தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • குஷாணர் காசுகள்

  முனைவர் மா.பவானி
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

  குஷாணர்கள்

  பொ.ஆ.மு 2 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சீன எல்லைப் புறத்தில் வாழ்ந்து வந்த “யூச்சி” என்னும் நாடோடி இனத்தவர் ஆக்ஸஸ் நதி தீரத்தை அடைந்து பின்னர் பாக்டிரியாவில் குடியமர்ந்தனர். யூச்சி இனத்தில் 'கியூசுவான்ங் ' என்ற இனமே குஷாணர் என்று அழைக்கப்பெறுகின்றனர். இவர்கள் முதலில் பார்த்திய பகுதிகளில் படையெடுத்து பிறகு காந்தாரம், ஸ்வாட் பள்ளத்தாக்குவரை வந்து பிறகு காசிப் பகுதி வரை தமது ஆட்சியை விரிவுபடுத்தினர். இவர்களது அரசு 100ஆண்டுகள் நிலைத்திருந்தது. இவ்வம்சத்தில் குஜீலா காட்பீஸஸ், வீமா காட்பீஸஸ், கனிஷ்கர் போன்ற சிறந்த அரசர்கள் ஆட்சி செய்துள்ளனர்.

  சின்னங்களும் வாசகங்களும்

  முதன் முதல் குஷாணர் என்ற சொல் “ஹீரோஸ்” என்ற யூச்சி இனத்தலைவனின் காசுகளில் மட்டுமே இடம்பெறுகிறது

  குஜீலா காட்பீஸஸ்

  இவ்வினத்தினரின் காசுகளில் பெரும்பாலும் ஒருபுறம் ரோமானியக் கலைப்பாணியைப் பின்பற்றி மகுடமணிந்த மன்னனின் தலை உருவமும் பின்புறம் ஹெர்மியசின் (கடவுள்) உருவமும் இடம்பெறுகின்றன. இந்தோ - சைத்திய ஆடை அணிந்த ஒரு ஆண் உருவம் வளைவு நாற்காலியல் அமர்ந்திருப்பது போல் பாக்ட்ரிய நாட்டு இரட்டைத் திமில் கொண்ட ஒட்டகம் இடம்பெறுகிறது.

  வீமா காட்பீஸஸ்

  வீமா காட்பீஸஸ் காசுகளில் முன்புறம் சிவன், திரிசூலம், கோடரி போன்ற சின்னங்கள் இடம்பெறுகின்றன. பின்புறம் அரசரின் பெயர் கிரேக்க மற்றும் கரோஷ்டி எழுத்துக்களில் பொறிக்கப்பெற்றுள்ளது. இவ்வாறு இரு மொழி எழுத்துக்களில் காசுகளைப் பொறித்த கடைசி குஷான மன்னர் இவர் என்றே கூறலாம்.

  கனிஷ்கர்

  கனிஷ்கரது காசுகளின் முன்புறம் கனிஷ்கர் இந்திய பாணியில் சால்வார் உடுத்தி, மார்பு புறம் இரு வெள்ளிப்பட்டைகளால் இணைக்கப்பட்ட போர்வை போர்த்தி, வட்டமான குல்லாய் அணிந்து, தன் இடக்கையில் ஈட்டியை ஏந்தி, பலி பீடத்தில் நின்று பலி கொடுப்பது போல் உள்ளது.
  பின்புறம் ஹிலியோஸ், சாலென, ஹெபாய்ஸ்டெஸ் போன்ற பல தெய்வங்களின் உருவங்களும் '' மன்னாதி மன்னர் கனிஷ்கர்'' என்ற கிரேக்க மொழி வாசகம் இடம்பெறுகின்றது. இவரது பிந்தைய காலங்களில் கிரேக்கத்திற்குப் பதில் ஈரானிய அல்லது பாக்ட்ரிய மொழியில் வாசகங்களைப் பொறித்தனர். பின்புறம் சூரியன், சந்திரன், வாயு, நெருப்பு போன்ற தெய்வங்களின் பெயர்களை ஈரானிய மொழியில் பொறித்துள்ளார். ஓஷோ என்ற பெயரில் சிவனின் உருவத்தைப் பொறித்தார். சிவனோடு புத்தரின் உருவத்தையும் புத்த அல்லது சாகமனே புத்தா என்ற வாசங்களைப் பொறித்தார்.

  இவரைத் தொடர்ந்து குவிஷ்கர், வாசுதேவர் அர்டாஷிர் போன்றோரும் காசுகளை வெளியிட்டுள்ளனர்.

  உலோகம்

  குஜீலா காட்பீஸஸ் ஒரு சில செப்புக் காசுகளை வெளியிட்டுள்ளார். பெரும்பாலும் இவர்கள் தங்கத்தாலான காசுகளை வெளியிட்டுள்ளனர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:00:30(இந்திய நேரம்)