தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மரக்காயர் பட்டினம்

  • மரக்காயர்

    முனைவர் பா.ஜெயக்குமார்
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

    அறிமுகம் :

    பண்டைக் காலத்தில் கடல்சார் வணிக ஈடுபாடு கொண்டிருந்த குழுக்களில் ‘மரக்காயர்’ என்பவர்களும் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

    பெயர்ச் சிறப்பு :

    மரக்காயர்கள் இசுலாம் மதம் சார்ந்தவர்கள் ஆவர். எனினும், மரக்காயர் என்ற பெயர் ‘மரக்கலராயர்’ என்ற சொல்லிலிருந்து தோன்றியது என்பது பொதுவான கருத்தாகும். இவர்கள் மரக்கலங்களைச் செலுத்துகின்ற மாலுமிகளாக இருந்துள்ளனர் என்பதை அண்மைக்கால ஆவணங்கள் வழி பார்க்கும்போது மேற்சுட்டிய பெயர்க்காரணம் தெளிவாகிறது.

    கல்வெட்டுக் குறிப்பு :

    கி.பி 17 & 18 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகக் கடல்சார் வணிகத்தில் மரக்காயர்கள் மிக முக்கியப் பங்கு வகித்ததை அக்காலப் போர்த்துக்கீசிய ஆவணங்கள் மிகுதியாகப் பேசுவதைக் காணமுடிகிறது ( S.Jayaseela Stephen, Portuguese in the Tamil Coast, 1998). எனினும், இதற்கு முன்பு ஐநூறு ஆண்டுகள் இக்குழுவினரின் ஆதிக்கம் பாண்டிய நாடு மற்றும் சோழ நாட்டுக் கடற்கரைப் பகுதிகளில் இருந்ததைச் சான்றுகளின் வாயிலாக அறியமுடிகிறது. இந்தோனேசியா, ஜகார்த்தா அருங்காட்சியகத்தில் காணப்படும் தமிழ்க் கல்வெட்டு ஒன்றில் ‘மரக்கலநாயன்’ என்ற பெயர் குறிப்பிடப்படுவது சிறப்புக்குரியதாகும். இக்கல்வெட்டு சக ஆண்டு 1010இல் வெளியிடப்பட்டுள்ளதால் முதலாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டாக்க் கருதலாம். எனவே, மரக்காயர்களின் கடற்செலவுகள் கி.பி 11ஆம் நூற்றாண்டிலேயே காணப்படுவதை அறியமுடிவதோடு இக்குழுவினரின் வரலாற்றைக் காலத்தால் முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கும் மேற்சுட்டிய கல்வெட்டு மிகவும் துணை புரிகிறது எனலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:50:34(இந்திய நேரம்)