தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Untitled Docement

  • களப்பிரர் காலக் கல்வெட்டுக்கள்

    (பொ.ஆ 3ஆம் நூற்றாண்டு முதல் 6ஆம் நூற்றாண்டு வரை)

    மா. பவானி்
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை
    தமிழ்ப் பல்கலைக்கழகம்
    தஞ்சாவூர்


    களப்பிரர் காலம் - விளக்கம்

    தமிழகத்தில் பொ.ஆ. 3ஆம் நூற்றாண்டு முதல் 6ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டம் இருண்டகாலம் என அழைக்கப்பெறுகிறது. இக்காலத்தில் தமிழகத்தை ஆட்சி செய்தவர் களப்பிரர் என்ற இனத்தவர் ஆவர். களப்பிரர்கள் தமிழகத்தை ஆட்சி செய்துள்ளனர் என்பதற்கு ஒரு சில இலக்கியச் சான்றுகளும் செப்பேட்டுச் சான்றுகளும் உள்ளன.இவர்கள் காலத்தில்தான் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் இயற்றப்பெற்றுள்ளன. இக்காலத்தில் ஆட்சி செய்த அச்சுத விக்கந்த களப்பாளர் என்ற ஒரு மன்னனைத் தவிர வேறு எந்த சான்றுகளும் இக்கால அரசியல் குறித்து அறியக் கிடைக்கப்பெறவில்லை. இச்செய்தியும் புத்ததத்தர் என்ற பௌத்தப் புலவர் எழுதிய ''வினயவிநிச்சயா'' என்ற இலக்கண நூலின் வாயிலாகவே அறியப்பெறுகிறது. பொ.ஆ 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புத்ததத்தர் இந்நூல் மேற்சுட்டப்பெற்ற களப்பிர மன்னன் காலத்தில் எழுதத் துவங்கப்பெற்று முடிக்கப்பெற்றது என்ற செய்தியைத் தம் நூலின் இறுதியில் சுட்டியுள்ளார். இவ்வாறாக இக்காலம் தொடர்பான அதிகச் சான்றுகள் இன்மையால் இக்காலக்கட்டம் இருண்டகாலம் என்று அழைப்பெற்றுள்ளது. 80களில் நூல்களை எழுதிய அனைத்து வரலாற்றாசிரியர்களும் இக்கருத்தையே கூறியுள்ளனர். எனவே 1980க்குப் பிறகு இக்காலத்தைச் (பொ.ஆ. 301 - 600) சேர்ந்த 10க்கு மேற்பட்ட கல்வெட்டுக்கள் பல்வேறு இடங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பெற்று வெளியிடப் பெற்றுள்ளன. இக்கல்வெட்டுக்கள் அரச்சலூர் (4காம் நூ.), பூலாங்குறிச்சி, அம்மன்கோயில்பட்டி, நெகனூர்பட்டி, சித்தன்னவாசல் (5ஆம் நூ.) திருச்சிராப்பள்ளி, பெருமுக்கல், அரசலாபுரம், இந்தளூர், ஈரெட்டிமலை, பறையன்பட்டு, திருநாதர்குன்று, பிள்ளையார்பட்டி, தமதஹள்ளு (பொ.ஆ6ஆம் நூ.) போன்ற இடங்களில் உள்ளன. தமிழக வரலாற்றுப் புனரமைப்பிற்குப் பெரிதும் உதவும் இக்கல்வெட்டுக்கள் குறித்து வரலாற்று மாணவர்கள் அறியாத நிலையில் உள்ளனர். வரலாற்று மாணவர்கள் மட்டுமின்றி தமிழக வரலாற்று ஆர்வலர்களும் பிறரும் இது குறித்து அறியவேண்டும் என்ற நோக்கில் களப்பிரர் காலக் கல்வெட்டுக்கள் என்ற தலைப்பில் இக்கட்டுரை அமைகிறது.

    கல்வெட்டுக்கள் கிடைத்த ஊர்கள் அமைவிடம், முதல் வெளியீட்டுடன் காலக்கட்ட வாரியாக அட்டவணையிடப்பெற்றுள்ளன.

    கல்வெட்டுக்கள் கிடைத்த ஊர்களும் காலமும்

    வ.எண்
    கல்வெட்டு
    இடம்
    வட்டம்/ மாவட்டம்
    காலம் பொ.ஆ.
    1.
    அரச்சலூர்
    ஈரோடு/ ஈரோடு
    4 ஆம்.நூ
    2
    நெகனூர்பட்டி
    செஞ்சி/விழுப்புரம்
    "
    3
    அம்மன்கோயில்பட்டி
    ஓமலூர் / சேலம்
    "
    4
    பூலாங்குறிச்சி
    சிவகங்கை/ திருப்பத்தூர்
    5 ஆம்.நூ.
    5
    சித்தன்னவாசல்
    இலுப்பூர்/புதுகை
    "
    6
    பெருமுக்கல்
    திண்டிவனம்/ விழுப்புரம்
    கி.
    7
    எழுத்துக்கல்லு
    நிலாம்பூர்/கேரளா.
    "
    8
    எடக்கல்
    வயநாடு/கேரளா
    "
    9
    திருச்சிராப்பள்ளி
    திருச்சிராபள்ளி.
    "
    10
    பெருமுக்கல்
    திண்டிவனம்/
    விழுப்புரம்
    "
    11
    அரசலாபுரம்
    விழுப்புரம்
    "
    12
    ஈரெட்டிமலை
    பவானி
    "
    13
    இந்தளுர்
    காஞ்சிபுரம்
    6 ஆம் நூ
    14
    பறையன்பட்டு
    செஞ்சி/விழுப்புரம்
    "
    15
    திருநாதர்குன்று
    "
    "
    16
    பிள்ளையார்பட்டி
    திருப்பத்தூர்/
    சிவகங்கை
    "
    17
    தமதஹள்ளு
    சித்ரதுர்கா/
    கர்நாடகா
    "

    மொழியும் எழுத்தும்

    கல்வெட்டுக்களின் மொழி தமிழ்.

    எழுத்து சங்க காலத் தமிழ் எழுத்துக்களிலிருந்து வளர்ச்சியடைந்த வட்டெழுத்தில் உள்ளன.

    களப்பிரர் காலக் கல்வெட்டுக்கள் வாயிலாக அறியப்பெறுவன:

    மேலே அட்டவணையிடப்பெற்றுள்ள கல்வெட்டுக்களில் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கல்வெட்டாகும். இதுவே இருண்ட காலம் என்று கருதப்பெற்று வந்த களப்பிரர் காலத்திலும் அரசு நடைப்பெற்றுள்ளதை தெரிவிக்கிறது. அத்துடன் களப்பிரர் காலத்தில் சமண சமயத்தினருக்கு மட்டுமின்றி இந்துக் கோயிலான (சிவன் கோயில்) தேவகுலம் அமைக்கப்பெற்று அதற்கு வழிபாடு செய்ய முறைகளை வகுத்துள்ளமையை அறியமுடிகிறது. மேலும் பிராமணர்களுக்கு நிலக்கொடை வழங்கிய செய்தியையும் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இக்காலக்கட்டத்தில் கிடைத்துள்ள கல்வெட்டுக்கள் சமண முனிவர்களுக்குப் பாறைகளைச் சமன் செய்து இருக்கை அமைத்தமைப் பற்றியே பெரும்பாலும் கூறுகின்றன. தமிழிக் கல்வெட்டுக்களில் உள்ளது போல் “பாளிய்” என்ற சொல்லாட்சி இடம்பெறவில்லை. கொடுத்தவர் பெயர் மட்டுமே காணப்பெறுகிறது. சங்க காலப் பிற கல்வெட்டுக்களைக் கொண்டு இவர்கள் சமணர் படுக்கையே செய்து கொடுத்துள்ளனர் என்பதை அறியலாம். சித்தன்னவாசல் ஈரெட்டிமலை போன்ற ஒரு சில ஊர்களிலுள்ளக் கல்வெட்டுக்கள் “சுனை” மற்றும் “அணை” போன்ற நீர் நிலைகள் அமைத்துக் கொடுத்ததைப் பற்றிக் கூறுகிறது. பறையன்பட்டு மற்றும் திருநாதர்க் குன்று கல்வெட்டுகள் சமண ஆசாரியர்க்கு நிசீதிகை அமைத்தச் செய்தியைக் கூறுகிறது. இதுவரை கிடைத்த கல்வெட்டுக்கள் அனைத்தும் சமணத் துறவிகளுக்குப் பிறர் செய்த கொடைகளை (பாளிய்-இருக்கை) மட்டுமே பேசின. ஆனால் இக்கல்வெட்டுக்கள் இரண்டில் மட்டும் சமணசமயத்தின் கொள்கை பேசப்பெறுகிறது. இவ்வகையில் இது முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டாகும். இந்தளூர் மற்றும் அரசலாபுரம் கல்வெட்டுக்கள் ஊருக்காகச் சண்டையிட்ட கோழிக்கும் கல்வெட்டு எடுத்ததைப் பற்றியும், கோழிக்கும் செல்லமாகப் பொற்கொற்றி எனப் பெயரிட்டு அழைத்துள்ளது பற்றிய சுவையான செய்தியைத் தருகிறது. மற்றும் காதன், சாத்தன், செந்தண்டன், குசலன், நக்கன், பெந்தோடன் போன்ற பெயர்களை ஆட்பெயர்களாக கொண்டுள்ளனர் என்பதை அறியலாம். எக்காட்டூரு, மாசக்கோடு, கீழச்சேரி, மேற்சேரி, பணாட்டு, வெங்கோமலை போன்ற இடப்பெயர்கள் இருந்துள்ளதையும் வண்ணக்கன், தச்சன் போன்ற இனங்கள் இருந்தமையினையும் அறியமுடிகிறது.

    களப்பிரர் காலக் கல்வெட்டுக்களும் அவற்றின் கல்வெட்டுப்பாடங்களும் பொருளும்:

    கல்வெட்டுப் பாடமும் பொருளும்

    அரச்சலூர் கல்வெட்டு

    1. எழுத்தும் புணருத்தான் மலைய் வண்ணக்கன் தேவன் சாத்தன்
    2. த தை தா தை த
    தை தா தே தா தை
    தை தா (த) தா தை
    தா தை தா தை த
    3. கை த தை த கை
    த கை த கை த
    தை த கை த தை
    கை த தை த கை

    செய்தி:

    இக்கல்வெட்டில் உள்ள தா, தை, தா என்பது போன்ற இசைக்குறிப்புக்களைத் (எழுத்துக்களை) தொகுத்தது மலையிலுள்ள வண்ணக்கன் தேவன் சாத்தன் என்பவர் ஆவார். வண்ணக்கன் என்பது கொங்கு வேளாளர் இனத்தவரின் ஒரு பிரிவினர் ஆவர். இன்றும் கூட இவர்கள் கொங்கு வேளாளச் சாதிப் பிரிவினருள் ஒரு கோத்திரமாக உள்ளனர்.

    சிறப்பு:

    தமிழகத்தில் இசைக் குறிப்புகள் பற்றிக் கூறும் முதல் கல்வெட்டு. எழுத்தமைதி
    தமிழியிலிருந்து வட்டெழுத்துக்கு மாறும் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது

    பூலாங்குறிச்சி கல்வெட்டுக்கள்

    பொதுவாக தமிழகத்தில் பொ.ஆ.6ஆம் நூற்றாண்டு வரை கிடைக்கும் கல்வெட்டுக்கள் ஒரு வரி முதற்கொண்டு 5,6 வரிகளைக் கொண்ட சிறிய கல்வெட்டுக்களாகவே உள்ளன. ஆனால், பூலாங்குறிச்சிக் கல்வெட்டுக்கள் மட்டும் பெரிய அளவில் அதிக வரிகளைக்கொண்டு விளங்குகின்றன. இவ்விடத்தில் மொத்தம் 3 கல்வெட்டுக்கள் இருந்துள்ளன. அவற்றில் ஒன்று முழுவதும் சிதைந்துள்ளது. மீதமுள்ள 2 கல்வெட்டுக்களில் ஒன்று 22 வரிகளைக் கொண்டுள்ளது. அதில் முதல் 9வரிகள் முற்றிலும் சிதைவுண்டுள்ளன. அதற்கு அடுத்தவரிகளும் தொடர்ச்சியின்றி இடம்பெற்றுள்ளன. இருப்பினும் ஆர். நாகசாமி, நடனகாசிநாதன், எ.சுப்பராயலு ராகவ வாரியார் போன்ற கல்வெட்டுப் பேரறிஞர்கள் இக்கல்வெட்டினைப் படித்துப் பொருள் தந்துள்ளனர். மூன்றாவதாக உள்ளக் கல்வெட்டில் ஒரு சில சொற்கள் இடையிடையே சிதைவுற்றுள்ளன. இருப்பினும் இக்கல்வெட்டு முழுவதும் படித்துணரப் பெற்றுள்ளது. அக்கல்வெட்டுப் பாடம் பின்வருமாறு.

    கல்வெட்டு 1:

    1. கொச்சேந்தன் கூற்றற்கு யாண்டு நூற்றுத்தொண்ணூற்றி
    2. ரண்டு நாண் முப்பத்தாறு பக்கந் தைப்பிறை நாள் ப[ன்னிரண்டு] வேள் மருகன் மகன் கடலகப் பெரும்படைத்
    3. தலைவன் எங்குமான னொல்லையூருக் கூற்றத்து வேள்கூருப் பச்செறிச்சின் மலை மேற் செஇவித்த தேவகுலமும்
    4. முத்தூற்றுக் கூற்றத்து விளமரு[ச்] செஇவித்த தேவகுலமும் மதிரை உலவியத்தான் குளத்தின் வடபக்கத்துச் செஇவி
    5. த்த தாபதப்பள்ளியுள் [வா]சி தேவனாரு கோட்டமும் மவை அத்திக்கோயத்தாரு முள் மனையாருந் நாற்பாற்றிணைகளுந் தமக்கு காவலாக
    6. அவற்றுக்குற்றது செ[யக்] கொண்டமையால் லவற்றை வ[ழிபடுவது]ம் மவற்றுக்குப் பெயப்பட்ட அறப்புறந் நடையாட்டுவதூஞ் செயும்
    7. பாண்டங்கருஞ் சேவுக்கரும் [வி]ரும்மாச்சாரிகள்ளுந் தருமிகளுமூ[ர்] காவல் கொண்டா[ருஆ] ராஇந்து வைஇக்கப் பட்டாரு அல்லது வழிபடப்
    8. பெறாமையும் மவற்றுட் பச்செறிச்சி[ல்] மலைமேற் செஇவி[த்த தேவகு] லத்துக்குக் குடும்பியராவாரு குழ
    9. [லூ]ருத் துஞ்சிய உடையாரால் வேள்கூருப் பெயப்பட்ட குடும்பி[யர் வழியல்லது வேறொரு] குடும்பாடப் பெறாமையும்
    10. மத் தேவகுலத்துக் குற்றது செய்து வல்லக்குற்றந் தொழில் செய..க[ளு] .. [டஞ்] செயவும் மெழுதி வைக்கென்றருள்ளித்தாரு
    11. கேட்டாருலவியப் பெருந்திணை நல்லங்கிழானெஇ னங்குமானும் முலவியப் பெருந்திணை ப... ஆறு கிழான் கீரங்காரி
    12. யு முலவியப் பெருந்திணை அம்பருகிழான் குமாரம் போந்தையுங் கேட்டு வந்து கூறின [னோ]லை எழுதுவான் [றம]ன் காரி
    13. கண்ணன் இது கடைப்[பி] ஓலை காற் கண்டெழுதிக் கொடுத்தேன் [வே]ண்ணாட்டான் [நரி] நாரியங்காரி

    கல்வெட்டு 2

    1. .............ந்தற்கு யாண்டு நூற்றுத் ............ ...........
    2. நா[ற்] .... ர.ப. ... ... ... ... ...
    3. [னு] ... ... ளள் [ளை]... ... ... ...
    4. ... ... ... ... [ள்] மருகண் மகன் [க]டலகப் பெ
    5. ... ... ... ... ன் ஒல்லையூருக்கூற்[ற]
    6. ... ... ... ... ... ... ... ...
    7. .. செ ... வகள.. வய ... ... ...
    8. ... ... ... ... ... ... ... ...
    9. [பெ] ரு நிலனும் புன்செஇ வெள்ளேற்றான் மங்கலமென்
    10. ... [ழவரும்] . ரு..ங் கூடலூரு நாட்டுப் பிரம்மதாயஞ் சிற்றையூருப் பிரம்மதாயங்கி
    11. ............. ழமையும் மீயாட்சியுங் கொண்டாளும் மவூருப் படுங்கடைய வயலென்னும்
    12. .... ... ... புலத்தவன் விற்றுக்கொண்டு கொடுத்த புன்செ நிலனு
    13. ... ... ... துப் பிரம்மதாயத்துட் பிரம்மதாயக் கிழவரா[ன]
    14. ... றாராலும் பிரம் .... யுங் காரண்மையுமாக க் கொண்டாளுந் நீர் நிலனும் புன்
    15. ... நிலனும் பிறவுஞ் ... பாண்டி நாட்டுங் கொங்கு நாட்டும் மவரு காராண்கிழமையுங் கல
    16. க் கிழமையும் மேல் [லாண்மை] கொண்ட[ன]வும் மவருடைய
    காலாசமுந் தோட்டங்களும் மவரு தமரையும் ம
    17. வரு குடிகளையும் ... ... டையாரும் பிரம்ம தாயமுடையாருந் நாடுகாப்பாரும் புறங்காப்
    18. பாரும் முப்பு [ரு காப்பாரு] ... ... தாயந் நெறி ஆ . . . செஇதாரு தத்தமானும் வேறு வேறு
    ஆஇரத்தாறுநூ
    19. று காணந் . . று . . . டு வே . . . ன்ற ரு கேட்டாருல வியப் பெருந்திணை நல்லகிழா னெ
    இனங்கு
    20. மானும் முலவி . . . . . . ம . . . ங்கிழான் . ளங் கூற்றனும் முலவியப் பெருந்திணை ஆலத்தூர் கி
    21. ... ... ... லை . . துவான் [றமன்வ] டுகங் குமான். . டைப்பி [ஓ]
    22. ... [தளருக்கு] ... ... ...

    செய்தித் தொகுப்பு

    கல்வெட்டு :1

    இரண்டு கல்வெட்டுக்களுள் ஒரு கல்வெட்டு சேந்தன் கூற்றன் என்ற அரசன் ஆட்சியில் நூற்றுத் தொண்ணூற்றிரண்டாம் ஆண்டில் பதிக்கப்பட்டது. வேள் மருகண் மகனும் கடலகப் பெரும் படைத்தலைவன் என்ற பட்டத்தைப் பெற்றவனும் ஆன எங்குமான் என்பவர் இரு தேவகுலங்களும், ஒரு கோட்டமும் எழுப்பிய செய்தியைக் கூறுகிறது. அந்த்த் தேவகுலத்தைப் பாதுகாப்பதற்கும் , அதில் வழிபாடுகள் செய்வதற்கும் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே உரிமை வழங்கப்பெற்றுள்ளது. அரசனது ஆணையை ஒருவர் கேட்டுப் பின்னர் அது ஓலையில் எழுதப்பெற்று இறுதியில் அது கல்லில் பொறிக்கப்பெற்றுள்ளது. இந்த நடைமுறை கல்வெட்டுக்களில் அழகுற விளக்கப்பெற்றுள்ளது.

    கல்வெட்டு :2

    அதாவது (பூலாங்குறிச்சி) பச்செறிச்சில் மலைமேல் எழுப்பப்பட்ட தேவகுலம் அல்லது கோயில் கொடைப் பெற்றுள்ளதைக் குறிப்பிடுகிறது. அக்கோயிற்கு மேற்குறிப்பிட்ட நில உரிமைகளோடு பாண்டிநாட்டிலும் கொங்கு நாட்டிலும் காராண்கிழமை, களக்கிழமை, மேலாண்மை உரிமைகளும், காலாசமும், தோட்டங்களும் இருந்தன. அவை யாவற்றையும், அவருடைய குடிகளையும் பிரம்மதாயமுடையார், நாடுகாப்பார், புறங்காப்பார், முப்புருகாப்பார் முதலியோர் பேணிக்காக்கவேண்டும் என்பதும் தீங்கிழைத்தவர்களுக்கு ஆயிரத்தறுநூறு காணம் தண்டம் விதிக்கவேண்டும் என்பதும் அக்கல்வெட்டுச் செய்தியாகும்.

    அம்மன்கோயில்பட்டி கல்வெட்டு

    பரம்பன்கோகூர் கிழார் மகன் வியக்கன்
    கோபன் கணதேவன் தொட சுனை

    செய்தி:

    (இந்த மலையிலுள்ள) சுனையைப் பரம்பன் கோகூர் கிழானின் மகன் வியக்கன் கோபன் கணதேவன் என்பவர் ஏற்படுத்தியுள்ளார். பரம்பன் என்பது விவசாய மக்களின் ஒரு பிரிவாகும். கிழார் என்றால் நிலத்துக்குச் சொந்தக்காரர் அல்லது இப்பகுதியின் தலைவன் என்று பொருள் கொள்ளலாம்.

    நெகனூர் பட்டி கல்வெட்டு

    பெரும்பொகழ்
    சேக்கந்தி தாயியரு
    சேக்கந்தண்ணி செ
    யிவித்த பள்ளி

    செய்தி:

    பெரும்பொகழ் என்ற ஊரைச் சேர்ந்த சேக்கந்தி என்பவளின் தாயார் சேக்கந்தண்ணி செய்வித்த பள்ளி (சமணர் இருக்கை).

    சித்தன்னவாசல் கல்வெட்டு

    1. சம்பொய்கை பேடு தைத்த கல் 2. பெந்தோடன் பொய்கை 3 . நக்கன் 4. கொற்றை காய்வன் 5. சம்பொகல் சாத்தன் 6. சிறுசெண்ணன் 7. காதன்
    இவை சமணர் இருக்கை செய்து கொடுத்தவர்களின் பெயர்களாகும்.

    திருச்சிராப்பள்ளி கல்வெட்டு

    1. அகரம் குசலன் 2. செந்தண்டன்

    பெருமுக்கல் கல்வெட்டு

    இராசர்

    அரசலாபுரம் கல்வெட்டு

    1. முகையுரு மேற்சேரி
    2. (கு) யாடிக் க
    3. ருகிய கோழி

    செய்தி:

    முகையுருவைச் சேர்ந்த மேற்சேரிக்காகச் சண்டையிட்டு வெற்றிபெற்ற பின் இக்கோழிக்கு உருவம் செதுக்கப்பெற்றுள்ளது

    சிறப்பு:

    தொன்மைத் தமிழகத்தில் காளைச் சண்டையைப் போல் கோழிச் சண்டையும் நிகழ்ந்துள்ளதை விளக்கும் முதல் கல்வெட்டு

    இந்தளூர்க் கல்வெட்டு

    கீழச்சேரிக் கோழி (பொ)
    ற்கொற்றி

    செய்தி :

    கீழச்சேரி கோழியின் பெயர் பொற்கொற்றி என்பது. கோழிக்கும் பொற்கொற்றி
    எனப் பெயரிட்டிருப்பது ஒரு சுவையான செய்தியாகும்.

    சிறப்பு :

    தொன்மைத் தமிழகத்தில் காளைச் சண்டையைப் போல் கோழிச் சண்டையும் நிகழ்ந்துள்ளதை விளக்கும் கல்வெட்டு.

    ஈரெட்டிமலைக் கல்வெட்டு

    துறுகய்யுள்ளாரு கல்

    செய்தி:

    துறுகை என்பது தூம்பைக் குறிக்கும். எனவே தூம்பிலிருந்து வரும் நீரை அடைக்கும் கல் என்று ஐராவதம் மகாதேவன் பொருள் தந்துள்ளார்.

    பறையன்பட்டு கல்வெட்டு

    நமோத்து, பாணாட்டு வச்
    2. ச ணந்தி ஆசாரிய
    3. ர் மாணாக்கராராதனி
    4. நோற்று (மு)டித்த (நி)
    5. சீதிகை.

    செய்தி:

    “நமோத்து” என்பது “நமோஸ்து” என்ற சமஸ்கிருதச் சொல்லைக் குறிக்கிறது. தமிழில் வணங்குகின்றேன் என்று பொருள். பாணாட்டைச் சேர்ந்த வச்சநந்தி என்ற சமண ஆசாரியரின் மாணாக்கர் சாகும்வரை உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்ததற்காக எடுக்கப்பெற்ற தவம் செய்யும் இருக்கை என்பது இதன் பொருள். நிசீதிகை என்றால் சமண சமயத்தில் தவம் செய்யும் இருக்கை என்று பொருள். சமணத்துறவிகள் வடக்கிருந்து உண்ணா நோன்பிருந்து உயிர் துறப்பதற்காக இந்நிசீதிகைகள் ஏற்படுத்தப்பெறும்.

    சிறப்பு:

    சமண முனிவர்களின் சமய மாண்பை விளக்கும் கல்வெட்டாகும். இதுவரை கிடைத்த கல்வெட்டுக்கள் அனைத்தும் சமணத் துறவிகளுக்குப் பிறர் செய்த கொடைகளை (பாளிய் - இருக்கை) மட்டுமே பேசின. ஆனால் இக்கல்வெட்டில் சமணசமயத்தின் கொள்கை பேசப்பெறுகிறது. இவ்வகையில் இது முக்கியத்துவம் வாய்ந்தக் கல்வெட்டாகும்.

    திருநாதர்குன்று

    ஐம்பத்தேழன
    2. சனந் நோற்ற
    3. சந்நிர நந்தி ஆ
    4. சிரிகரு நிசீதிகை

    செய்தி:

    சந்திரநந்தி என்ற சமண ஆசாரியர் 57 நாட்கள் (சாகும்வரை) உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்ததற்காக எடுக்கப்பெற்ற தவம் செய்யும் இருக்கை என்பது இதன் பொருள். நிசீதிகை என்றால் சமண சமயத்தில் தவம் செய்யும் இருக்கை என்று பொருள். சமணத்துறவிகள் வடக்கிருந்து உண்ணா நோன்பிருந்து உயிர் துறப்பதற்காக இந்நிசீதிகைகள் ஏற்படுத்தப்பெறும்.

    சிறப்பு:

    சமண முனிவர்களின் சமய மாண்பை விளக்கும் கல்வெட்டாகும். இதுவரை கிடைத்த கல்வெட்டுக்கள் அனைத்தும் சமணத் துறவிகளுக்குப் பிறர் செய்த கொடைகளை (பாளிய் - இருக்கை) மட்டுமே பேசின. ஆனால், இக்கல்வெட்டில் சமணசமயத்தின் கொள்கை பேசப்பெறுகிறது. இவ்வகையில் இது முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டாகும்.

    பிள்ளையார்பட்டி கல்வெட்டு

    எக்காட்டூரு
    2. க் கோன் பெருந்தசன்

    செய்தி:

    எக்காட்டூரின் தலைவன் பெருந்தசன் . பெருந்தச்சன் என்பதே பெருந்தசன் எனக்குறிப்பிடப்பெற்றுள்ளது. சங்க இலக்கியங்கள் தேர்களைச் செய்யும் தச்சர்களையும் அவர்கள் தேருக்குச் செய்த சக்கரங்களையும் குறித்து வியந்து பேசுகின்றன. இவ்வியத் தகுத் தச்சர்களின் தலைவனாகப் பெருந்தச்சன் என்பவர் விளங்கியிருக்கக் கூடும்.

    எடக்கல் கல்வெட்டு

    பல்புலி தாத்தகாரி.
    2. வெங்கோமலை கச்சவநு சத்தி

    செய்தி 1:

    பல்புலி என்ற ஊரைச் சேர்ந்த தாத்தகாரி.

    இவர் சமண முனிவருக்கான இருக்கையினை அமைத்துத்தந்துள்ளார். இது கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பெறவில்லையாயினும் அவ்வாறே புரிந்துகொள்ள இயலும்.

    செய்தி 2 :

    வெங்கோமலை என்ற ஊரைச் சேர்ந்த கச்சவநு சத்தி
    இவர் சமண முனிவருக்கான இருக்கையினை அமைத்துத் தந்துள்ளார். இது கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பெறவில்லையாயினும் பிற கல்வெட்டுக்களைக் கொண்டு நாம் புரிந்து கொள்ள இயலும்.

    எழுத்துக்கல்லு கல்வெட்டு

    மாசக்கோடு நீரணவாய்

    செய்தி:

    மாசக்கோடு என்ற ஊரைச் சேர்ந்த அணையின் வாய் என்று பொருள்.

    தமதஹள்ளு கல்வெட்டு

    ஏழூர்
    2. மோநல(ஞ்)
    3. சாத்தன்

    செய்தி:

    ஏழூரைச் சேர்ந்த மொநலஞ்சாத்தன் என்பவர் இச் சமணர் படுக்கையைச் செய்துள்ளார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:56:24(இந்திய நேரம்)