தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • ஈமச்சின்னங்கள்

  முனைவர் வீ.செல்வகுமார்
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

  இறந்தவர்களைப் புதைத்து, அந்த இடத்தின் மீது அல்லது இறந்தவர்களின் நினைவாக எழுப்பப்படும் சின்னங்கள் ஈமச்சின்னங்கள் எனப்படும். இறந்தவர்களைப் புதைத்த இடத்தில் சில நேரங்களில் எந்தப் பெரிய நினைவுச்சின்னமும் அமைக்கப்படுவதில்லை. கற்கள் மட்டும் வைக்கப்படுவதும் உண்டு. இறந்தவர்களைப் புதைக்கும் வழக்கம் நியாண்டர்தால் எனப்படும். இடைப்பழங்கற்கால மனிதர்களால் முதன் முதலில் தொடங்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

  ஈமச்சின்னங்கள் இந்தியாவில் நுண்கற்காலம் அல்லது இடைக்கற்காலத்திலிருந்து உருவாக்கப்பட்டன. இவை வட இந்தியாவில் பல இடங்களில் கண்டறியப்பட்டுள்ளன. தமிழகத்தில் இக்காலத்தில் இறந்தவர்களைப் புதைத்தற்கானச் சான்றுகள் மதுரை மாவட்டத்தில் ச.பாப்பிநாயக்கன் பட்டி என்ற ஊரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

  சிந்துவெளி நாகரித்தில் இறந்தவர்கள் குழிகளில் புதைக்கப்பட்டனர். இந்நாகரிகத்தின் தோலாவிரா என்ற இடத்தில் பெருங்கற்காலச் சின்னங்களை ஒத்த ஈமச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

  புதிய கற்காலத்தில் இறந்தவர்கள் வீட்டிற்குள்ளேயே புதைக்கப்பட்டனர். இக்கால மக்களின் ஈமச்சின்னங்கள், தென்னிந்தியாவில் பல இடங்களில் கிடைக்கின்றன. இவர்கள் குழிகளிலும், பானை, தாழிகளிலும் இறந்தவர்களைப் புதைத்தனர்.

  பெருங்கற்காலத்தில்தான் ஈமச்சின்னங்கள் பெரிய அளவில் எடுக்கப்பட்டன. இவை குறித்த செய்திகள் சங்கத் தமிழ் இலக்கியத்தில் உள்ளன. இத்தகைய ஈமச்சின்னங்கள் தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், சானூர், கொடுமணல் உட்பட பல ஊர்களில் காணப்படுகின்றன. சங்ககாலத்தில் போரில் இறந்துபட்ட வீரர்களுக்கு நடுகற்கல் எடுக்கப்பட்டன. இவை பெருங்கற்சின்னங்களின் தொடர்ச்சியான வழக்கத்தைக் குறிக்கின்றன.

  இடைக்காலத்தில் போரில் இறந்தவர்களுக்கு நடுகற்கள் எடுக்கப்பட்டன. இறந்த சில அரசர்களுக்காகப் பள்ளிப்படை என்ற கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.

  தமிழகத்தில் இஸ்லாமியரின் கல்லறைகளும் கல்லறைக் கல்வெட்டுகளும் கடற்கரைப் பகுதியில் காணப்படுகின்றன. காயல் பட்டிணம், வாட்டாணம். டச்சுக்காரர் ஆங்கிலேயர் மற்றும் பிற மேலைநாட்டவர் கல்லறைகளும் தமிழகத்தில் பரவலாகக் காணப்படுகின்றன. இவை சென்னை, பழவேற்காடு, நாகப்பட்டினம், தஞ்சாவூர், வல்லம் உட்பட பல ஊர்களில் காணப்படுகின்றன.

  இறந்தவர் உடல் ஒரு புதைகுழியில் முழுமையாகப் புதைக்கப்பட்டால் அது முதல் நிலை ஈமச்சின்னம் (Primary bonial) எனப்படும். இறந்தவரின் சில எலும்புகள் மட்டும் எடுத்து புதைக்கப்பட்டால் அது இரண்டாம் நிலை ஈமச்சின்னம் (Secondary bonial) எனப்படும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:08:55(இந்திய நேரம்)