடையளவு கொண்டுள்ளதால் இது செலாவணியாகப் பயன்பாட்டில் இருந்திருக்கக்கூடும் எனக் கருதுவது தவறாகாது. இவ்வகை நாணயங்கள் வாசகத்துடனோ, சின்னங்கள் பொறிக்கப் பெற்றோ இருக்க வேண்டியதில்லை என்பது ஒரு குறிப்பிட்ட உலோகத்துண்டு, ஒரு குறிப்பிட்ட எடையுள்ளதாக, புழக்கத்தில் இருப்பதே அதன் முக்கிய அம்சம் எனும் டி.டி.கோசாம்பியின் கருத்தால் உறுதியாக்கப் பெறுகிறது. முத்திரை நாணயங்கள் எனும் இதன் பெயரே இதில் எண்ணற்ற முத்திரைகள் பதிக்கப் பெற்றுள்ளதை உணர்த்துகிறது. இந்நாணயங்களின் சிறப்பே, இதில் பொறிக்கப் பெற்றிருக்கும் சின்னங்கள்தான். ஏனெனில் இவற்றில் வாசகங்களோ, வருடமோ குறிப்பிடப் பெறவில்லை. இந்நாணயங்களில் 200க்கும் மேற்பட்ட சின்னங்கள் உள்ளதாக வகைப்படுத்துகின்றனர்.

  இம்முத்திரை நாணயங்கள் பற்றிய ஆய்வில் வல்லுநரான பி.எல்.குப்தாவின் வகைப்பாடும், கருத்துகளுமே பெரும்பாலும் ஏற்கப் பெற்றுள்ளது. இவர் நாணயங்கள் பற்றி உரைக்கையில், பெரும்பாலான நாணயங்கள் முன்புறம் 5 சின்னங்களுடன் 32 ரத்திகள் (rathis) 56 தானிய எடை அளவு (3.4 கிராம்) உடையதாக உள்ளது என்றும், இதுவே இந்திய நாடு முழுவதும் பரவியுள்ளது மட்டுமின்றி, பெருமளவில் இவ்வகையை அடிப்படையாகக் கொண்டே, ஆய்வு நடத்தப் பெறுகின்றன என்றும் கருத்து தெரிவித்துள்ளார். இவ்வகையைத் தவிர மிகக்குறைந்த அளவில் அறியப்பெறும் முத்திரை நாணயங்கள் ஒன்றிலிருந்து நான்கு வரையிலான முன்புறச் சின்னங்கள் கொண்டு காணப்பெறுகின்றன.

  முன்னர் சுட்டியது போல் போடி நாயக்கனூரில் கிடைத்த காசுகள் 1.5 கிராம் எடையுடையனவாக்க் கிடைக்கப் பெறுவதால் (ஒரு சில 0.99 கிராம் எடையுள்ளன). இதனால் இவை அரைக்கார்ஷாப்பணம் வகையைச் சேர்ந்தவையாகக் கருதப் பெறுகின்றன.

  சங்ககாலம் (பொ.ஆ.மு. 3 ஆம் நூ – பொ.ஆ. 3 ஆம் நூ):
  சேர, சோழ, பாண்டியர்கள்

  வரலாற்றுக் காலம் முதற்கொண்டே தமிழகம் சேரர், சோழர், பாண்டியர் என்னும் சிற்றரசர்களால் ஆளப்பெற்றதற்கு இலக்கிய ஆதாரங்கள் உள்ளன. தமிழ் இலக்கியங்கள் மட்டுமின்றி வட இந்தியக் கல்வெட்டுக்களும் இதை மெய்பிக்கின்றன. அசோகரது கல்வெட்டிலும் கிர்னார் பாறைக் கல்வெட்டிலும், காரவேலனது ஹதிக்கும்பாக் கல்வெட்டிலும் இவர்கள் குறிப்பிடப் பெறுகின்றனர். இம்மூவேந்தர்களில் சேரர்கள் வில்லையும், சோழர்கள் புலியையும், பாண்டியர்கள் மீனையும் தமது குலச் சின்னங்களாகக் கொண்டுள்ளதை இலக்கியங்கள் விளங்குகின்றன. இவற்றை மெய்ப்பிக்கும் வகையில் இவர்களது குலச் சின்னங்கள் பொறித்த காசுகள் தமிழகத்தில் கிடைக்கின்றன. சோழர்களைத் தவிர மற்ற இருவேந்தர்களும் முத்திரைக் காசுகளை வெளியிட்டுள்ளனர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:43:25(இந்திய நேரம்)