தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கைக்கோடரி ஒரு பழங்கற்காலக்கருவி

 • கைக்கோடரி
  ஒரு பழங்கற்காலக்கருவி

  முனைவர் வீ.செல்வகுமார்
  உதவிப் பேராசிரியர்
  கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

  கைக்கோடரி (hand axe) என்பது கல்லால் செய்யப்பட்ட ஒரு பழங்கற்காலக் (Palaeolithic Period) கருவியாகும். இதைக் கையில் பிடித்துகொண்டு கோடரி போல வெட்டுவதற்குப் பயன்படுத்தலாம் என்பதால், இது கைக்கோடரி என்று அழைக்கப்படுகின்றது.

  பழங்கற்காலக் கைக்கோடரி

  சிறப்பு :

  படி நிலை (பரிணாம, evolution) வளர்ச்சியின் தொடக்க நிலையில் இருந்த மனித மூதாதையர்கள் முதன்முதலில் உருவாக்கிய நல்ல வடிவமுள்ள கருவி இதுவாகும். மனித மூதாதையர்கள் நல்ல வடிவமைக்கும் திறனைப் பெற்றிருந்தனர் என்பதற்கு இக்கருவியின் வடிவமைப்பு ஒரு சிறந்த எடுத்துகாட்டாகும். இக் கருவிகளைச் சுமார் பதினாறு லட்சம் வருடங்களுக்கு முன், சமூகம் தொழில் நுட்ப வளர்ச்சிபெறாத நிலையில், மனித மூதாதையர்கள் செய்தார்கள் என்பதை நாம் மனதில் கொண்டால், இவற்றின் சிறப்பை நாம் புரிந்துகொள்ளலாம். இக்கருவிகள் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டங்களில் காணப்படுகின்றன.

  பிற பெயர்கள் :

  இக்கருவி அச்சூலியன் கருவி (Acheulian tool) மற்றும் இருமுகக்கருவி (Bifacial tooltool) என்ற பெயர்களைப் பெற்றுள்ளது. இது முதன்முதலில் செயின்ட் அச்சூல் என்ற பிரான்சு நாட்டு ஊரில் கண்டுபிடிக்கப்பட்டதால், அச்சூலியன் கருவி என்ற பெயரைப் பெற்றது. உலகளவில் இவ்வகைக் கருவியை பௌஷ தெ பெத் (Boucher de Perthes) என்பவர் 1836 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். இதன் இரு பக்கங்களிலும் நேர்த்தியாகச் செதில்கள் (flakes) உடைத்து எடுக்கப்பட்டு வேலைப்பாடுகள் நடைபெற்றிருப்பதால், இது இருமுகக்கருவி (bifacial tool) என்றும் அழைக்கப்படுகின்றது.

  இந்தியாவில் முதல் கண்டுபிடிப்பு :

  இக்கருவியை, இந்தியாவில் முதன்முதலில் இராபர்ட் புரூஸ் பூட் என்ற நிலப்பொதியியல் வல்லுனர் 1863 ஆம் ஆண்டு சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் கண்டுபிடித்தார். அதனால் இக்கருவிகள் அடங்கிய தொழிற்கூடம் சென்னைக் கைக்கோடரித் தொழிற்கூடம் (industry) எனப்படுகின்றது.
  இதே காலகட்டத்தில் சோகன் தொழிற்கூடம் என்ற வேறு ஒரு தொழிற்கூடம் வட இந்தியாவின் சில பகுதிகளில் வழக்கில் இருந்தது. இதில் வெட்டும் கருவிகள் (Chopper-Chopping tools) பயன்படுத்தப்பட்டன.

  காலம் :

  இக்கருவிகள் கீழைப் பழங்கற்காலத்தில் (Lower Palaeolithic) முதன்முதலில் பயன்படுத்தப்பட்டன. பின்னர் இடைப்பழங்கற்காலத்திலும் (Middle Palaeolithic) பயன்பாட்டில் இருந்தன. இவை சுமார் 16 லட்சத்திலிருந்து ஒரு லட்சம் வருடங்களுக்கு முன்பு வரை பயன்படுத்தப்பட்டன என்று கருதப்படுகின்றது. ஆனால் இதற்குப் பிற்காலத்திலும் கூட சில இடங்களில் இவை பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

  மனித இனம் :

  இதை ஹோமோ எர்கார்ஸ்டர் மற்றும் ஹோமோ எரக்டஸ் எனப்படும் மனித மூதாதையர் இனங்கள் செய்து பயன்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

  வடிவமைப்பு :

  நல்ல கூழாங்கற்களைத் தேர்ந்தெடுத்து, கற்களைச் சுத்தியல் (Hammer stone) போலப் பயன்படுத்தி, செதில்களை உடைத்து இதை நேர்த்தியாக வடிவமைத்துள்ளனர்.
  இது கூரான முனையைக் கொண்டுள்ளது. அடிப்பகுதி அரை வட்டவடிவத்திலும், பக்கவாட்டுப்பகுதி மேலேசெல்லச்செல்ல உட்புறம் குறுகி இலை வடிவில் அமைந்துள்ளது. ஆனால் எல்லாக் கருவிகளும் இது போன்ற அமைப்பைப் பெற்றிருப்பதில்லை. சில முக்கோண வடிவிலும், சில நீள்வட்ட வடிவிலும் அமைந்திருக்கும். சில கருவிகள் நல்ல வடிவமில்லாமலும் காணப்படும்.

  கல்வகை :

  குவார்சைட் (quartzite) எனப்படும் ஓரு வகை உருமாறிய கல் (metamorphic) வகையை இக்கருவிகள் செய்யப்பயன்படுத்தி உள்ளனர். இக்கற்கள் கிடைக்காத இடங்களில், சுண்ணாம்புக்கல், கிரானைட் போன்ற கற்களையும் பயன்படுதியுள்ளனர்,

  பயன்பாடு :

  இக்கருவியின் பக்கவாட்டுப்பகுதிகள் வெட்டுவதற்கும், கூர்முனை தோண்டுவதற்கும் பயன்பட்டது. மேலும் இதை மரக்கம்புகளில், தாவரக்கொடிகளைக் கொண்டு பிணைத்து, ஈட்டி போலவும் அக்கால மக்கள் பயன்படுத்திருக்கலாம்.

  கிடைக்குமிடம் :

  தென்னிந்தியா, மத்திய இந்தியா உட்பட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளிலும் கிடைக்கின்றது.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:42:26(இந்திய நேரம்)