தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • பெரிய லெய்டன் செப்பேடு

    (முதலாம் இராஜராஜன்)

    முனைவர் மா. பவானி்
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை


    பெயர்க் காரணம்

    ஹாலந்து நாட்டில் லெய்டன் நகரில் இச்செப்பேடு உள்ளது. ஆகவே இது "லெய்டன் செப்பேடு" என அழைக்கப்படுகிறது. லெய்டனில் இரண்டு செப்பேடுகள் உள்ளன. அவற்றில் இது "பெரிய லெய்டன் செப்பேடு" ஆகும். இச்செப்பேட்டில் ஆனைமங்கலம் எனும் ஊர் குறிப்பிடப்பட்டுள்ளதால் இது "ஆனைமங்கலம் செப்பேடு" என்றும் அழைக்கப்படுகிறது.

    எழுத்தமைதி

    இச்செப்பேடு இரண்டு மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. முதல் பகுதி சமஸ்கிருதத்திலும் இரண்டாவது பகுதி தமிழிலும் உள்ளது.

    செப்பேட்டுச் செய்தி

    முதலாம் இராஜராஜசோழன் (பொ.ஆ.985-1014) ஆட்சியில் நாகப்பட்டினத்தில் ஒரு பௌத்தப் பள்ளி எடுக்கப்பட்டது. இதைக் கடார தேசத்து சூளாமணிவர்மன் என்பவன் எடுப்பித்தான். கடாரம் இப்பொழுது மலேசிய நாட்டில் "ஏகத்தா" என்னும் பகுதியாகும். அப்பௌத்தப் பள்ளிக்கு இராஜராஜன் ஆனைமங்கலம் என்னும் ஊரில் ஏராளமான நிலங்களை வரி நீக்கி அளிக்க ஆணையிட்டான். அவ்வாணையை இச்செப்பேடு குறிக்கிறது. கடல் கடந்த அந்நாட்டு மன்னன் தமிழ் நாட்டில் பௌத்தப் பள்ளி எடுக்கும் அளவுக்கு இராஜராஜசோழனின் பெருமையும் அயலக உறவும் சிறந்திருந்தது. இச்செப்பேட்டில் சோழர் குலத்தைப் பற்றியும் கொடை பற்றியும் ஏராளமான செய்திகள் உள்ளன.

    தமிழ்ப் பகுதியில் இராஜராஜனின் 21 ஆம் ஆட்சியாண்டில் 92 ஆம் நாளில் தஞ்சாவூரில் இராஜாஸ்ரயன் என்னும் தம் அரண்மனையின் தென் பகுதியில் உள்ள மண்டபத்தில் தான் அமர்ந்திருக்கையில் கடாரத்தரசன் சூளாமணிவர்மன், க்ஷத்ரியசிகாமணி வளநாட்டுப் பட்டனக் கூற்றத்து நாகப்பட்டனத்தில் எடுப்பித்திருக்கின்ற சூடாமணி விகாரத்துப் பள்ளிக்கு வேண்டும் நிவந்தங்களுக்காக, க்ஷத்ரியசிகாமணி வளநாட்டுப் பட்டனக் கூற்றத்து ஆனைமங்கலத்தைப் பள்ளிச் சந்தமாக அளித்ததைக் குறிக்கிறது.

     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:53:53(இந்திய நேரம்)