தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சங்ககாலச் சோழர் காசுகள்

 • சங்ககாலச் சோழர் காசுகள்

  முனைவர் மா.பவானி
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

  சங்ககாலச் சோழர் காசுகளில் இதுவரை முத்திரைக் காசுகள் கிடைக்கவில்லை எனினும் ஒரு பக்கம் புலி சின்னம் மட்டும் முத்திரை முறையில் பொறிக்கப் பெற்றுள்ள ஒரே ஒரு காசு மட்டும் கிடைத்துள்ளது. ஆயினும் முத்திரைக் காசுகளைத் தழுவி யானை, வேலியிட்ட மரம், 6 முகடுள்ள குன்று, நதி, காளை, மீன்கள் போன்ற எச்சின்னமும் முதன்மைப்படுத்தப்படாத வகை காசுகளை இவர்கள் வெளியிட்டுள்ளனர். அத்தகைய காசுகள் முற்காலத்தை (பொ.ஆ.மு. 2.1 ஆம் நூ. ) சேர்ந்தவையாகும். எத்தகைய காசுகளாயினும் ஒரு பக்கம் சோழரது குலச்சின்னமான வாய்ப்பிளந்து வால் உயர்த்தி நிற்கும் புலி உருவம் இவர்களது காசுகளில் இடம்பெற்றிருக்கும். பிற அரச குலங்களைப் போலவே யானை முதன்மைப்படுத்தப்பட்டு வலது பக்கமோ அல்லது இடது பக்கமோ நோக்கி நிற்பது போல உள்ள காசுகளும் குதிரை பூட்டிய ரதம், திமிலுள்ள காளை போன்ற காசுகள் இடைக்காலத்தையும் (பொ.ஆ. 1-2 ஆம் நூ.) யானை, கொடி, மேற்புறம் குடை விளிம்பை ஒட்டி சிறு உருவம் உள்ள காசுகள் பிற்காலத்தையும் (பொ.ஆ.3) சேர்ந்தவையாகக் கருதப் பெறுகின்றன. சங்ககாலச் சோழரது எழுத்துப்பொறிப்புக் காசுகள் இது நாள் வரையில் கிடைக்கவில்லை என்பதும் இங்குச் சுட்டத்தக்கது.

  கிடைப்பிடம்:

  யானை
  புலி

  சோழரது காசுகள் கரூர் – அமராவதி, மதுரை – வைகை ஆற்றுப்படுகை அரியலூர் போன்ற இடங்களில் கிடைத்துள்ளன. காவிரிப்பூம்பட்டின அகழாய்வில் மணிக்கிராமம், வானகிரி போன்ற இடங்களில் முன்புறம் யானையும் பின்புறம் புலியும் பொறித்தக் காசுகள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் மட்டுமின்றி தாய்லாந்தில் குவான் – லுக் – பத் (kuan-luk-pat) என்ற இடத்தில் ஒரு பக்கம் ரதம் பூட்டிய குதிரையும் பின்புறம் புலியும் உள்ள காசு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

  எடையும் உலோகமும்:

  பெரும்பாலான சோழர்களது காசுகள் செம்பினால் ஆனவை. ஈயக்காசுகள் அரிதாகவே கிடைக்கின்றன.
  மூவேந்தர்களும் ஒரு பக்கம் யானை, காளை, குதிரை போன்ற பல சின்னங்களை பயன்படுத்தினாலும் மற்றொரு பக்கம் தங்களது குலச் சின்னங்களான மீன் (பாண்டியர்), நாணேற்றப் பெற்ற வில் அம்பு (சேரர்), வால் உயர்த்தி வாய்ப்பிளந்து நிற்கும் புலி (சோழர்) தங்களது காசுகளில் பொறித்துள்ளனர். இச்சின்னங்கள் கொண்டு கிடைத்துள்ள காசு எந்த அரச குலத்தைச் சார்ந்தது என எளிதாக இனங்காண இயலும். சிதறல்களாக்க் கிடைக்கும் காசுகளின் எடை அளவுகளை உத்தேகமாக்க் கூற இயலுமே தவிர துல்லியமாக்க் காணவியலாது. அதேபோல் இக்காசுகளுக்கு கிடைப்பிடமும் (எளிதில் பிற இடங்களுக்கு எடுத்துச்செல்லக் கூடிய இயல்பினால்) குவியலாக ஆற்றுப்படுகைகளிலும் கிடைத்துள்ள காசுகளைத் தவிர சிதறலாகக் கிடைக்கும் காசுகளுக்கு உறுதியாகக் கூற இயலாது. அந்தந்த ஆய்வாளர்களும் காசு சேகரிப்பாளர்களும் அந்தக் காசுகளை எவ்விடத்திலிருந்து பெற்றனரோ அந்த இடமே கிடைப்பிடமாகக் கருதக்கூடும். பெரும்பாலான தனியார் சேகரிப்பிலுள்ள காசுகள் வணிகர்களிடமிருந்து விலைக் கொடுத்தே வாங்கப் பெறுகின்றன. இவற்றின் உண்மையான கிடைப்பிடம் காண்பது எளிதல்ல.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:45:15(இந்திய நேரம்)